மஹாளயஅமாவாசை ஞாயிற்றுக்கிழமை
இன்று மஹாளய அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வேறு. மக்கள் கூட்டம், கோயில்கள் கோயில் குளங்கள் கடற்கரை என்று- சென்னையில் -மறைந்த முன்னோர்களுக்கு மரியாதை செய்வதற்காக அலையோ அலையோ என்று காணும் பொங்கல் கூட்டத்தைப் போல் அலைகிறது.
இப்படி மயிலாப்பூர் திருக்குளத்துக்கு வந்த கூட்டத்துக்கு எவ்வித திட்டமிடலோ ஏற்பாடோ செய்து அலட்டிக் கொள்ளாத செய்யாத மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகம் வாழ்க வாழ்கவே.
நீளமாக கயிறு கட்டி குளத்துக்குள் யாரும் இறங்கி அசுத்தம் செய்யாமல் கடுமையாக பாதுகாப்பதற்கு மட்டும் பணியாட்கள் அமர்த்தப்பட்டு இருந்ததனால் ஒவ்வொரு பிளாட்பாரத்திலும் அசிங்கங்களை பொருட்ப்படுத்தாமல் கூட்டம் கூட்டமாய் மக்கள் காரியம் செய்து வைப்பவன் பிராமணனா இல்லையா சொல்லப்படுவது மந்திரமா இல்லையா என்று கூட பார்க்காமல் தங்கள் பித்ருக்களுக்கு தேங்காய் பழம் இத்யாதிகளோடு கூடவே பெருசு பெருசா தட்சனை பணமும் தட்டாமல் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அத்திரி பிருகு மரிசி கோத்திரத்தில் வந்தவர்கள் தான் இதை செய்ய வேண்டும் என்று எந்த உயர்நீதிமன்ற நீதிபதியும் அங்கு வந்து சொல்லவில்லை. பூணூல் அணிந்து இருந்த சிரார்த்தம் செய்து வைக்கும் ''அந்தண''ராக 99.9 % நபர்கள் அந்தணர் அல்லாத நந்தனர். பக்தர்களோ இந்து மக்களோ எள்ளளவும் முகம் சுளிக்கவில்லை குறை கூறவில்லை. தங்கள் சார்பில் தங்கள் முன்னோர்களுக்கு இறைவனை செய்யும் நபர்கள் ஜாதியை பற்றி எந்த பத்திரம் கவலைப்படவில்லை என்ற பேருண்மையை நீதிமன்றம் கவனிக்க வேண்டும். வடமொழி மந்திரங்களை (??) உச்சரிக்க குலமும் கல்வியும் வேண்டும் என்பதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை கண்ணப்ப நாயனார் ஸ்டைலில் அவரவர் தெரிந்ததை சடங்குகளை நிறைவேற்றிக் கொள்ள செல்ஃப் சர்வீஸ் பஃபே போன்று நடந்தது மிக நல்ல நிகழ்வு. இந்து இறைவனுக்கு நன்றி
அனைத்து ஜாதி அர்ச்சகர் அது இது என அறநிலையத்துறை சட்டங்களும் திட்டங்களும் சாதிக்கவே முடியாததை எந்த எதிர்ப்பும் இல்லாமல் 99.9 அனைத்து ஜாதி அ(ந)ந்தணார்கள் நிறைவேற்றிக் கொண்டிருந்தது ஆண்டவனே வந்து சம நீதியை அமல்படுத்தியது போல் இருந்தது. உச்சரிக்கப்பட்டதெல்லாம் மந்திரமும் இல்லை மாயமும் இல்லை 30 செகண்ட் களில் ஆச்சார அனுஷ்டானங்களை முடித்து மக்களை திருப்தி படுத்திக் கொண்டிருந்தார்கள். தட்சணை என்னும் வருமானம் ஒரு ஜாதியைச் சார்ந்த வந்து கொண்டிருந்தது நடைபெற்று விட்டது ஆச்சரியமும் ஆச்சரியமும் பலருக்கும் வந்த பணம் மடை திருப்பப்பட்டு இருந்ததும் மகிழ்ச்சி .
தேங்காய் பழ டெண்டர் அது இது என இல்லாமல் சம்பாதிக்கிறவன் சம்பாதிச்சுக்கோ என்று திறந்து விடப்பட்ட வர்த்தகம் நிர்மலா சீதாராமனுக்கு காழ்ப்பை உண்டு பண்ணலாம். அடுத்த வருஷம் மஹாளய அமாவாசை புதிய ஜிஎஸ்டி வரி விதிக்கப்படலாம்.
தானாக தோன்றுவது தான் சம நீதி.
ஆர் எஸ் எஸ் பிஜேபி அந்தணர் குலத்தவர் என எவரும் அந்தணர் அல்லாத இவர்கள் காரியம் செய்து கொடுக்க தகுதியற்றவர்கள் என்று மூச்சு விடவில்லை. பெரியாருக்கே வேலை இல்லை. எச் ராஜாவோ ஆராசாவோ இந்த மாற்றங்களுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ குரல் கொடுக்கத் தேவையில்லை.
சும்மாவா சொன்னான்
குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவன்
இடிச்சா சாணி புடிச்சு வச்சா பிள்ளையார்.
மனசு தான்யா நம்பிக்கை.
ஆசை நம்பிக்கையை தொங்கிக் கொண்டிருக்கிறது.
திருப்தி வந்தவுடன் ஆசை முடிந்து நம்பிக்கை வெற்றி பெற்று விட்டதாக கருதிக் கொள்கிறோம். குளக்கரை நிகழ்வுகளில் நம்பிக்கையும் நம்பிக்கையை நிறைவேற்றிய திருப்தியும் வெகுவாக கிடந்தன
குலம் கோத்திரம் பார்க்காமல் கோயில் வழிபாடு இருக்கனும்னு இன்னிக்காவது புரிஞ்சுக்கோங்க.
வண்ணார் புலையன் வேடன் முதலான தாழ்த்தப்பட்ட தாக பட்டியலிடப்படுபவர்கள் பலருக்கும் நாயன்மார் என இறைவனுக்கு நிகரான கௌரவத்தை தந்தது தமிழக கோயில் வழிபாட்டு சரித்திரம். அவர்களுக்கும் சிலை வைத்து வழிபடும்போது என்ன குலத்தவன் தான் வந்து என்னை பூஜிக்க வேண்டும் என இறைவன் சொன்னதாக சொல்லுவது ஃபிராடுத்தனத்தின் உச்சம் அதை இறைவனுக்கு நிகரான நீதிமன்றம் அடிக்கோடிடுவதே அசிங்கத்தின் உச்சம்.
அனைத்து ஜாதியினரும் பங்கு பெறுவதும் வருவாயை பங்கு போட்டுக் கொள்வதுமான இந்து சடங்கு விழாக்கள் வாழ்க வாழ்கவே.
வாரிசு அடிப்படையிலும் குலத் தொழிலாகவும் மற்றவர்களுக்கு கோயில்களில் அர்ச்சனை செய்து கொடுக்கும் ஒரு வேலையை தமக்கேதக்க வைத்துக் கொண்டு ஒரு சாரார் மட்டுமே கல்லா கட்டிக் கொண்டிருந்தது போக அவர்களே பிற குலத்தவர் தொழிலுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பி விட்டதால் குந்திக் கொண்டிருந்த பணிகளில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டது. வேறு வழி இல்லாமல் தகுதியோ திறமையோ அற்றவர்கள் கூட அங்கு ஆக்கிரமித்து குலம் கோத்திரம் முன் வைக்காமல் நெறிபிறழ்ந்து பணி செய்ய ஆரம்பிக்கிறார்கள் இது விரைவில் கோயில்களில் உள்ள அர்ச்சகர் பணியிலும் நடக்கும்.
Comments