ராஜயோகங்கள் அருளும் ராஜகோபாலன்!


 ராஜயோகங்கள் அருளும் ராஜகோபாலன்!பூர்ணாவதாரப் புருஷன் என்று போற்றப்படும் கிருஷ்ணனுக்கு இரத்தினாக்ரஹாரம் என்ற மணிமங்கலம் திருத்தலத்தில் ஒரு கோயில் உள்ளது. நரசிம்மவர்ம பல்லவன், சாளுக்கியர்களுடன் கி.பி.612ல் போர் செய்து வெற்றி கொண்ட இடம்தான் மணிமங்கலம். முதலாம் பரமேசுவரவர்மனின் செப்பேடுகளில் இது குறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் பெற்ற வெற்றியின் சின்னமாக மாமல்லன், மணிமங்கலத்தில் பல திருக்கோயில்கள் கட்டினான். அவற்றுள் ஒன்று ராஜகோபாலப் பெருமாள் திருக்கோயில்.


தமிழகத்தில் பகவான் கிருஷ்ணனுக்கு உரிய ஆலயங்களில் குறிப்பிடத்தக்கதாகத் திகழ்கிறது இந்தக் கோயில். அமைதியான கிராமத்தின் எல்லையில் ஏரிக்கரையையொட்டி கிழக்கு நோக்கி  இத்திருத்தலம் அமைந்துள்ளது. உள்ளே பலிபீடத்தையும் கொடிமரத்தையும் தரிசித்து கருடாழ்வார் சந்நதியைக் கடந்து கருவறை மண்டபத்துக்குள் சென்றால், அங்கு அனுமன் காவியுடை அணிந்து காட்சி தருவது வித்தியாசமான அமைப்பாகும். கருவறையில் உள்ள மாமாயக் கண்ணன், ராஜகோபாலப் பெருமாள் என்ற திருப்பெயர் கொண்டு, ஸ்ரீ தேவி மற்றும் பூமிதேவித் தாயார்களுடன் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறான். பீடத்துடன் சுமார் ஒன்பதடி உயரம் கொண்ட பெருமாளுக்கு நான்கு திருக்கரங்கள்.


மேல் வலக்கரத்தில் சங்கும், மேல் இடக்கரத்தில் சக்கரமும் (மற்ற தலங்களில் வலக்கரத்தில் சக்கரமும், இடக்கரத்தில் சங்கும் அமைந்திருக்கும்) தரித்து, கீழ்வலக்கரம் அபயஹஸ்தமாய் அருள, இடக்கரம் கதாயுதத்தைப் பற்றிய நிலையில் கதாஹஸ்தமாகத் திகழ்கிறது. பெருமாளின் திருமேனி அழகு நம்மை மெய் மறக்கச் செய்கிறது. பெருமாளைத் தரிசித்த பின்னர், கருவறை மண்டபத்திலேயே அமைந்திருக்கும் சிறிய சந்நதியில் ஆழ்வார்கள் மற்றும் ஆசாரியர்களைத் தரிசிக்கலாம்.


கருவறையை விட்டு வெளியே வந்து பிராகார வலம் வருகையில் தெற்குப் பிராகாரத்தில் தென்மேற்கு மூலையில் செங்கமலவல்லித் தாயாருக்கு தனிக்கோயில் உள்ளது. சந்நதியில், அமர்ந்த நிலையில் திருக்காட்சி தருகிறாள். தாயாரை தரிசித்த பின்னர், வடக்குப் பிராகாரத்தில் வடமேற்கு மூலையில் சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் சந்நதி அமைந்திருக்கிறது. தீந்தமிழில் பாமாலை தொடுத்துச் சூட்டி மாதவனில் கலந்த இந்தக் கோதையைப் போற்றி வணங்கலாம்.


ஸ்ரீ ஜெயந்தி, திருக்கார்த்திகை, பவித்ர உற்சவம் 3 நாட்கள், திருப்பாவாடை உற்சவம், ஆழ்வார், ஆசாரியார்களின் வருஷ திருநட்சத்திரம், புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் வீதி புறப்பாடு போன்ற விழாக்கள் இத்தலத்தில் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.இந்த ஆலயம் பல்லவர்கள் காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்பட்டாலும், பிற்காலச் சோழ மன்னர்கள் பலர் இத்திருக்கோயிலுக்குப் பல திருப்பணிகள் செய்ததுடன் பல வகையான தானங்களையும் அளித்திருப்பதாக கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.


இத்திருத்தலத்திற்கு மகான் ராமானுஜர் எழுந்தருளியதாகக் கூறுகிறார்கள். அதற்கான சான்றுகள் இல்லையென்றாலும், எம்பெருமானார் அவதரித்த ஸ்ரீ பெரும்புதூர் திருத்தலம் இத்திருத்தலத்திற்கு அருகில் அமைந்திருப்பதால், ராமானுஜர் இத்தலத்திற்கு வந்திருக்கக்கூடும். நாடி வந்து வணங்குபவர்க்கெல்லாம் ராஜ யோகங்களை நாளும் அருள் புரிந்து வருகிறார் ராஜகோபாலப் பெருமாள். இவரை தரிசித்து, நல்லன எல்லாம் பெறுவோம். சென்னை தாம்பரத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.


தொகுப்பு : மகி...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,