சீக்கிய மதத்தின் முதல் குருவும், ஸ்தாபகருமான மகாகுரு குருநானக் நினைவு நாளின்று
சீக்கிய மதத்தின் முதல் குருவும், ஸ்தாபகருமான மகாகுரு குருநானக் நினைவு நாளின்று
'நேர்மையான வாழக்கையை ஒவ்வொருவரும் கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும்' என்று சொன்ன குருநானக், இன்றைய பாகிஸ்தானில், லாகூர் அருகேயுள்ள டல்வாண்டி என்ற கிராமத்தில் பிறந்தவர். இளம் வயது முதலே தெய்விக அனுபவங்களால் திளைத்திருந்த குருநானக், 1499-ம் ஆண்டு அவரது முப்பதாவது வயதில் 'ஞானம்' பெற்றுத் தெய்விக நிலையை அடைந்தார். ஆரம்பத்தில் பல்வேறு அற்புதச் செயல்களைச் செய்துகாட்டி மக்களை நல்வழிப்படுத்தினார். பின்னர், ஆன்மிகக் கருத்துகளை மக்களிடையே போதித்தார். மக்களிடையே நிலவி வந்த மூட நம்பிக்கைகளைக் களைந்தார். மதத்தால் வேறுபட்டுக் கிடந்த மக்களிடையே அன்பை விதைத்து ஒன்றுபடுத்தினார்.
'நாம் கடவுளின் பாதையைப் பின்பற்ற வேண்டும். அது மதங்களால் ஆனதல்ல... அன்பு வழியிலான பாதை' என்று விளக்கமளித்தார். மத ஒற்றுமைக்கு மகத்தான சேவை செய்தவர் குருநானக். இவரின் போதனைகள் யாவும் அன்பை வலியுறுத்தியே சொல்லப்பட்டன. இதனாலே சீக்கிய மதம் இவரது காலத்தில் விரைவாகப் பரவியது.
இவர் தனது வாழ்வில் நான்கு நெடும் பயணங்களை மேற்கொண்டு மக்களைச் சந்தித்தார். திபெத், தென் இந்தியா, பூடான், பாக்தாத், மெக்கா, மதினா போன்ற பகுதிகளுக்குச் சென்று, மக்களைச் சந்தித்துப் பிரசங்கம் செய்தார். இவரைப் பின்பற்றிய மக்கள் இவரது புதிய மார்க்கத்தை 'சீக்கியம்' என்றார்கள். அந்த மார்க்கத்தைப் பின்பற்றியவர்கள் 'சீக்கியர்கள்' என்று அழைக்கப்பட்டார்கள். உதவி செய்தல், மோசடி இல்லாத நேர்மையான வாழ்வு, ஆண்டவனின் நாமத்தை உச்சரித்தல், எல்லா நேரங்களிலும் கடவுளை தியானித்தல், முன்னோர்களை மதிக்க வேண்டும் ஆகிய கொள்கைகளைக் கடமையாக்கினார்.
எல்லாவித பற்றுகளையும் விட்ட ஞான வடிவான பெரியவர்களின் வழிக்காட்டுதலின்படியே ஒவ்வொருவரும் நடக்க வேண்டும், முன்னோர்களை மதிக்க வேண்டும் என்று போதித்தார். இவரது போதனைகள் அடங்கிய புனித நூல் 'குருகிரந்த சாஹிப்'. உலக மக்கள் அனைவரும் ஒரேமாதிரியானவர்கள் என்று வலியுறுத்தியவர் குருநானக்.
மனிதர்களிடையே பாகுபாடே இருக்கக் கூடாது என்று வலியுறுத்திய குருநானக் மறைந்த இந் நாளில் அவரின் பாதம் பணிவோம்!
Comments