நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாரிசும் பிரபல நடிகையுமான ராதிகாவுக்கு இன்று பிறந்த நாள்




ராதிகா பர்த் டே டுடே💐


நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் வாரிசும் பிரபல நடிகையுமான ராதிகாவுக்கு இன்று பிறந்த நாள். இன்றைய பிறந்த நாள் அவருக்கு சந்தோஷமான நாளாக இருக்க வேண்டும் என்று அவரை ஆந்தை சினிமா அப்டேட்ஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.


இலங்கையில் கொழும்பு நகரில் 1963 ஆகத்து 21 இல் நடிகர் எம். ஆர். ராதாவுக்கும் , அவரின் மூன்றாம் மனைவி கீதாவிற்கும் பிறந்தவர் ராதிகா. நடிகை நிரோஷா , திரைப்படத் தயாரிப்பாளர் ராதா மோகன் ஆகியோர் இவருடன் உடன்பிறந்தவர்கள் ஆவர். நடிகரும் அரசியல்வாதியுமான ராதாரவி இவருடைய உடன்பிறவா சகோதரர் ஆவார்.


ஆனால் இப்போது கலையரசி .. இந்த பட்டத்துக்கு முழுக்க முழுக்கப் பொருத்தமானவர் ராதிகா மட்டுமே. அந்த அளவுக்கு அவரது நடிப்புக்கு இணையான ஒரு நடிகையை இதுவரை காண முடியவில்லை. ஆம் 1978ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் ‘கிழக்கே போகும் ரயில்’. இப்படத்தில்தான் முதன்முதலில் நடிகை ராதிகா பாஞ்சாலி என்ற நாமகரணத்தில் நாயகியாக அறிமுகமானார். 


இது வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு, இந்தி என நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நடித்துள்ள  ராதிகாவின் நடிப்பை இன்றைய தலைமுறையினர் நிச்சயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். வெடித்துச் சிரிக்கும் அவரின் பிரத்யேகச் சிரிப்பு, கிளிசரின் போடாமலே அழுகையை வரவைக்கும் கதாபாத்திரமாகவே மாறிப்போகும் `மெத்தட் ஆக்டிங்', டப்பிங்கில் சொந்தக்குரல் எனச் சொல்லிக்கொண்டே போகலாம்.


கொழும்பு நகரில் பிறந்த ராதிகா, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்றாலும் தன் பதின்ம வயது வரை தான் திரைத்துறைக்கு வருவோம் என்ற சிந்தனை கொஞ்சமும் இல்லாமல்தான் வளர்ந்துள்ளார். வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு வந்த பதின்ம வயது பப்ளி ராதிகா, பாரதிராஜாவின் கண்களில்பட அவரது அடுத்த படத்தின் கரிசல் நில நாயகியாக வெள்ளித் திரையில் அறிமுகமானார். விவரமறியாத 16 வயதில் முதல் படத்தில் நடிக்க வந்ததால் வாய்ப்பு எளிதில் கிடைத்ததாய்த் தோன்றலாம். நடிகவேளின் புதல்வி என்றாலும் மோதிரக்கையால் குட்டாமல் சாக்லேட் கொடுத்தேதான் தனக்கு வேண்டிய நடிப்பை வாங்கினாராம் இயக்குநர் இமயம். இடையில் பலமுறை, `நடிப்பும் வேணாம் ஒண்ணும் வேணாம் நான் போறேன்' என்று ஈக் காட்டிய ராதிகாவை தாஜா பண்ணி கேமரா முன் கொண்டுவர சாக்லேட்கள் நிறைய தேவைப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர் ராஜ்கண்ணுவின் பட்ஜெட்டில் சாக்லேட் செலவும் இடம்பிடித்தது தமிழ் சினிமா வரலாறு.


தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கான பொதுவான இலக்கணங்களான நடிப்பு, நடனம், நிறம், முக பாவனைகள் என எதையும் பூர்த்தி செய்யாமல், மாநிற பப்ளி நாயகியாக அறிமுகமான ராதிகா, பின்னாட்களில் தன் தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றதோடு, தமிழ் சினிமாவில் ஓர் ஆளுமையாக உருவெடுத்ததும் தனி வரலாறு.


அறிமுகமான அடுத்த வருடமே தமிழில் ராதிகா நடித்த படங்கள் எத்தனை தெரியுமா, 5.


அதில் முக்கியமான படம் சுதாகரோடு நடித்த `நிறம் மாறாத பூக்கள்'! காதல் தோல்வியில் வாடும் ஒரு பெண்ணின் வலியைப் பிரதிபலித்திருப்பார். இந்தப் படத்துக்குப் பிறகு ராதிகா தென்னிந்திய மொழிகளில் பிஸியாக பறந்து நடிக்க ஆரம்பித்தார். மொழிப்பிரச்னை இல்லாத, எல்லாவிதமான கேரக்டரிலும் நடிக்கும் நடிகை என்று பெயரெடுத்தார்.


`கிழக்கே போகும் ரயில்' படத்தில் உதவி இயக்குநராக இருந்த பாக்யராஜ் பேனாவின் படைப்பூக்கத்துக்கு எல்லைகள் இல்லை. அவர் எழுதிய கதைகளில் நடிகைகளை நடிக்க வைத்த காலம்போய் ராதிகாவை மனதில் வைத்து பாக்யராஜ் கதை எழுத ஆரம்பித்ததாய் அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். பாக்யராஜின் குறும்பை சமாளித்து திரையில் தனித்துத் தெரிய தனித்திறமை வேண்டும். அது ராதிகாவின் ரத்தத்திலேயே ஊறியிருக்கிறது. `பாமா ருக்மணி', `குமரிப்பெண்ணின் உள்ளத்திலே', `விடியும்வரை காத்திரு', `தாவணிக் கனவுகள்' என பாக்யராஜுடன் சேர்ந்து நடித்த அத்தனை படங்களிலும் செம ஸ்க்ரீன் பிரசன்ஸ்... செம கெமிஸ்ட்ரி.


குறிப்பாக `இன்று போய் நாளை வா'... வாவ் ராதிகா! படம் நெடுக சரவெடி வெடித்தாலும் இந்த ஒரு காட்சி போதுமானதாக இருக்கும். குடுகுடுப்பைக்காரரை செட்டப் செய்து போலியாகக் குறிசொல்ல வைத்து, காலையில் 7 மணிக்கு கறுப்புச் சட்டையோடு பாக்யராஜ் தன் வீட்டின் முன் நிற்பார். ராதிகாவும் அவரை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் அவர் வீட்டின் முன் நிற்பார். வாண்டடாக பாக்யராஜே போய் என்னவென்று விஷயத்தைக் கேட்டு பல்பு வாங்குவார்.


``இல்லை சார்... வெள்ளை சட்டையோடதான் என் மாப்பிள்ளை வருவாராம்!" என்றதும் கறுப்பு சட்டை போட்ட பாக்யராஜின் ரியாக்‌ஷன் அல்டிமேட் என்றால், கடைசிவரை, ``வெள்ளைச் சட்டை கறுப்புப் பேன்ட்தான் குடுகுடுப்பைக்காரர் சொன்னார்" எனச்சொல்லி தன் வீட்டுக்கு வெள்ளைச் சட்டையோடு வந்தவரிடம் வலியப்போய்ப் பேசுவார் ராதிகா. ``பழனிச்சாமி சார், என் மாப்பிள்ளை நல்லா இருக்காருல்ல?" என்று சொன்னதும் பாக்யராஜ் கோபமாய்க் கிளம்பிச் சென்றதும் சிரிப்பார் ராதிகா. `பாவம்... ரொம்ப கோவிச்சுக்கிட்டாரு போலிருக்கு' என்று குறும்புத்தனத்தையும், காதலையும் ஒரு சிரிப்பாலேயே ரசிகனுக்குக் கடத்தியிருப்பார். அது ராதிகா டச்!


இயக்குநர் மகேந்திரனின் `மெட்டி' படத்தில் இன்னும் கொஞ்சம் மெச்சூர்டான நடிப்பைக் காட்டி மிரட்டியிருப்பார். நம் எல்லோருக்கும் மெட்டி என்றதும் `மெட்டி ஒலி காற்றோடு' பாட்டுதான் ஞாபகத்துக்கு வரும். ஆனால், ஜென்சி பாடிய `கல்யாணம் என்னை முடிக்க...' என்ற பாடலைப் பார்த்தவர்கள் ராதிகாவின் க்யூட் எக்ஸ்பிரஷன்களை மறக்கவே முடியாது. பெண்ணை வலிமையான பாலினமாகக் கற்பனை செய்து மகேந்திரன் உருவாக்கிய அந்த கலாட்டா கல்யாணப் பாடலில் குறும்பு ராதிகா, இன்றைய ஆயிரம் ஜோதிகா!


சரிவர தமிழ் தெரியாமல் அறிமுகமான அதே ராதிகாதான், முதல் மரியாதை ராதா உள்பட பல நாயகிகளுக்கும் டப் செய்துள்ளார் என்பது ராதிகா பற்றிய மேலும் ஒரு சுவாரஸ்ய செய்தி.


இந்தியிலும் கலக்கியவர் ராதிகா. முதல் படமே தமிழின் ஹிட் ரீமேக்தான். மணிவண்ணன் இயக்கிய `கோபுரங்கள் சாய்வதில்லை' படத்தை இந்தியில் `நசீப் அப்னா அப்னா'வாக மாற்றம் செய்யப்பட்டபோது, ரிஷி கபூருக்கு ஜோடியாக, தமிழில் சுஹாசினி நடித்த ரோலில் அசத்தினார். ராதிகாவின் ரோல் அப்போது பாலிவுட்டில் பரவலாகப் பேசப்பட்டது. தமிழ்ப் படங்களுக்கு கால்ஷீட் நிறைய கொடுத்திருந்ததால் இந்தி சினிமாவின் வாய்ப்புகளைத் தவிர்க்க வேண்டிய சூழல். இல்லையென்றால் இந்தியிலும் ஒரு கலக்கு கலக்கியிருப்பார்! ஆனாலும், தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை அவர் தவறவிட்டதே இல்லை.


முன்னணி நடிகைக்கான தன் காலம் சினிமாவில் முடிந்தாலும், நல்ல குணச்சித்திரப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ராதிகா, சின்னத்திரையில் கால் பதித்து செய்தது மேலும் ஒரு தரமான சம்பவம்! இத்தனை ஆண்டுகள் கழிந்தும் இன்னமும் ஃபீல்டில் நிலைத்து நிற்கும் ராதிகாவின் பங்களிப்பு மேலும் தொடரவும் ஆரோக்கிய வாழ்வு நீடிக்கவும்  ஆந்தை சினிமா அப்டேட்ஸ் குழ்  வாழ்த்துகிறது🤝👍💐


 🎬From The Desk of கட்டிங் கண்ணையா!🔥

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,