பாரதிராஜாவின் '16 வயதினிலேக்கு 45
பாரதிராஜாவின் '16 வயதினிலே' வெளியாகி 45 ஆண்டுகள் ஆகின்றன. 1977ல் இதே நாளில் தான் இந்தப் படம் வெளியாகி, தமிழ் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதற்கு முன் ஸ்டூடியோக்களுக்குள்ளும், நாடக தொனியிலும் எடுக்கப்பட்டு வந்த படங்களில் இருந்து மாறுபட்டதாக இந்தப் படம் இருந்தது.
கிராமத்து மண்ணையும், சப்பாணி, பரட்டை, மயிலு எளிய மனிதர்களின் வாழ்க்கையை இயல்பு மாறாமல் பதிவு செய்து '16 வயதினிலே' மூலம் தமிழ் சினிமா உலகில் புது டிரெண்ட்டை ஏற்படுத்தினார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. விகடனில் அதிக மதிப்பெண் (அறுபத்தி இரண்டரை மார்க்) வாங்கிய படம் இதுதான். இன்னொரு ஆச்சரியம், அதில் நடித்த சம்பளம், இன்று கனவிலும் நினைக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. கமலுக்கு சம்பளம் 29 ஆயிரம் ரூபாய், ஶ்ரீதேவிக்கு 9 ஆயிரம் ரூபாய், ரஜினிக்கு 3 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 5 லட்சத்தில் தயாரித்து முடிக்கப்பட்ட படம்தான் '16 வயதினிலே'. சினிமாவில் 45 ஆண்டுகள் காணும் பாரதிராஜா பற்றிய சில சுவாரஸ்யத் துளிகள் இங்கே!
16 வயதினிலே16 வயதினிலே
* '16 வயதினிலேதான் இயக்குநர் இமயத்தின் முதல் படம். இது அவரது இரண்டாவது படமாக ஆகியிருக்க வேண்டியது. ஏனென்றால் கதாசிரியர் செல்வராஜின் கதையில் 'சொந்த வீடு' என்ற படத்தை இயக்கவிருந்தார். முத்துராமன் (நவரச நாயகன் கார்த்திக்கின் தந்தை), ஜெயலலிதா இருவரும்தான் நடிக்கவிருந்தார்கள். ஜெயலிதாவிடம் கதையைச் சொல்லி, 28 நாட்கள் கால்ஷீட்டும் வாங்கிவிட்டார். கே.ஆர்.ஜி.தான் தயாரிப்பாளர். ஆனால், படப்பிடிப்பு கிளம்பும் சமயத்தில் ஜெயலலிதாவிடம் இவரைப் பற்றி 'புது இயக்குநர் அவர்.. அவருக்கு சரியா படமெடுக்கத் தெரியுமானு கூட தெரியல' என எதோதோ சொல்லி பற்றவைத்ததில்.. 'சொந்த வீடு' டேக் ஆஃப் ஆகாமல் போனது. பின்னாளில் அந்த கதை தான் ஏவிஎம். தயாரிப்பில் ரேவதி நடிப்பில் 'புதுமைப்பெண்' ஆக மலர்ந்தது.
முதல் மரியாதைமுதல் மரியாதை
* தான் அறிமுகப்படுத்திய ஹீரோக்களில் 'காதல் ஓவியம்' கண்ணனை பெரிதும் எதிர்பார்த்தார். அந்தப் படம் மக்களிடம் வரவேற்பை அள்ளும், உச்சி முகர்ந்து கொண்டாடுவார்கள் என நினைத்தார். ஆனால், 'காதல் ஓவியம்' படு பிளாஃப். அந்த படத்தை பற்றி, அப்போது இன்னொரு விஷயமும் சொல்வார்கள். 'ரசனையான படத்தை கொடுத்தேன். நீங்க அதை கொண்டாடல..' என்ற கோபத்தில் தான் அடுத்து அவர் 'வாலிபமே வா வா'வை இயக்கினார் என்பார்கள். ஆனால், 'வாலிபமே வா வா' செம ஹிட் ஆனது தனிக்கதை.
*பாரதிராஜா என்ற பல்கலைக்கழகத்தில் இருந்து பாக்யராஜ், மணிவண்ணன், சீமான், சி.ரங்கநாதன், சித்ராலட்சுமணன், மனோபாலா, பொன்வண்ணன், 'சலீம்' நிர்மல்குமார் என பல இயக்குநர்கள் உருவாகியிருக்கிறார்கள். ஆனால் கன்னட இயக்குநர் புட்டண்ணா கனகல், மலையாள இயக்குநர் கிருஷ்ணன் நாயர், அவினாசிமணி, சங்கர ஐயர் என பலரிடமும் வித்தைகள் கற்று தேர்ந்தவர் பாரதிராஜா.
* ஒரு படத்திற்கான கதையும், அதன் ஜீவனும் ரெடியான பிறகு நடிகர்களை தேர்ந்தெடுப்பார். படப்பிடிப்பு கிளம்ப ஆரம்பித்ததில் இருந்து அந்த கதையிலேயே மூழ்கி விடுவார். பேனா, பேப்பரில் எழுதிக்கொண்டு படப்பிடிப்பு கிளம்புவதில்லை. அந்த கதைக்கான மூட், அன்று ஸ்பாட்டில் என்ன தோணுகிறதோ அதையே எழுதிக்கொண்டு படமாக்குவார். இதுதான் அவரது ஒர்க்கிங் ஸ்டைல்.
* அவர் சென்னையில் இருந்தாலும், மனசு முழுக்க தேனியில் தான் இருக்கும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தேனி பறந்துவிடுவார். சொந்த பந்தங்களின் வீடுகளுக்கு சென்று, உறவுகளை வளர்ப்பார். அதேபோல், அப்போதிருந்து இப்போது வரை பங்க்சுவாலிட்டியில் பர்ஃபெக்ட்டாக இருப்பார். நடிக்க வந்த பிறகும் அதை கடைபிடிக்கிறார். காலை ஆறு மணிக்கு ஷாட் என்றால், சரியாக அதே நேரத்தில் செட்டில் இருப்பார். 'ரெட்டச்சுழி'யில் அவர் தலையீட்டால் ஏற்பட்ட ரிசல்ட்டுக்கு பிறகு, மற்ற இயக்குநரின் டைரக்ஷனில் தலையிடுவதும் இல்லை.
* யூ நோ ஒன் திங்.. 'முதல் மரியாதை' கால கட்டங்களின் போது அமெரிக்கா அரசாங்கம், இந்திய அளவில் சிலரை அமெரிக்காவிற்கு அழைத்து கவுரவித்தது. திரை மொழி பற்றி பேச, பாரதிராஜாவும் அழைக்கப்பட்டிருந்தார். அங்கே அவர் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசி, கைத்தட்டலையும் வாங்கினார். அதன்பிறகு சென்னை திரும்பியவர் தன் பேச்சின் இடை இடையே ஆங்கிலத்தை பயன்படுத்த ஆரம்பித்தார். யூ பீலிவ் ஆர் நாட்.. எ மிராக்கிள் ஹேப்பன் திஸ் வே!
* எப்போதும் சினிமாவைப் பற்றியே சிந்திப்பவர். அதற்கு உதாரணமாய் ஒரு சம்பவம். இப்போது அவர் சில படங்களில் நடித்து வந்தாலும், வெப்சீரீஸ் ஒன்றையும் இயக்கவிருக்கிறார். வழக்கம் போல், கதாசிரியர் ஒருவரிடம் இருந்து கதை ரெடி செய்துவிட்டார். அவரும் இவரது உதவியாளர் தான். இந்நிலையில் அவர் சமீபத்தில் மருத்துவமனையில் இருந்தார் அல்லவா..? அப்போது அவரை காண, இயக்குநர் சேரனும், அந்த வெப்சீரீஸ் கதாசிரியரும் வந்திருந்தார்கள். இருவரையும் பார்த்தவர், உடனே படுக்கையில் இருந்து எழுந்து அந்த கதாசிரியரிடம், 'சேரனுக்கு அந்த வெப்சீரீஸ் கதையை சொல்லுங்க.' என்றதுடன்.. 'இல்லை இல்லையே, நானே சொல்றேன்.' என முழுக்கதையையும் சேரனிடம் சொல்லியிருக்கிறார் பாரதிராஜா. நெகிழ்ந்திருக்கிறார் சேரன்.
நன்றி: சினிமா விகடன்
Comments