எஸ்.பி. பி . நினைவு நாளின்று




பாடிய நிலா எஸ்.பி. பி . நினைவு நாளின்று🥲
பின்னணிப் பாடகராக மட்டுமல்ல, மக்களின் மனதை வருடிச் செல்லும் குரலுக்கு சொந்தக்காரர் மெளனித்து பூமியில் அடங்கிய நாள் இன்று. ஆம் பாடும் நிலா எஸ்.பி பாலசுப்பிரமணியம் மறைந்து திரையுலகம் அமாவாசையான நாள் இன்று. அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்த இந்த காந்த குரலில் தான் ரசிகர்கள் காதல் நட்பு சோகம் என எல்லா உணர்வுகளையும் உணர்ந்தார்கள். அது SPB எனும் மூன்று மந்திர எழுத்து. தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான எம்ஜிஆருக்கு முதல் முதலில் ஒலித்த இந்த குரல் பின்னாட்களில் ஒரு சூப்பர் ஸ்டாரை உருவாக்கியது என்றால் அது மிகையல்ல.. பலருக்கும் உயிர்மூச்சாகத் திகழ்ந்த உன்னதப் பாடகர். அந்தப் பலரும் அவர்மீது கொண்டிருந்த பாசம், பற்று, மரியாதை எதையும் தராசுக் கல் வைத்துத் தரம் பிரித்துவிட முடியாது. ஆதர்ச பாட்டு பயில்வானை ஆராதித்து, ஆனந்தம் அடைந்து, அர்ச்சித்து அகம் மகிழ்ந்தார்கள் அவர்கள்.
பாடல் வரிகளை அவற்றில் உள்ளடங்கிய பொருளுக்கு ஏற்ப மாடுலேஷன் கொடுத்து உயிர்ப்பிப்பதில் உலகமகா இசைக்கலைஞன் அவர். அதாவது நவரசங்களையும் தன் குரல் வழியே வெளிப்படுத்த முடியும் என்பதை அவர் நிகழ்த்திக் காட்டினார். காதல் ரசம் சொட்டும் பாடல்கள் ஒரு புறம் என்றால், பாடல்களில் நிகழ்த்தும் தன் அசாத்திய குறும்புத்தனத்தின் மூலம் நம்மை சிரிக்க வைக்கும்
மேலும் “கொட்டும் மழைக் காலம் உப்பு விக்கப் போனேன்... காற்றடிக்கும் நேரம் மாவு விக்கப் போனேன்...'' என்ற வாலியின் வரிகளில் (அபூர்வ சகோதரர்கள்) தமது குரலால் தவிப்பையும் உருக்கத்தையும் ஒருசேர வெளிப்படுத்துவார்.
“சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்” பாடலில் ஆக்ரோஷத்தையும் ஆத்திரத்தையும் அமர்க்களமாகப் பிரதிபலிப்பார்!
“மலரே மௌனமா...'' பாடலில் தர்பாரி கானடா ராகத்தின் சங்கதிகளை எஸ்.பி.பி அவிழ்த்து கோலிகுண்டுகள்போல உருள விடும்போது, உருகாத சங்கீத கலாநிதிகளே கிடையாது!
பாடல்களுக்கு நடுவே சிரித்தும் அழுதும், ரொமான்ஸ் செய்தும் கதாபாத்திரத்தின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, கேட்போரிடமும் அதே உணர்வுகளைக் கடத்திச் செல்லும் கலையை எஸ்.பி.பி எங்கே கற்றார் என்று கேட்பதே சிறுபிள்ளைத்தனம்! குருவிடம் குருகுலவாசம் இருந்து இதையெல்லாம் தெரிந்துகொள்ள முடியுமா என்ன? சங்கராபரணத்தில் இருந்து சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல்வேறு ஜானர்களில் பாடியிருக்கத்தான் முடியுமா? எஸ்.பி.பி-யின் ரத்தத்தில் இரண்டறக் கலந்துவிட்டிருக்கும் இணையற்ற ஆற்றல் அது!
இத்தனைக்கும் எஸ்.பி.பி அறிமுகமான காலகட்டத்த்தில் தமிழில் டி.எம்.சௌந்தரராஜன், பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்தனர். பாரம்பரிய இசை ஒழுங்குகளோடு பாடல்களைப் பாடிய அவர்களுக்கு மத்தியில் துள்ளல்மிக்க இளங்குரலாய் எஸ்.பி.பி தமிழுக்கு அறிமுகமாகிறார். பாடகரைப் பொறுத்தவரை அவர்களுக்கு நல்ல குரல் வாய்க்கப்பெறுவது பெரும் பேறுதான். அக்குரலைக் கொண்டு அவர்கள் நிகழ்த்தும் புதுமைகளாலேயே அவர்கள் வெற்றி பெற முடியும். எஸ்.பி.பி அவரது குரலைக் கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தினார்.
16 மொழிகளில் 42,000 பாடல்கள்! 45 படங்களுக்கு இசையமைப்பு! பல நூறு படங்களுக்கு கதாநாயகனுக்கு பின்னணி குரல்! 73 திரைப் படங்களில் நடிப்பு! சுமார் 9 தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பு! நான்கு மொழிகளில் ஆறு தேசிய விருதுகள்,பல்வேறு மாநில அரசின் எண்ணற்ற விருதுகள்…
அளவுக்கு இந்தியாவில் படுவேகமாக இயங்கிய ஒரு பாடகர் கிடையாது! ஒரே நாளில் 21 பாடல்களை19 பாடல்களையெல்லாம் பாடிக் கொடுத்த பெருமைக்குரிய ஒரே பாடகர்! ஒரு ஸ்டியோவிற்குள் நுழைந்தார் என்றால், 12 நிமிடத்தில் பாடலைப் பாடி வெளியேறிய சம்பவங்களும் நடந்துள்ளன! அந்த அளவுக்கு டூமச் பிஸி ஷெட்யூல்ட் கொண்ட பாடகராக அவர் விளங்கிய போதும் சிறிதும் கர்வமில்லாமல் எளிய மனிதனைப் போலவே நடந்து கொண்டார்.
1980 தொடங்கி கடைசி வரையில் விமானத்தில் அதிகமாகப் பறந்து,பறந்து, சென்னை, ஹைதராபாத், மும்பை, பெங்களுர்…என்று பாடல் ரிக்கார்டிங்குகளுக்காக பயணித்த பாடகர் அவர் ஒருவர் தான்!ரிகார்டிங்குகளுக்காக மட்டுமின்றி, இசைக் கச்சேரிகளுக்காகவும் அவர் உலகம் முழுக்க பயணித்துள்ளார்.அவர் பயணிக்காத நாடுகளே இல்லை என சொல்லக் கூடிய அளவுக்குப் பயணித்துள்ளார். ரஷ்யா போகமுடியவில்லை என நெடுங்காலமாக நினைத்திருந்தார்.அதுவும், நிறைவேறியது! ரஷ்ய ஜனாதிபதி மாளிகைக்கே சென்று பாடும் வாய்ப்பு பெற்றார்!
உலக அளவில் பேசப்பட்ட காந்தி திரைப்படத்தில், காந்தியாக நடித்த பென்கிங்ஸ்லிக்கு தான் குரல் கொடுத்த அனுபவத்தை பெருமையாகக் கருதினார் எஸ்.பி.பி! கமலஹாசனுக்கு மட்டும் 120 தெலுங்கு படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். தெலுகு மக்களைப் பொறுத்தவரைக் கமலையும்,எஸ்.பி.பியையும் பிரித்தே பார்க்கமுடியாது என்று சொல்லுமளவுக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளனர். இந்த வகையில் சுமார் இருபதிற்கும் மேற்பட்ட பெரிய நடிகர்களுக்கும் எஸ்.பி.பி பின்னணி குரல் கொடுத்துள்ளார்.
55 ஆண்டுகளில் நான்கு தலைமுறையைச் சேர்ந்த பல மொழிகள் பேசும் நூற்றுக்கணக்கான கதாநாயகர்களின் பாட்டுக் குரலாக அவர் ஒலித்துள்ளார். நான்கு தலைமுறை இசை அமைப்பாளர்களுடன் இணக்கமாக இயங்கியுள்ளார். நான்கு தலைமுறை பெண் பின்னணி பாடகிகளோடும் ’டூயட்’ பாடியுள்ளார்.தலைமுறை இடைவெளி அவரை தடுக்கவில்லை! மாறிய இசை கலாச்சாரத்தோடும் முடிந்த அளவு அவர் இணைந்து பயணிக்கவே செய்தார்! திரை இசையில் தாத்தா காலம் தொடங்கி கொள்ளுபேரன்கள் காலம் வரை அவர் இணைந்து பயணித்த ஒரு அபூர்வக் கலைஞர் இன்றும் நம்முடன் வாழ்கிறார் என்றே தான் சொல்ல வேண்டும்!
 From the Desk கட்டிங் கண்ணையா!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி