சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?

 


நடிகர் திலகம் பற்றி நாட்டிய பேரொளி பத்மினி - சிவாஜியுடன் நீங்கள் அதிகம் இணைந்து நடித்ததற்குக் காரணம், உங்களுக்கும் அவருக்கும் இருந்த நட்பா, இல்லை உங்கள் இருவரின் நடிப்பாற்றலா?

இந்தக் கேள்விக்கான பதிலை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல நேர்காணல்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் பத்மினி. இனி வருவது அவற்றின் தொகுப்பு. இதில் ஒவ்வொரு சொல்லும் பப்பிக்கே சொந்தம்.
‘நான் மறக்கமுடியாத ஒருவர் சிவாஜி. கணேஷ் நடிகராக மட்டுமின்றி என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ரொம்பவே அக்கறையானவர். பப்பியம்மா என்றுதான் என்னை அழைப்பார். உற்சாகமான மூடில் இருந்தால், பேப் என்று அழைப்பார். நான் நன்றாகத் தமிழ் பேச ஆரம்பித்ததே சிவாஜியால்தான்.
1959-ல் நெப்டியூன் ஸ்டுடியோவில் தங்கப்பதுமை படம் எடுத்தார்கள். ஏ.எஸ்.ஏ.சாமி டைரக்டர். அதில் வரும் ‘ஈடற்றப் பத்தினியின் இன்பத்தைக் கொன்றவன் நான்...’ என்ற பாடல், அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. அந்தப் பாட்டினூடே நான் கண் பறிக்கப்பட்ட நிலையில் இருக்கும் என் கணவரைப் பார்த்து, ‘அத்தான் உங்கள் கண்கள் எங்கே அத்தான்?’ என்று வீறிட வேண்டும்.
காட்சி விளக்கப்பட்டதும், நான் ரிகர்சல் எதுவுமின்றி கதறி அழுது நடித்தேன். அப்படி ஒரு சம்பவம் எனக்கே நேர்ந்தது போலான நடிப்புக்குள் நான் ஆழ்ந்துபோனேன். யதார்த்த நிலைக்கு வர சில விநாடிகள் பிடித்தது. சீன் முடிந்ததும், ‘நடிச்ச மாதிரியே தெரியல. ரொம்ப இயல்பா இருந்தது பப்பி’ என்று சிவாஜி பாராட்டினார்.
சிவாஜியிடமிருந்து இலேசில் பாராட்டு வாங்கிவிட முடியாது. அவரே பாராட்டிய பிறகு அதற்கு ஈடான பாராட்டு வேறு எதுவும் இருக்கமுடியாது.
அவருடன் நடிப்பதே ஒரு தனியான அனுபவம். சிவாஜி ஒரு பிறவி நடிகர்.
கணேஷைப்போல ஒரு நொடியில் முகபாவங்களை மாற்றிக்கொள்ளவோ, உணர்ச்சியைப் பொழிந்து வசனம் பேசவோ யாராலும் முடியாது. நான் ஒரு நல்ல நடிகை என்று பெயர் வாங்கியதற்கு, சிவாஜியுடன் நடித்த படங்களில் பெற்ற பயிற்சியே காரணம்.
‘நான் நாடகத்தில் நடித்துத் தேர்ச்சியுற்று முன்னுக்கு வந்தவன். நீ மேடையில் பாவனைகளைக் காட்டக் கற்று பெயர் பெற்றவள். உனக்குச் சொல்லிக் கொடுப்பதில் எனக்கு என்ன சிரமம்?’ என்பார். நான் நடிக்க வேண்டியவற்றை அவரே நடித்தும் காட்டுவார். எங்களுக்குள் நடிப்பில் ஒரு போட்டிகூட இருக்கும். என்னால் முடிந்தவரையில் அவருக்கு ஈடு கொடுத்திருக்கிறேன்.
பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள், சிவாஜி படங்களில் அதிகம் இருந்தது. மேலும் நடிப்புத் தொழிலில் என் தாயார் சொன்னபடிதான் பட ஒப்பந்தங்கள் அமையும். நடிகர் திலகத்தோடு நாற்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் எனக்குப் பழக்கமானவர். இந்த இரண்டையுமே பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் நினைத்துக்கொள்வேன்.
சம்பூர்ண இராமாயணம் ஷூட்டிங்குக்காக நாங்கள் ஒகேனக்கல் போயிருந்தோம். இதில் சிவாஜி பரதனாக நடித்ததை ராஜாஜியே பார்த்துப் பாராட்டி இருக்கிறார். கணேஷுக்கு வேட்டை என்றால் ரொம்பப் பிரியம். எங்கேயாவது ஒரு சிறு சான்ஸ் கிடைத்தால் கிளம்பிவிடுவார். காடுகள் நிறைந்த மலைப்பாங்கான இடமான ஒகேனக்கல்லில் நாங்கள் விடுதியில் தங்கி இருந்தோம். இரவு பன்னிரெண்டு மணி இருக்கும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. எனக்குப் பயமாகப் போயிற்று. எழுந்து மெதுவாகக் கதவைத் திறந்தேன். வெளியே சிவாஜி நின்று கொண்டிருந்தார்.
‘என்ன விஷயம்?’ என்று கேட்டேன். ‘பப்பி! உனக்கு ஒரு ப்ரஸண்ட்’ என்று தன் கையில் இருந்த பையில் கையை விட்டார். வெளியே வந்தது ஒரு அழகான சிறு முயல் குட்டி!
சிவாஜியோடு நடிப்பதற்கு அவர் மீது செலுத்தும் அன்பும் நட்பும் மட்டும் போதாது. அவரோடு ஈடுகொடுத்து நடிக்க வேண்டும். அது அவ்வளவு எளிதல்ல. ‘இதைவிடச் சிறப்பாக உன்னால் நடிக்க முடியும். உன்னுடைய திறமை எனக்கு நன்றாகத் தெரியும் என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, பிரமாதமாக நடிக்க வைப்பார். நான் எப்படி நடித்தால் நன்றாக வரும். இன்னும் அதை எவ்விதம் வளர்த்துக்கொள்வது என்பதெல்லாம் அவர்தான் சொல்லித் தருவார். இல்லாவிட்டால், அன்று என் வயதுக்கு மீறிய வேடங்களில் என்னால் நடிகர் திலகத்தோடு நடித்திருக்க முடியுமா?
சிவாஜி ரொம்ப பங்க்சுவலாக, காலை ஏழு மணிக்கெல்லாம் செட்டில் நடிக்க வந்துவிடுவார். என்னைப் போன்ற ஹீரோயின்கள், மேக்அப் செய்துகொண்டு வர நேரமாகும். சில சமயம், நான் பத்து மணிக்குத்தான் தயாராக முடியும். அதுவரைக்கும் கணேஷ் பொறுமையாக இருப்பார். இதுவே எனக்கு வெட்கமாகக்கூடப் போய்விடும்.
சிவாஜி, சேர்ந்தாற்போல் ஒரு டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருப்பார். அவற்றில் அதிகமாக அவரோடு நானும் பங்கு பெறுவேன். ஒரு சினிமாவுக்கும் இன்னொரு சினிமாவுக்கும் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல், கணேசன் வசனம் பேசுவதையும், நடிப்பை மாற்றிக் கொள்வதையும் பார்க்கும்போது எனக்குப் பிரமிப்பாக இருக்கும்! உலகத்திலேயே மிகச்சிறந்த கலைஞர் நடிகர் திலகம். அதைப்பற்றி இரண்டு கருத்துகள் இருக்க முடியாது.
கெய்ரோவில் நடந்த ஆசிய-ஆப்பிரிக்கத் திரைப்பட விழாவுக்கு வீரபாண்டிய கட்டபொம்மன் படம் அனுப்பிவைக்கப்பட்டது. அதையொட்டி, சிவாஜியுடன் நானும் ராகினியும் அம்மாவும் போயிருந்தோம்.
‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒமர் ஷெரீப்போல் உலகின் பல பாகங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். சிறந்த நடிகர் என்ற மரியாதை யாருக்குக் கிடைக்கப் போகிறதோ...? என எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள். பரிசு, சிவாஜி கணேசனுக்குத்தான் என்று அறிவிக்கப்பட்டபோது, எங்களுக்கெல்லாம் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சிவாஜி கணேசன் அந்த சந்தோஷத்தைத் தாங்கமுடியாமல் உருகிப்போனார். என்னால் இந்தியாவுக்கு இவ்வளவு பெரிய கௌரவமா... என் உடம்பெல்லாம் சிலிர்க்குது’ என்று உணர்ச்சிவசப்பட்டார்’.
சிவாஜியிடம் நான் கற்றுக்கொண்ட விஷயங்கள் பல. பொறுமையுடன் அதிக தடவை சொல்லிக் கொடுப்பார். அதில் திருப்தி அடையும் வரையில் விடமாட்டார். நடிப்பு நன்றாக இருந்தால் உடனே பாராட்டுவார். சரியாக இல்லையென்றால் டைரக்டரிடம் சொல்லி, மீண்டும் எடுக்கச் சொல்வார். சிவாஜியால் நடிக்க முடியாத ரோல் எதுவும் கிடையாது. ஆனால் அதைச் செய்வதற்கு முன் அவர் பர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று முழு முயற்சி எடுத்துக் கொள்வார்.
சென்னைக்கு எப்போது வந்தாலும், நான் சிவாஜியைச் சந்திப்பது வழக்கம். ஒரு நாளாவது அவர் வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுவிட்டு வருவேன். 1979-ல், டிசம்பர் சீசனில் மியூசிக் அகாடமியில் என்னுடைய ராமாயணம் நாட்டிய நாடகம் இரண்டு நாள்கள் நடந்தது. நிகழ்ச்சிக்கு மனைவி கமலா அம்மாளோடு அவர் வந்திருந்தார். ஒரு ஆள் உயரத்துக்கு ரொம்பப் பெரிய மாலை ஒன்றைத் தூக்க முடியாமல் எடுத்துக் கொண்டு வந்து, ஸ்டேஜில் என்னை கௌரவித்துப் போட்டார். அவர் வரப்போவது எனக்குகூடத் தெரியாது. ப்ளசன்ட் சர்ப்ரைஸ் ஆக இருக்க வேண்டும் என்று யாருக்கும் சொல்லாமலே வந்தாராம். பத்மினி இப்ப நடிக்கிறதுகூட இல்லையே என சிலர் கேட்டபோது, ‘நடிக்காவிட்டால் என்ன? பப்பி ஒரு கிரேட் ஆக்ட்ரஸ். அதுக்காகவே மரியாதை செய்யணும்’ என்று சிவாஜி சொன்னதாகக் கூறினார்கள்.
- சுகுமார் கான்

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,