பாப்லோ நெருடா நினைவுநாளின்று

 பாப்லோ நெருடா நினைவுநாளின்று
🥲
புரட்சியாளர் சேகுவேராவை சுட்டுக் கொல்லும்போது அவரது கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்று பாப்லோ நெருடாவினுடையது. இதில் இருந்தே தெரிந்துகொள்ளலாம்...பாப்லோ நெருடா எத்தகையவர் என்று. 1904ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி சிலி நாட்டில் பாரல் என்ற ஒரு கிராமத்தில் பிறந்தார் பாப்லோ நெருடா. அவருக்கு பெற்றோர் இட்ட பெயர் ‘ரிக்கார்டோ இலீசர் நெப்டாலி ரீயஸ் பொசால்தோ’. ஆனால் தனது பெயரை பாப்லோ நெருடா என்று மாற்றிக்கொண்டார். அதற்கு காரணம், செக்கோஸ்லேக்கியா நாட்டின் புரட்சிக் கவிஞர் நெருடா மீதான பற்றுதான். இதே பெயரில் காதல், புரட்சி என பல்வேறு தளங்களில் கவிதைகள் எழுதினார். இதனால் அவரது புகழ் நாடு முழுவதும் பரவியது.
புகழ்பெற்ற கவிஞரான பிறகு அவருக்கு பதவி தேடி வந்தது. கம்யூனிச சிந்தனையாளரான இவர், சிலியின் வெளியுறவுத் தூதராக ஸ்பெயின் நாட்டில் நியமிக்கப்பட்டார். ஸ்பெயின் நாட்டில் நடந்த உள்நாட்டு கலவரத்தில், புரட்சிப் படையினருக்கு கம்யூனிசத்தை கற்றுக் கொடுத்தார். உள்நாட்டில் புரட்சியைத் தூண்டியதாக ஸ்பெயின் நாடு அவரை வெளியேற்றியது. தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய நெருடா, தனது நாட்டிலேயே முதலாளித்துவம் கோலோச்சுகிறதே என்று கொதித்தெழுந்தார். ‘‘நமது நாட்டை அமெரிக்காவுக்கு விற்றுவிட்டார்” என அதிபருக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.
தொடர்ந்து தனது கவிதைகள் மூலமாக எதிர்ப்புகளைத் தெரிவிக்க ஆரம்பித்ததுமே, ‘உள்நாட்டில் கலவரத்தைத் தூண்டுகிறார்’ என்று குற்றம் சுமத்தி அவரை கைது செய்ய முனைந்தது அரசு. இதை அறிந்த நெருடா, சிலியில் இருந்து வெளியேறி, ரஷ்யா, கியூபா, பொலிவியா நாடுகளுக்கு சென்றார். அங்கு நடந்த புரட்சிப் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தார். வெளிநாட்டுத் தூதராக இலங்கை, ரங்கூன், சிங்கப்பூர், அர்ஜென்டினா, பாரீஸ் போன்ற நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார்.
1964ம் ஆண்டு பிரெஞ்சு தத்துவவாதியான பால் சார்த்தருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆனால் அவர், பாப்லோ நெருடாவிற்குதான் இந்த பரிசை கொடுத்திருக்க வேண்டும் என கூறி ஏற்க மறுத்துவிட்டார். இதன்பிறகு 1971ம் ஆண்டு பாப்லோ நெருடாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. சிலி நாட்டில் 1973ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்தது. மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. கம்யூனிஸ்ட் தலைவர்களும், ராணுவத்திற்கு எதிராக செயல்பட்ட ஆயிரக்கணக்கான மக்களும் கொல்லப்பட்டனர். புற்று நோயால் பாதிக்கப்பட்ட பாப்லோ நெருடா புதிய ராணுவ அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொதித்தெழுந்தார். விமர்சனம் செய்தார்.
அதனாலேயே அவர் வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டார். மருத்துவ வசதிகள் தடுக்கப்பட்டன. எந்த மருத்துவமும் கிடைக்காததால் 1973ம் ஆண்டு செப்.23ம் தேதி அவர் மரணம் அடைந்தார். மரணம் அடைந்தார் என்பதைவிட, கொன்றுவிட்டனர் என்றே சொல்லலாம். அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் கலந்துகொண்டனர். அவர் எழுதிய ‘குற்றம் கண்டு கொதிப்பவனுக்கு எதுவும் சாத்தியமே’ என்ற கவிதைகள் விண்ணைப் பிளக்கும் அளவுக்கு ஊர்வலத்தில் உச்சரிக்கப்பட்டன. மக்களின் ரத்தம் கொதித்தது.
கோபம் கொண்டு கொதித்தெழுந்த மக்கள், ராணுவ ஆட்சிக்கு எதிராக புரட்சி செய்தனர். பாப்லோவின் இறுதி ஊர்வலமே ராணுவத்திற்கு எதிரான புரட்சியாக மாறி சிலி நாட்டின் விடுதலைக்கு வித்திட்டது. தமிழில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று பாடிய கணியன் பூங்குன்றனார் போலவே நெருடாவும் “பூமியின் தோல் உலகெங்கும் ஒன்றேதான்” என்று பாடியுள்ளார். பிரிவினை சக்திகள் தலைதூக்கும் இக்காலத்தில் நெருடாவின் இந்த வரிகள் அதிகமாகவே தேவைப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,