*ஏழு தேவியர் காவல் காக்கும் ‘காளி’ கிராமம்!*
:
*ஏழு தேவியர் காவல் காக்கும் ‘காளி’ கிராமம்!*
நன்றி குங்குமம் ஆன்மிகம்
நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டத்தில் உள்ளது ‘காளி’ எனும் பெயர் கொண்ட அழகிய சிறு கிராமம்.இவ்வூரின் நான்கு எல்லைகளிலும், ஊருக்கு நடுவிலும் என ஐந்து காளி தேவியர்களும், ஊருக்குள் அமைந்துள்ள அருள் மிகு காமேஸ்வரர் திருக்கோயிலில் அருள் பாலிக்கும் பாலசுகாம்பாளும், அபிராமி அம்பிகையும் என இரண்டு அம்பாளும் ஆக ஏழு தேவியர்கள் இங்கு காவல் தெய்வங்களாக இருந்து அருளாட்சி புரிந்து காளி கிராமத்தைக் காத்து வருவது விந்தையிலும் விந்தை!
இங்கே கிழக்கு எல்லையில், காளி தேவி துர்க்கையாக எழுந்தருளியுள்ளாள். அவள் மிகுந்த உக்கிரமும் அதே நேரம் அளவற்ற கருணையும் கொண்டு விளங்குகிறாள். இங்குள்ள இவளது திருமேனி கொள்ளை அழகு. சிற்பக்கலை அம்சமாக, அபூர்வமாக மூக்கின் நுனியில் மூக்குத்தி போடுவதற்காக துளையுடன் திகழ்கிறாள். சகல தோஷமும் நீக்குபவள்.
ஊரின் மற்றொரு எல்லையில் தேவி மாரியம்மனாகக் கோயில் ெகாண்டிருக்கிறாள். காளியின் எல்லையான இந்தப்பகுதி நத்தம் என்றழைக்கப்படுகிறது. எனவே, இவளை ‘நத்தம் மாரியம்மன்’ என்றும் அழைக்கின்றனர். இவளுக்கு பங்குனிப் பெளர்ணமியில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இவள், வம்சம் செழிக்க வரமளிப்பவள். இவளை வழிபட்டு வந்தால், நான்கு தலைமுறைக்கும் குறையிருக்காது என்கிறார்கள்.
அடுத்து மூன்றாவதாக, ஊரின் நுழைவாயிலிலேயே குடி கொண்டிருக்கிறார் காளி. இவளை `மந்தகரை காளியம்மன்’ என்றழைக்கிறார்கள். இவளும் கொள்ளை அழகு. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் வரும் ராகு காலத்தில் வணங்கினால், கல்யாண தோஷங்கள் யாவும் நீங்கிவிடும் என்கிறார்கள். வடக்கு எல்லையில் மற்றொரு காளி வீற்றிருக்கிறாள். இவளை பத்ர காளி, வெக்காளி, வடகாளி என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள். இவள் சந்நதியில் மட்டும் சப்த கன்னியர்கள் பரிவார தேவதைகளாக உள்ளனர். இவளை வழிபட்டால், வியாபாரம் செழிக்கும். இல்லறம் இன்புற்றிருக்கும் என்கிறார்கள்.
இப்படி நான்கு திசைகளிலும் நான்கு தேவியராகக் கோயில் கொண்டு, ஊரைக் காத்து வருகிறார்கள். அதோடு ஊரின் மத்தியிலும் பிரம்மாண்டமாகத் திகழும் காமேஸ்வரர் கோயிலில், துர்க்கை எண் கரங்களில் ஆயுதமேந்திய கோலத்தில் ஐந்தாவது தேவியாக அருள்கிறாள். இவளை மகாகாளி என்று போற்றுகின்றனர். ஊர் மக்கள், இவளை குலதெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்த காளி கிராமத்தில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஏழுதேவியர்களையும் ஒரே நாளில் தரிசித்து, நெய் தீபமேற்றி, பொங்கல் நைவேத்தியம் செய்து, பச்சை வஸ்திரம் சார்த்தி வழிபட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் உடல் பிரச்னைகள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை. நல்லன எல்லாம் பெற்று நலமுடன் வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
தொகுப்பு : எஸ்.கிருஷ்ணஜா...
Comments