பருப்பு வகைகள் விலை 30 சதவீதம் அதிகரிப்பு:

 


*வட மாநிலங்களில் மழை, விளைச்சல் பாதிப்பால் வரத்து சரிவு பருப்பு வகைகள் விலை 30 சதவீதம் அதிகரிப்பு: மிளகாய் வற்றல் விலையும் கூடியது*


சேலம்: வட மாநிலங்களில் பெய்த தொடர் மழையாலும், விளைச்சல் பாதிப்பாலும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்பட பல மளிகை பொருட்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக மளிகை வியாபாரிகள் தெரிவித்தனர். இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் துவரை, உளுந்து, கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, தட்டைப்பயறு, சோம்பு, சீரகம், கசகசா உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. கேரளா, ஏற்காடு, கொல்லிமலையில் மிளகும், மகாராஷ்டிரா, கர்நாடகாவில் பெரிய வெங்காயமும், ராஜஸ்தான் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பூண்டும் சாகுபடி செய்யப்படுகிறது.


இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் தானிய வகைகள் இந்தியா முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்த மூன்று மாதமாக வட மாநிலங்களில் பெய்து வரும் மழையால் அங்கு தானியங்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கிருந்து வழக்கமாக வரவேண்டிய தானியங்களின் வரத்து சரிந்துள்ளது. இதனால் பல உணவுப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இது குறித்து சேலம் மளிகை வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் உணவுப்பொருட்களில் 60 சதவீதம் வடமாநிலங்கள் பூர்த்தி செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் வாரத்தில் வடமாநிலங்களில் இருந்து தானிய வகைகள் விற்பனைக்கு வரும்.


 இப்பொருட்கள் ஏப்ரல் கடைசி வாரம் வரை வரத்து இருக்கும். இந்நிலையில் கடந்த மூன்று மாதமாக வடமாநிலங்களில் மழை கொட்டி வருகிறது. இதனால் அங்கு சாகுபடி செய்யப்பட்டிருந்த பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மிளகாய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தமிழகத்தில் விருதுநகர், கொளத்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் விளைச்சல் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக கடந்த மாதம் ரூ.200க்கு விற்ற ஒரு கிலோ மிளகாய் வற்றல் 50 சதவீதம் அதிகரித்து ரூ.320 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கொண்டைக்கடலை, பீன்ஸ் உள்பட பல பொருட்களின் விலை 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.


கடந்த மாதம் ரூ.95க்கு விற்ற ஒரு கிலோ துவரம் பருப்பு தற்போது ரூ.105 என்றும், ரூ.100க்கு விற்ற உளுத்தம் பருப்பு ரூ.125 என்றும், ரூ.80க்கு விற்ற கொண்டைக்கடலை ரூ.100 என்றும், ரூ.100க்கு விற்ற பீன்ஸ் ரூ.120 என்றும், ரூ.75க்கு விற்ற பட்டாணி பருப்பு ரூ.80 என்றும், ரூ.90க்கு விற்ற பச்சைப்பயறு ரூ.95 என்றும் விலை அதிகரித்துள்ளது. சீரகம் கிலோ ரூ.320, சோம்பு ரூ.280, கசகசா ரூ.1300, வெந்தயம் ரூ.120, மிளகு ரூ.500 என விற்கப்படுகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகை வரை இதே விலையில் விற்கும். தீபாவளிக்குப்பிறகு அனைத்து பொருட்களின் விலை குறைய தொடங்கும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்....Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,