திருப்பதி குடை.!


 இன்று திருப்பதி குடை.!

திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு முன் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில், சென்னை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து குடை ஊர்வலம் தொடங்கும். வழக்கமாக பூக்கடை என்.எஸ்.சி. போஸ் சாலை, கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை சுமார் 4 மணியளவில் குடைகள் கவுனி தாண்டும்.
நிற்க.
திருப்பதி குடை, யானைக் கவுனியைத் தாண்டுவது ஒரு பரபரப்பு செய்தி. சென்ன கேசவப் பெருமாள் கோயிலிலிருந்து திருப்பதி குடை புறப்பட்டதுமே, குடை, யானைக் கவுனி தாண்டிடுச்சா' என ஓட்டேரி, அயனாவரம் முதல் திருப்பதி வரைக்குமே பெரிய பரபரப்புச் செய்தியாகப் பேசுகிறார்கள்.
செய்தித்தாள்களும், மாலை 4.30 மணிக்குக் குடைகள் யானைக் கவுனியைக் கடந்தன' என்று குறிப்பிட்டு எழுதுகின்றன. `குடை, ஓட்டேரியைத் தாண்டுவதோ, அயனாவரத்தைத் தாண்டுவதோ முக்கியம் இல்லையா...ஏன், யானைக் கவுனியைத் தாண்டுவது மட்டும் முக்கியமாக இருக்கிறது' என்ற கேள்வி எனக்குச் நீண்ட நாட்களாகவே இருந்தது. யாரும் எனக்குப் பதில் சொன்னது இல்லை. 'எல்லோருமே, திருப்பதி குடை யானைக் கவுனி தாண்டிவிட்டதா' என்று சம்பிரதாயமாகக் கேட்டுவிட்டு திருப்தியாக இருப்பார்கள். அந்தக் கேள்விக்குக் பதில்கூட தேவையிருக்காது.
யானைக் கவுனியைத் தாண்டியதும், நடராஜா திரையரங்கம், சூளை நெடுஞ்சாலை, பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்ட்ராஹான்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலைச் சென்றடையும். இரவு கோ‌யி‌லி‌ல் த‌ங்‌கி‌வி‌ட்டு அ‌திகாலை‌யி‌ல் புற‌ப்படு‌ம் குடை, மறுநாள் ஐ.சி.எஃப்., வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர் வழியாகத் திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயிலை அடையும். இப்படியாக ஆறாவது நாள் திருப்பதியைச் சென்றடைகிறது. ‌‌
யானைகவுனி மேட்டருக்கு வருவோம். சென்னை, சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு பலருக்கும் தெரிந்திருக்கும். அப்போதெல்லாம் சென்னையைக் கடந்து செல்ல வரி செலுத்த வேண்டும். அந்த வரி செலுத்திவிட்டுச் செல்வதற்காகக் கட்டப்பட்ட சுவர்தான் வால்டாக்ஸ். அதில் ஆறு கேட்டுகள் உண்டு. அதில் ஒன்றுதான் எலிபன்ட் கேட்' எனச் சொல்லப்படும் யானைக் கவுனி. இந்த வாயில் வழியாகத்தான் வரி செலுத்திவிட்டு வாகனங்கள் பிரயாணிக்கும்.
திருப்பதி குடைகள் செல்லும்போது வரி செலுத்துவது தொடர்பாகவோ, வரியைத் தளர்த்துவது தொடர்பாகவோ அந்த வாயில் அருகே ஏதோ தாமதம் இருந்திருக்கிறது. அதைக் கடப்பது ஏதோ ஒரு வகையில் சிரமமானதாக இருந்திருக்கும். அதனால்தான் இன்னமும், குடை யானைக் கவுனியைக் கடந்துவிட்டதா' என்று மக்கள் விசாரித்துக்கொண்டிருக்கிறார்கள்.
யாத்திரை கொண்டு செல்லும் குடைகளில் இரண்டு மட்டுமே திருப்பதியில் சமர்ப்பிக்கப்படும்.
மற்றவை செல்லும் வழியில் உள்ள பைராகி மடத்துக்கும், திருவள்ளூர் கோயிலுக்கும் அளிக்கப்படும்.
திருப்பதியில் பிரம்மோத்சவத்தின் ஐந்தாம் நாளான கருடோற்சவத்தின்போது இந்தக் குடைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,