*திதி தீர்த்தங்கள்*


 *திதி தீர்த்தங்கள்*



நன்றி குங்குமம் ஆன்மிகம்


* ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. அவற்றில், அக்னி தீர்த்தம் எனப்படும் கடலில், மகாளய அமாவாசை அன்று நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.


* திருச்சியில் ரங்கநாதர் பள்ளி கொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில் காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் அபரிமிதமான பலன்கள் கிட்டும்.


* பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தின் அருகே கூடுதுறையில், மகாளய அமாவாசையன்று ஏராளமான பக்தர்கள் முன்னோர்களுக்கு சிராத்தம் கொடுத்து மங்கலங்கள் பெறுகின்றனர்.


* திருவையாற்றுப் படித்துறையில் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பூஜைகள் செய்து தர்ப்பணம் செய்தால் தீவினைகள் அகன்று நன்மைகள் கிட்டும்.


* கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் நீராடி, படித்துறையில் மகாளய அமாவாசை அன்று முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் செய்து அதன் கரையில் உள்ள ஆலமரத்தடியில் தான தர்மங்கள் செய்தால் நினைத்தது நிறைவேறும்.


* கங்கை நதி பிரவாகமெடுத்து ஓடிடும் காசியில், மகாளய அமாவாசையன்று தர்ப்பணாதி பூஜைகள் செய்வதை சாஸ்திரங்கள் பெருமையுடன் பேசுகின்றன.


* காசியின் அருகே உள்ள விஷ்ணுகயாவில் உள்ள ஆலமரத்தடியில் விஷ்ணு பாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அந்த விஷ்ணுபாதத்தில் மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்கள் வந்து சேரும்.


* சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலய திருக்குளத்தில் ஒவ்வொரு அமாவாசையன்றுமே முன்னோர்களுக்கு தர்ப்பணாதி காரியங்கள் விசேஷமாக நடைபெறுகிறது. அதிலும் மஹாளய அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் அவ்வாறு நேர்த்திக் கடன் நிறைவேற்றுவதைக் காணலாம்.


* கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டத்திற்கு அருகே உள்ள திலதைப்பதி எனும் திலதர்ப்பணபுரியில் மஹாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபட முன்னோர்கள் ஆசி கிட்டும். ராமபிரான் தன் தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது.


* சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில் மஹாளய அமாவாசை தினத்தன்று முன்னோர்களை வழிபட, அவர்கள் ஆசியால் வம்சம் தழைக்கும்.


* சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின் பகுதியில் மஹாளய அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் தம் முன்னோர் கடன்களை செய்து புண்ணியம் பெறுகின்றனர்.


* கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் மஹாளய அமாவாசையன்று அங்கு அருளும் கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து பின், அத்தல குளக்கரையில் முன்னோர் கடன் தீர்த்து அருள் பெறுபவர்கள் ஏராளம்.


* வேதாரண்யத்தில் ஆதிசேது எனும் கோடியக்கரை தீர்த்தக்கரையில் மூழ்கி மஹாளய அமாவாசை அன்று திதி கொடுத்து பக்தர்கள் வாழ்வில் வளம் பெறுகிறார்கள்.


* வாஞ்சியம் தலத்தில் உள்ள குப்த கங்கையில் மஹாளய அமாவாசை அன்று புனித நீராடி நீத்தார் கடனை நிறைவேற்றினால் மகத்தான புண்ணியம் கிட்டும்.


* காஞ்சிபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில், ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றினார். அத்தலத்தில் மஹாளயபட்ச தினத்தன்று நீத்தார் கடனை நிறைவேற்றினால் முன்னோர்களின் ஆசியுடன், திருமாலின் திருவருளும் கிட்டும்.


*  அளகாபுத்தூர் படிக்காசுநாதர் கோயிலில் முருகன் சங்கு சக்கரத்துடன் அருள்கிறார். அங்கு நவகிரகங்க சந்நதியில் சூரியனும் சந்திரனும் எதிரெதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். இதனால் மஹாளயபட்சத்தன்று அங்கு நீத்தார் கடனை நிறைவேற்றும் பக்தர்கள் அனேகம்.


* திருச்சிக்கு அருகே உள்ள பூவாளூர் திருமூலநாதர் ஆலயத்திற்கு அருகே ஓடும் பங்குனி ஆற்றின் கரையில் மஹாளயபட்ச தர்ப்பணம் செய்தால் திதி கொடுக்கத் தவறிய தோஷங்கள் நீங்கி, முன்னோர்கள் ஆசி கிட்டும்.


* திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சந்திர தீர்த்தம் அருகே உள்ள ஆலமரத்தடியில் ருத்ரபாதம் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. அங்கு மஹாளயபட்ச தர்ப்பணம் செய்து முன்னோர்கள் அருள் பெறுவோர் ஆயிரக்கணக்கில் உண்டு.


* திருப்பூவனம் பூவனநாதர் ஆலயத்தில் சூரியனால் உண்டாக்கப்பட்ட மணிகன்னிகை தீர்த்தக் கரையில் மஹாளயபட்ச தினத்தன்று தர்ப்பணாதி காரியங்களை புரிபவர்கள் முன்னோர்களின் பரிபூரண அருளைப் பெறுகிறார்கள்.


* விருத்த காசி எனப்படும் விருத்தாசலத்திலுள்ள விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திற்கு அருகேயே ஓடும் மணிமுத்தாறு நதி தீரத்திலும் நீத்தார் கடனை மக்கள் நிறைவேற்றுகிறார்கள்.


தொகுப்பு: ஜி.ராகவேந்திரன்...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,