முக்தா பிலிம்ஸின் ‘நிறைகுடம்'


 முக்தா பிலிம்ஸின் ‘நிறைகுடம்' படத்தில் நடிக்க சிவாஜியிடம் சம்மதம் வாங்கினார் முக்தா சீனிவாசன். அவரும், “உனக்கு இல்லாத கால்ஷீட்டா. கொடுத்துட்டாப் போச்சு” என மளமளவென தேதிகள் கொடுத்தார். அப்போது முக்தா சீனிவாசன் கொஞ்சம் தயங்கியபடியே, “இந்தப் படம் கொஞ்சம் லோ பட்ஜெட் படம்தான். அதனால கொஞ்சம் சம்பளம் குறைச்சிக்கலமா?” என்று கேட்க, “இதுக்கு ஏன் தயங்கறே சீனு... எவ்ளோ தந்தாலும் பரவாயில்ல” என்று சட்டென்று சொன்னார் சிவாஜி.

படம் எடுக்கப்பட்டது. 1969-ல் இதே நாளில் வெளியானது. ‘இந்தப் படம் இவ்வளவுதான் வசூலாகும்’ என்று நினைத்ததையும் கடந்து, நல்ல வசூலைக் கொடுத்தது. தமிழகத்தின் பல ஊர்களில், 50 நாட்களைக் கடந்தும் ஓடியது. சில ஊர்களில், 75 நாட்களைக் கடந்தும் ஓடியது. தமிழகம் முழுக்க வந்த வசூல் கணக்கையெல்லாம் பார்த்துவிட்டு, முக்தா வி.ராமசாமியும் முக்தா வி.சீனிவாசனும் மிகவும் திருப்தியடைந்தார்கள்.
அதையடுத்து நடந்ததுதான் அதிசயம். முக்தா சீனிவாசனின் மகன்களில் ஒருவரும் தயாரிப்பாளருமான முக்தா ரவி நம்மிடம் இந்த விஷயத்தைப் பகிர்ந்துகொண்டார். அந்தத் தகவல் இதுதான்.
’நிறைகுடம்’ வெற்றிக்குப் பிறகு முக்தா சீனிவாசன் சிவாஜியைப் பார்க்க அவரின் வீட்டுக்குச் சென்றார். “வா சீனு, வா சாப்பிடலாம்” என்று எப்போதும் போலவே வரவேற்றார் சிவாஜி. “இதைப் பிடிங்க...” என்று முக்தா சீனிவாசன் ஒரு கவரை அவரிடம் கொடுத்தார். “என்ன இது?” என புருவம் உயர்த்தி, குழப்பத்துடன் கவரை வாங்கிய சிவாஜி, கவரில் துருத்திக் கொண்டிருந்த கடிதத்தைப் பார்த்தார். எடுத்தார். படித்தார்.
அந்தக் கடிதத்தில், சென்னை, செங்கல்பட்டு, தென்னாற்காடு மாவட்டம், வட ஆற்காடு மாவட்டம் (அப்போது அப்படித்தான் விநியோக ஏரியா பிரித்துப் பார்க்கப்பட்டது), திருச்சி, கோவை, சேலம், மதுரை, ராமநாதபுரம் என தமிழக விநியோக ஏரியாக்கள், ‘நிறைகுடம்’ திரையிடப்பட்ட தியேட்டர்கள், ஒவ்வொரு தியேட்டரின் வசூல் நிலவரம், ஏரியாக்கள் விற்ற விவரம் என அனைத்தும் குறிக்கப்பட்டிருந்தது. அத்துடன், ‘நிறைகுடம்’ படம் எடுப்பதற்கான செலவுக் கணக்கும் எழுதப்பட்டிருந்தது. செலவெல்லாம் போக, எதிர்பார்த்த வசூல் இவ்வளவு என்று ஒரு தொகையும் கிடைத்த வசூல் இவ்வளவு என்று ஒரு தொகையும் குறிப்பிடப்பட்டிருந்தது. சிவாஜி முகத்தில் மகிழ்ச்சி. புன்னகை.
அந்தப் பேப்பரைக் கடந்தும் கவரில் கனமாக ஏதோ இருக்க, எடுத்துப் பார்த்தார். பணம். “என்ன இது?” என்பது போல் முக்தா சீனிவாசனைப் பார்வையாலேயே கேட்டார் சிவாஜி கணேசன். “படத்துக்கு குறைவான தொகைதான் சம்பளமா கொடுத்தேன். ஆனா, நாம எதிர்பார்க்காத வசூல் வந்து, நல்ல லாபமே கிடைச்சிருக்கு. அதனால, மார்க்கெட் நிலவரப்படி, உங்களுக்கான மீதமுள்ள சம்பளம் இது” என்றார் முக்தா சீனிவாசன்.
இதைக் கேட்டதும் சட்டென்று முகம் மாறியது சிவாஜிக்கு. “என்ன பழக்கம் இது. இந்தப் படத்துக்கு இவ்ளோ சம்பளம் தரேன்னு நீ பேசினே. நானும் சரின்னேன். அதையும் கொடுத்துட்டே. இப்போ என்ன இது? எனக்குப் பிடிக்கல சீனு. இதை நீயே வைச்சுக்கோ” என்று கொஞ்சம் கோபத்துடன் சொன்னார் சிவாஜி.
ஆனால் முக்தா சீனிவாசன் விடாப்பிடியாய் பணத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்திக் கொண்டே இருந்தார். சிவாஜியும், வாங்கமாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். இப்படியே தொடர்ந்து கொண்டிருக்க, சீனு சொன்னதைச் செய்யாம விடமாட்டான். இதை கொடுக்காம நகர மாட்டான் என்பதை உணர்ந்து கொண்டார் சிவாஜி.
முக்தா சீனிவாசன்
ஒரு நிமிடம் அமைதியாக முக்தா சீனிவாசனையே பார்த்தார். “சரி சீனு, இந்தப் பணத்தை நான் வாங்கிக்கணும். அவ்ளோதானே... சரி, வாங்கிக்கிறேன். ஆனா ஒரு நிபந்தனை...” என்று சொல்ல, முக்தா சீனிவாசன் நிம்மதிப் பெருமூச்சு விட்டபடி, “சொல்லுங்க, செஞ்சிருவோம்” என்றார்.
இந்தப் பணத்தை நான் வாங்கிக்கிறேன். ஆனா இதை ‘நிறைகுடம்’ படதுக்கான சம்பளமா நான் வாங்கிக்க மாட்டேன். என்னை வைச்சு அடுத்தாப்ல நீயொரு படம் பண்ணு. அந்தப் படம் எப்போ பண்றியோ, அந்தப் படத்துக்கான அட்வான்ஸா இதை நான் வைச்சிக்கிறேன்” என்று சிவாஜி சொல்லியபடி, முக்தா சீனிவாசனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டார். நெகிழ்ந்து நெக்குருகிப் போனார் முக்தா சீனிவாசன்.
ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குநராகவும் முக்தா சீனிவாசன் நிறைகுடம்; ஒரு நடிகராக, இயக்குநரின் நண்பராக சிவாஜியொரு நிறைகுடம்.
நன்றி: காமதேனு, இந்து தமிழ் திசை

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி