எம்.ஜி.ஆரின் மனிதாபிமானம்

 


இவர்கள் சொல்கிறார்கள்:

நடிகை கே.ஆர். விஜயா அவர்கள்...சினிமா எக்ஸ்பிரஸ் 01/06/1990 இதழில் இருந்து.--------------------
ஒரே வானம் ஒரே பூமி படப்பிடிப்பிற்காக பாங்காக் சென்றிருந்தோம். வெளிநாடு வந்திருக்கிறோம் என்பதால் இடைவிடாது படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் நான் நடிக்க வேண்டிய பகுதிகள் எல்லாம் எடுத்து முடித்து விட்டு எனக்கு ஒரு நாள் ஓய்வு கொடுத்தார்கள். மாலையில் பாங்காக்கைச் சுற்றிப் பார்த்து விட்டு வரலாமே என்று உடன் சக கலைஞர்கள் சிலரையும் அழைத்துக் கொண்டு பாங்காக்கை சுற்றி பார்த்துக் கொண்டிருந்தோம்.
அப்படி வந்து கொண்டிருந்த போது பெரும்பாலும் உடனிருந்தவர்களிடம் தமிழில் தான் பேசிக் கொண்டிருந்தோம்,
நாங்கள் தமிழில் பேசிக் கொண்டிருப்பதை ஒரு நபர் வெகுநேரமாக கவனித்துக் கொண்டிருந்திருக்கிறார். நாங்கள் இந்தியாவிலிருந்து அதுவும் தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்கள் படப்பிடிப்பிற்காக வந்தவர்கள் என்பதையும் நன்றாக அவர் புரிந்து கொண்டார்.
சில நிமிடங்கள் எங்களைக் கவனித்துக் கொண்டிருந்தவர் எங்கள் அருகில் வந்தார். வந்தவர் வினவினார்
நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களா? ... ஆமாம்.. ஆமோதித்து பதிலளித்தேன். நீங்கள் திரைப்படத்துறையைச் சார்ந்தவரா? மீண்டும் கேள்விக் கணையைத் தொடுத்தார். அதற்கும் ஆமாம் என்று பதிலளித்தேன். உங்கள் தமிழ்நாட்டில் உள்ள உங்களைப் போன்ற திரைப்படக் கலைஞர் , நல்லவர் எம்.ஜி.ஆரைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா? அவரைப் பழக்கமுண்டா அந்த நபர் ஆர்வமுடன் கேட்டார்.
ஆச்சரியம் விலகாமல் இப்படி அழுத்தம் திருத்தமாகக் கேட்கிறீர்களே நீங்கள் எம்.ஜி.ஆரின் நண்பரா என்று கேட்டேன். அவர் சர்வ சாதாரணமாக இல்லை என்று சொல்லிவிட்டார்.
சற்று குழப்பத்துடனேயே அவரைப் பற்றி தெளிவாக துல்லியமாகக் கேட்கிறீர்களே எப்படி அவரைப் பற்றித் தெரிந்து கொண்டீர்கள் என்று கேட்டபோது ஒரு சிறந்த மனித உள்ளத்தைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வதில் தவறில்லையே என்று அடக்கத்துடன் அவர் சொன்னதும் எங்கள் அனைவருக்குமே சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் இப்படிச் சொன்னதும் பின்னணியில் ஏதோ நிகழ்ச்சி நடந்திருப்பது மட்டும் எங்களுக்குத் தெரிந்தது. அதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் "திரு. எம்.ஜி.ஆர் உங்களைக் கவர்ந்த காரணத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?" என்று கேட்டதும் ஆர்வத்துடன் சற்று பரவசத்துடன் அந்த நபர் பேசத் துவங்கினார்.
எங்கள் ஊரில் எத்தனையோ மொழிப் படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் பதினைந்து நாடுகளின் படப்பிடிப்புகள் ஒரே சமயத்தில் கூட நடைபெற்றதுண்டு. அவர்களை எல்லாம் நாங்கள் தனியாகத் தெரிந்து வைத்துக் கொள்ளவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எங்களுக்கு வாய்த்ததில்லை. ஆனால் திரு. எம்.ஜி.ஆர் அவர்கள், தான் செய்த காரியத்தால் மனிதனை மனிதனாக மதிக்கத் தெரிந்த மாமனிதர் என்பதை நிருபித்து விட்டார். இப்படி ஆரம்பித்தார் அந்த மனிதர். அப்படி என்னதான் செய்திருப்பார் எம்.ஜி.ஆர் என்று அறியத் துடித்த வண்ணம்... ம்... சொல்லுங்கள்.. என்று அவரை அவசரப்படுத்தினோம். மேலும் தொடர்ந்தார்.
ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்கள் எங்கள் நாட்டிற்கு தம் படப்பிடிப்பு குழுவினரோடு படப்பிடிப்பு நடத்த வந்திருந்தார். அவர் வந்த போது ஏராளமான சீனப் படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தன. எம்.ஜி.ஆர் அவர்கள் யாருக்கும் எந்த தொந்தரவும் தராத வகையில் தனது குழுவினரோடு தனது படப்பிடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார். வேறு ஒரு இடத்தில் ஒரு சீனப்படத்தின் சண்டைக் காட்சியை படமாக்குவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்கள்.
ஹெலிக்காப்டரில் நடக்கும் சண்டைக் காட்சி அது. அதில் கவனமாக ஈடுபட்டிருந்தனர் குழுவினர். சிறிது நேரம்தான் ஆகியிருந்தது. எதிர்பாராமல் அந்த சம்பவம் நடந்து விட்டது.
அந்த சீனப் படத்தில் ஹெலிக்காப்டரில் நடித்துக் கொண்டிருந்த ஸ்டண்ட் நடிகர் நழுவ ஹெலிக்காப்டரில் இருந்து விழுந்து அந்த இடத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது. விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனே தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு தனது குழுவினருடன் மரணமடைந்த அந்த சீன ஸ்டண்ட் நடிகரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு மலர் வளையத்துடன் வந்து எம்.ஜி.ஆர். அஞ்சலி செலுத்தினார். வேறு எத்தனையோ படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருந்தன. ஆனால் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டும் ஏராளமான பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் தமது படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது சாதாரணமான விஷயமல்ல. இதை ஏன் மற்றவர்கள் செய்யவில்லை. யாரோ முகம் தெரியாத ஒருவருக்கு அஞ்சலி செலுத்த வந்தார் என்பது சாதாரணமான விஷயமல்லவே. இது எம்.ஜி.ஆரின் மனிதாபிமானத்தை குறிப்பதன்றி வேறென்ன?
கண்களில் நீர்வழிய அந்த அன்பர் இதைச் சொன்னார். கேட்ட எங்கள் கண்களிலும் கண்ணீர் கசியத் தவறவில்லை.
- ஸ்ரீதர் சுவாமிநாதன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,