உலக வெறி நாய்க்கடி நோய் நாளின்று!

 


உலக வெறி நாய்க்கடி நோய் நாளின்று!

வெறிநாய்க்கடி நோயை பரவாமல் தடுக்கவும், கட்டுப்படுத்த்தவும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 28-ஆம் நாள் `உலக வெறிநாய்க்கடி நோய் தினமாக' (ரேபீஸ் டே) கடைப்பிடிக்கப்படுகிறது. ரேபிஸ் நோய்க்குத் தடுப்பு மருந்துக் கண்டுபிடித்த லூயி பாஸ்டர் மறைந்த தினம் செப்டம்பர் 28. இவரின் நினைவாக, 2007 - ம் ஆண்டில் இருந்து சர்வதேச ரேபிஸ் விழிப்பு உணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.\
உலகில் 'குணப்படுத்தவே முடியாது; நோய் வந்துவிட்டால் மரணம் நிச்சயம்' என்று கவலைப்படுவதற்கும் ஒரு நோய் இருக்கிறது என்றால், அது வெறிநாய்க்கடியால் வரும் 'ரேபீஸ்'தான். அதனால்தான்அப்படிச்சொல்கிறார்கள்!
எது வெறிநாய்க்கடி நோய்?
ரேபீஸ் எனும் வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது வெறிநாய்க்கடி (Rabies) நோய். நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலரும் நினைக்கிறார்கள். அப்படியில்லை. இந்தக் கிருமிகள் நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்ற பாலுாட்டிகள் பலவற்றில் வசிக்கும். இவற்றில் ரேபீஸ் கிருமி உள்ள எந்தவொரு பாலுாட்டி மனிதரைக் கடித்தாலும் வெறிநாய்க்கடிநோய் வரும். இந்தியாவில், முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவிகிதம் இந்த நோய் ஏற்படுகிறது. அதனால்தான் இதனை 'வெறிநாய்க்கடி நோய்' என்கிறோம்.
வெறிநாய்க்கடி நோய் எப்படி வருகிறது?
இந்த நோயுள்ள நாயின் உமிழ்நீரில் ரேபீஸ் வைரஸ்கள் வாழும். இந்த நாய் மனிதரைக் கடிக்கும்போது ஏற்படும் காயத்தின் வழியாக, இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும். அங்குள்ள தசை இழைகளில் பன்மடங்கு பெருகும். பிறகு நரம்புகள் வழியாகவும், முதுகுத் தண்டுவடத்தின் வழியாகவும் மூளையை அடைந்து, மூளைத் திசுக்களை அழித்து, வெறிநாய்க்கடி நோயை உண்டாக்கும். இது தவிர, சிறிய அளவில் வெறிநாய் பிராண்டினாலும், திறந்த உடல் காயங்களில் வெறிநாய் நாவினால் தீண்டினாலும், அதன் உமிழ்நீர் பட்டாலும் இந்த நோய் வரலாம்.
அறிகுறிகள் என்ன?
பொதுவாக வெறிநாய் கடித்த 5 நாட்களுக்கு மேல்இந்த நோயின் அறிகுறிகள் தெரியத் தொடங்கும். சிலருக்கு 90 நாட்களுக்குப் பிறகுகூட அறிகுறிகள் தோன்றக்கூடும். முதலில் நாய் கடித்த இடத்தில் வலி ஏற்படும். இதைத் தொடர்ந்து, காய்ச்சல், வாந்தி வரும். உணவு சாப்பிட முடியாது. தண்ணீர் குடிக்க முடியாது. இந்த நோய் உள்ளவர்கள் தண்ணீரைக் கண்டாலே பயப்படுவார்கள்.
காரணம், தண்ணீரைக் கண்டதும் தொண்டையில் உள்ள விழுங்கு தசைகள் இறுக்கமடைந்து, சுவாசம் நிற்கின்ற உணர்வை ஏற்படுத்துவதால், 'எங்கே உயிர் போய்விடுமோ' என்று பயந்து, இவர்கள் தண்ணீரைக் குடிக்கமாட்டார்கள். இவர்கள் உடலில் அதிக வெளிச்சம் பட்டால் அல்லது முகத்தில் காற்று பட்டால் உடல் நடுங்கும். எந்நேரமும் அமைதியின்றிக் காணப்படுவார்கள்.
இதற்கு என்ன முதலுதவி செய்வது ?
குறைந்தது 15 நிமிடங்களுக்குக் காயத்தை சோப்புத் தண்ணீரால் கழுவ வேண்டும். வேகமாக விழுகின்ற குழாய் தண்ணீரில் கழுவுவது மிகவும் நல்லது. காயத்தின்மீது ஏதாவது ஒரு 'ஆண்டிசெப்டிக்'மருந்தைத் தடவலாம். ( எ-டு : பொவிடின் அயோடின், ஸ்பிரிட், டெட்டால், சாவ்லான்).
முடிந்தவரை காயத்துக்குக் கட்டுப் போடுவதையும், தையல் போடுவதையும் தவிர்க்க வேண்டும். தையல் போடுமளவுக்குக் காயம் மிகப் பெரிதாக இருந்தால், காயத்திலும் காயத்தைச் சுற்றிலும் 'ரேபீஸ் தடுப்புப் புரதம்' (Rabies immunoglobulin ) எனும் ஊசியைப்போட்டபிறகே தையல் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து மருத்துவரின் ஆலோசனையின் பேரில் வெறிநாய்க்கடி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டியது முக்கியம்.
வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசியை எப்படி போட்டுக்கொள்ள வேண்டும்?
இந்த நோயை நான்கே ஊசிகளில் 100 சதவிகிதம் வரவிடாமல் தடுத்துவிடலாம். நாய் கடித்த அன்றே தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். நாய் கடித்த முதல் நாள், 3-வது நாள், 7-வது நாள், 28-வது நாள் என 4 தவணைகள் வெறிநாய்க்கடி தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இந்தத்தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் இலவசமாகப் போடப்படுகிறது.
வீட்டு நாய் கடித்துவிட்டால் கூட தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமா?
வீட்டு நாய்க்கு முறைப்படி வெறிநாய்க்கடி தடுப்பூசி போடப்பட்டிருந்தால்கூட, அந்த நாயால் கடிபட்டவர் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதுதான் நல்லது. கடித்த வீட்டுநாயை 10 நாட்களுக்குக் கண்காணிக்க வேண்டும். நாயின் குணத்தில் எவ்வித மாறுதலும் தெரியவில்லை என்றால், முதல் மூன்று தடுப்பூசிகளுடன் நிறுத்திக்கொள்ளலாம். நாயிடம் வெறிநாய்க்குரிய மாறுதல்கள் தெரிந்தால், மீதமுள்ள தடுப்பூசியையும் (28வது நாள்) போட்டுக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே வெறிநாய்க்கடி தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு நாய் கடித்துவிட்டால் மறுபடியும் அது போடப்பட வேண்டுமா?
நாய் கடித்த அன்றும், மூன்றாம் நாளிலும் இதைப் போட்டுக்கொண்டால் போதும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

விநாயகருக்கு என்னென்ன பொருட்கள் அபிஷேகம் செய்தால் பலன்