அன்னக்கிளி ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ்த்திரையிசையில்


 அன்னக்கிளி ஒரு புதிய அத்தியாயத்தை தமிழ்த்திரையிசையில் ஆரம்பித்துவைத்தது என்பது மிகைப்படுத்தப்படாத உண்மை. படத்தின் பாடல்கள் அனைத்தும் அதுவரை கேட்டிராத வகையில், நேராக சென்று கொண்டிருக்கும் கார் ஒன்று சட்டென்று யு டர்ன் அடிக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின. "அன்னக்கிளி உன்ன தேடுதே"என்கிற பாடலே முதலில் பதிவு செய்யப்பட்ட பாடல். இந்தப் பாடல் பதிவின் போது மின்சாரம் தடைபட்டுப் போக "நல்ல சகுனம்"என்று ஸ்டூடியோவிலேயே இகழ்ச்சி செய்யப்பட்ட இளையராஜா அந்தப் படத்தில் அமைத்தது தமிழிசையின் போக்கையே மாற்றிய பாடல்கள். குறிப்பாக அன்னக்கிளியின் உயிர்நாடியான "மச்சானப் பாத்தீங்களா?"பாடல் தமிழகத்தில் ஏற்படுத்திய அலை இன்றளவும் மறக்கமுடியாதது. அது ஒரு கொண்டாட்டமான பாடல். ஒரு சாதாரண

ஹம்மிங்குடன் துவங்கி ஜானகியின் குரலோடு பின்புலத்தில் ஒற்றை புல்லாங்குழல் ஒலிக்க, இரண்டு வினாடிகளுக்குப் பின் உயிர்ப்பாக உருமாறி, "மச்சான பாத்தீங்களா" என்று பாடல் ஆரம்பிக்கும் போது யாருமே எதிர்பார்க்காத ஒரு கணத்தில் ஒரு தடாலடியான தாளத்தோடு கேட்பவரை அதிரச் செய்யும் ஒரு அனாசயமான பாடல். எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் நம் தலை மீது திடீரென கொட்டும் ஜில்லென்ற தண்ணீரின் சிலிர்ப்பை இந்தப் பாடல் கொடுத்தது. தமிழகம் நிமிர்ந்து உட்கார்ந்தது. "அட யாருடா இந்த ஆளு?"என்று எல்லோரையும் கேட்க வைத்தது இந்தப் பாடல். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களுமே தமிழகம் முழுவதும் எதிரொலித்தன. மச்சான பாத்தீங்களா, அன்னக்கிளி உன்ன தேடுதே, சொந்தம் இல்லை, முத்து முத்தா பச்சரிசி, அடி ராக்காயி என்று எல்லா பாடல்களும் கிராமத்து வாசனை வீசின. பொதுவாக கூறப்படுவது போல பட்டி தொட்டி எங்கும் அன்னக்கிளியின் பாடல்கள் படபடத்தன. படத்தின் வெற்றிக்கு இளையராஜாவின் இசையும் ஒரு காரணம் என்று அப்போது சொல்லப்பட்டது. ஆனால் இன்றோ அந்த இசை மட்டுமே அந்தப் படத்தின் அடையாளமாக நிலைத்திருக்கிறது.
அன்னக்கிளியின் வெற்றி நமக்கு ஒரு புதிய இசை ஆளுமையை அறிமுகம் செய்தது. அன்றைய புதிய தலைமுறையின் இசை அரங்கேற, இளையராஜா இளைஞர்களின் ஆதர்ச இசைஞரானார். அபூர்வமாக இது ஒரே படத்தில் நடந்தது. இது எப்படி நிகழ்ந்தது என்று ஆராய்ந்தோமானால் சில கூறுகளை நாம் புரிந்து கொள்ளமுடியும். 76 இல் வந்த மற்ற படங்களை விட அன்னக்கிளியின் இசை பெருமளவில் வேறுபட்டிருந்தது. (76 இல் வந்த மற்ற சில படங்கள்-சித்ரா பவுர்ணமி,மன்மதலீலை, தசாவதாரம்,குமார விஜயம்,மூன்று முடிச்சு, நீ ஒரு மகாராணி (இதில்தான் அவளொரு பச்சைக் குழந்தை என்றொரு
அருமையான
பாடல் உள்ளது), ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, ரோஜாவின் ராஜா, உணர்சிகள், உழைக்கும் கரங்கள்). இளையராஜாவின் தாளம், இசை கோர்ப்பு இரண்டுமே அதுவரை இல்லாத பாணியில் அமைக்கப்பட்டிருந்தது .
நாட்டுப்புற தாளம், கிராமிய வாசம், சற்றே தென்படும் மேற்கத்திய இசையின் சாயல் என்று இளையராஜாவின் இசையில் எளிமையான அதே சமயம் மிக நவீனமான ஒரு புதிய வெளிச்சம் ஒளிர்ந்தது. இதுவே அவரை அப்போது வேறுபடுத்திக் காட்டியது. இந்தப் புதிய இசையின் வேகத்தில் எம் எஸ் வி தவிர மற்றவர்கள் தங்கள் அடையாளங்களை துறந்து இளையராஜாவை பின்பற்ற, இசையின் போக்கு மாறத் துவங்கியது.
-காரிகன்
இணையத்தில் படித்தது
thanks
kandasamy.r

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,