கலைஞர் மு.கருணாநிதிக்கும் உங்களுக்கும் இடையேயான பிடித்த, பிடிக்காத, நல்ல நகைச்சுவையான சம்பவங்கள்


 

''அரசியல்ல அவரோட பங்கு எவ்ளோ முக்கியமானதுன்னு எல்லோருமே சொல்லுவாங்க. எதிர்க்கட்சிகளில் இருக்குறவங்ககூட அவரோட சொல்வளத்தையும் எழுத்தாற்றலையும் சமயோசிஜதத்தையும் பாராட்டுவாங்க. அப்படிப்பட்ட கலைஞர் என்னோட பட விழாவில் கலந்துக்குறார், என்னைப் பாராட்டுறார் என்பதெல்லாம் எப்போதும் மறக்கமுடியாதது. 'புதிய பாதை' படத்தோட வெள்ளிவிழாவில் கலைஞர் அவர்கள் கலந்துக்கிட்டார். அந்த விழாவில் நான் பேசும்போது, 'அம்மி குத்துற மாதிரிதான் நான் 'புதிய பாதை' படம் எடுத்திருக்கேன். அம்மி குத்துறவங்களில் சில பேர் அதுல புள்ளி புள்ளியா வெச்சிட்டுப் போயிடுவாங்க. சிலர் தாமரைப்பூ வரைவாங்க. அதுபோல நான் ஒரு அம்மி குத்துற கலைஞன்தான். அதில் ஒரு சின்ன வேலைப்பாடு மட்டும் பண்ணியிருக்கேன். அம்மி குத்துற கலைஞனுக்கு சிலைகளை வடிக்கிற கலைஞர் பரிசு கொடுக்கிறார்'னு கலைஞர் அவர்களைப் பாராட்டிப் பேசினேன். அப்ப கலைஞர், 'தம்பி பார்த்திபன் தன்னை அம்மிகுத்துற கலைஞர்னு சொன்னார். அம்மிதான் சமையலுக்குப் பயன்படும். சிலைகள் எதற்கும் பயன்படாது'ன்னு சொன்னார்.
என்னை அவர் பாராட்டிப்பேசணும்னு அவசியமே இல்ல. அதுவும் தன்னைத் தாழ்த்திக்கிட்டுப் பேசவேண்டியதேயில்லை. ஆனால் தன்னைத் தாழ்த்தி இன்னொருத்தரைப் புகழ்ந்து பாராட்டிப்பேசினார். அந்தக் குணத்தை அவர்கிட்ட கத்துக்கிட்டேன். எனக்குத் திருமணம் முடிஞ்சதும் என்னுடைய மனைவி இனி படங்களில் நடிக்கிறதில்லைன்னு முடிவெடுத்திருந்தாங்க. அப்ப, அவங்க நடிக்கிறதா ஏற்கெனவே ஒத்துக்கிட்டிருந்த படங்களுக்கெல்லாம் நாள்கள் கொடுத்து முடிச்சுக் கொடுத்தோம். 'ஆடிவெள்ளி' படம்லாம் அப்பதான் முடிஞ்சது. ஆனால், கலைஞர் அவர்கள் சம்பந்தப்பட்ட படம் மட்டும் முடியல. சொர்ணம் இயக்கத்துல முரளி நடிச்ச படம் அது. நாங்க கொடுத்த நாள்களுக்குள்ள அவங்க படம் எடுத்து முடிக்கல. அப்ப என் மனைவி நிறைமாத கர்ப்பிணியா இருக்காங்க.
கலைஞர் என்னைக் கூப்பிட்டு 'அந்தப் படத்தைக் கொஞ்சம் முடிச்சிக்கொடுங்க'ன்னு பேசினார். நான் 'இல்லைங்க... நாங்க டைம் கொடுத்துட்டோம். அவங்க அந்த டைம்குள்ள எடுத்து முடிக்கல. நாங்க டேட் கொடுக்காம இல்லை. இப்ப அவங்களும் கர்பபமா இருக்காங்க'ன்னு சொன்னேன். 'சரி... குழந்தை பிறந்தபிறகு முடிச்சுக்கொடுங்க'ன்னு சொன்னார். 'இல்லைங்க... அவங்க இனி நடிக்கிறதில்லைன்னு முடிவு பண்ணியிருக்காங்க. மன்னிக்கணும்'ன்னு சொல்றேன். அவர் அப்ப முதலமைச்சர். அவர் என்கிட்ட கேட்குறார். அவர்கூட திரும்ப திரும்ப பேசுறேன். என் மனசுக்குள்ள ஏதோ ஸ்ட்ராங்கா நினைச்சிக்கிட்டு அப்படிப் பேசுறது தப்பில்லைன்னு பேசுறேன். இப்ப யோசிச்சுப் பார்த்தா ஆச்சர்யமா இருக்கு. அவ்ளோ ஸ்ட்ராங்காலாம் பேசியிருக்கணுமான்னு இப்ப தோணுது. அவர் ரொம்பப் பெருந்தன்மையா 'சரி நீங்க பாருங்க'ன்னு அனுப்பிவிட்டுட்டார்.
'ஹவுஸ்ஃபுல்' படம் அவர் பார்க்குறதுக்காக ஸ்க்ரீன் பண்ணிட்டு உட்கார்ந்து பார்த்துட்டிருக்கோம். அதுல ஒரு அமைச்சருக்குக் காது கேக்காது. படம் பார்த்து முடிஞ்சதும் 'இது ஆற்காடு வீராசாமியைத்தானே மனசுல வெச்சுட்டுப் பண்ணுன'ன்னு என்கிட்ட கலைஞர் கேக்குறார். 'இல்லைங்க... அப்படி ஒரு விஷயமே எனக்குத் தெரியாது. இந்தப் படத்துல நடிச்சவருக்கு அப்படி இருந்தது. அதை உண்மையிலேயே படத்துலயும் வெச்சேன்'னு சொன்னேன். 'சும்மா பொய்யெல்லாம் சொல்லக்கூடாது... அதெல்லாம் தெரிஞ்சுதான் பண்ணியிருக்க'ன்னு சொன்னார்.
அந்தப் படத்தை அவருக்குப் போட்டு காண்பிச்சு வரிவிலக்கு வாங்குறதுதான் என்னோட பிளான். ஆனா, என்னடா இப்படி ஆகிடுச்சே, எப்படி வரிவிலக்கு கிடைக்கும்னு நினைச்சேன். அடுத்தநாள் காலைல 8 மணிக்கு கலைஞர் வீட்டுக்கு வரசொல்லியிருந்தாங்க. காலையில் போறேன். அங்க வரிவிலக்குக் கடிதம் கலைஞர் கையெழுத்து போட்டு ரெடியா இருந்தது. அவர் ஒரு விஷயத்தை விமர்சனம் பண்ணுறார். ஆனா, அந்த விமர்சனத்துனால யாருக்கும் எந்த பாதிப்பும் வந்துடக்கூடாதுன்னு நினைக்கிறார்னு கலைஞர் அவர்களை நினைச்சு வியந்தேன். அப்புறம் ஒருமுறை அவரைப் பார்க்க அவர் வீட்டு வாசல்ல உட்கார்ந்திருக்கும்போது சண்முகநாதன் அவர்கள் ஒரு பேப்பர் கொண்டுவந்து 'இப்ப காலையில் கலைஞர் ஒரு கவிதை எழுதியிருக்கார். உங்ககிட்ட கொடுத்துப் படிக்கச் சொன்னார்'னு கொடுத்தார். எனக்கு செம சந்தோஷம். என்னது, கலைஞர் எழுதின கவிதையை முதல் ஆளா, நான் படிக்கிறதான்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன். படிச்சதும் அவர்கிட்ட போய் எனக்குப் பிடிச்ச விஷயங்களைச் சொன்னேன். 'அப்படியா நல்லாருக்கா'ன்னு சந்தோஷப்பட்டு சிரிக்கிறார். ஒரு கலைஞனுக்குப் பாராட்டுன்றது கடைசிவரைக்கும் தேவையான விஷயம்னு அப்பதான் புரிஞ்சிக்கிட்டேன்.
ஆனா, அவர்மேல ஒரே ஒரு வருத்தம்தான். தமிழ்தான் அவரோட பெரிய அடையாளம். ஆனா, சிலோன் பிரச்னை அப்ப, தமிழர்களுக்காக அவர் குரல் கொடுக்கவேண்டிய நேரத்துல ஆட்சியையே கலைச்சிட்டு தமிழர்கள் பின்னாடி நின்னிருக்கவேண்டாமான்னு தோணும். அப்படி அவர் பண்ணியிருந்தார்னா உலகத்தமிழர்கள் அத்தனை பேரும் அவரை இந்த மாதிரி 100 மடங்கு கொண்டாடியிருப்பாங்க. எனக்கு அதுதான் வருத்தம். அவர் ஏன் அப்படிச் செய்யலைன்னு தெரியல. ஒரு பெரிய கிரீடத்தைத் தவறவிட்டுட்டாரோன்னு தோணுது. குடும்பத்துக்காக அவர் அப்படி பண்ணாமவிட்டுட்டாரோன்னு நினைப்பேன். அந்த விஷயம் மட்டும்தான் அவரிடம் எனக்குப் பிடிக்காதது.''

(கலைஞர் மு.கருணாநிதிக்கும் உங்களுக்கும் இடையேயான பிடித்த, பிடிக்காத, நல்ல நகைச்சுவையான சம்பவங்கள் பற்றிச் சொல்ல முடியுமா?''

விஜயன், ஆயில்பட்டி)


நடிகர்: பார்த்திபன் நேர்காணலில் ஒருமுறை சொன்னது
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,