தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு


 மலரும் நினைவுகள் .


எம்ஜிஆர் திரைப்படங்களில் தாய் கதாபாத்திரங்கள் வலுவானதாக இருந்தன. தாய் சொல்லை மதித்து நடக்கும் அன்பு மகனாக அவர் வாழ்ந்து காட்டியது, ரசிகர்களை தாய்மீது அன்பு கொள்ள வைத்தது. 


தாயை மதிக்கும் பண்பை வளர்த்தது. தாயின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் சிறப்புறுவார்கள், சிறந்த புகழ் பெறுவார்கள் என்பதை வலியுறுத்திச் சொல்லியது.


 சிறுவயதிலேயே தந்தையை இழந்த அவர் உண்மையாகவே தன் தாயின் மீது அளவிலாப் பாசமும் பற்றும் கொண்டிருந்தார். அதைத்தான் அவர் திரையில் வெளிப்படுத்தினார். 


மகளிர் மீது இவர் காட்டிய பரிவும் பாசமும் ‘தாய்க்குலம்’ என்று ஒரு புதிய சொல்லாடலைத் தோற்றுவித்தது.


30 ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்களுக்குப் பிடித்த வகையில் மட்டுமே நடித்து ரசிகர்களைப் பரவசப்படுத்தி தமிழ்த்திரையுலகத்தைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார் என்பதுதான் உண்மை.


எம்ஜிஆரின் இன்னுமொரு வலுவான ஆயுதம் பாடல்கள். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விதமாக ரசிகர்களைக் கிறங்கடித்தன.


 அவரின் சமூக நோக்கத்தை வெளிப்படுத்தும் தத்துவப் பாடல்களும், அரசியல் சார்ந்த கொள்கைப்பாடல்களும், திராவிடப் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் பாடல்களும் ரசிகர்களின் மனங்களில் தங்க சிம்மாசனமிட்டு அமர்ந்தன. 


அச்சம் என்பது மடமையடா, 

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும், அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும், தாயகத்தின் சுதந்திரமே எங்கள் கொள்கை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால், புதிய வானம் புதிய பூமி, 

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை, 

ஓடி ஓடி உழைக்கணும், 

கொடுத்ததெல்லாம் கொடுத்தான், 

கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும் என்று எண்ணிலடங்கா பாடல்கள் இன்றும் ரீங்காரமிட்டுக் கொண்டுள்ளன.


 தாயில்லாமல் நானில்லை, 

செல்லக் கிளியே மெல்லப் பேசு, 

உலகம் பிறந்தது எனக்காக, 

இந்த பச்சைக்கிளிக்கொரு செவ்வந்திப் பூவில், திருவளர்செல்வி மங்கையர்க்கரசி, பூமழை தூவி வசந்தங்கள் வாழ்த்த என்று பல பாடல்கள் பாசமழையில் நனைய வைக்கின்றன. 


உடுமலை நாராயணகவி தொடங்கி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கவியரசர் கண்ணதாசன், வாலி, புலமைப் பித்தன் என்று எம்ஜிஆருக்காகப் பாட்டெழுதும் கவிஞர்களுக்கு, வார்த்தைகளும் வரிகளும் அமுத சுரபியாய்க் கொட்டிக் குவித்தன.


 பாடல்களைத் தேர்வு செய்வதில் அவர் என்றும் சமரசம் செய்துகொண்டதேயில்லை. அதனால்தான், அவரது திரைப்படங்களில் பாடல்களுக்கு தனிச்சிறப்பு இருந்தது. அவரது பாடல்களுக்கு தனி மதிப்பும் இருந்தது.


தன்னுடைய திரைப்படங்களால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் அதிக அக்கறை காட்டினார். 


அதனால்தான் ஒரு படத்துக்கும் மற்றொரு படத்துக்கும் குறைந்த பட்சம் 3 மாத இடைவெளியை அமைத்து வெளியிடச் செய்தார். 


இடைவெளி அதிகரித்து ரசிகனும் ஏமாந்துவிடக் கூடாது, இடைவெளி குறைவதால், தயாரிப்பாளரும் நஷ்டமடைந்துவிடக் கூடாது என்று சரியான தெளிவான திட்டமிட்டுத் தன் தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தார்.


வீரம் பாசம் விவேகம் மட்டுமின்றி நகைச்சுவையிலும் எம்ஜிஆர் அவர்கள் குறை வைத்ததில்லை. 


அலிபாபாவும் 40 திருடர்களும், சபாஷ் மாப்பிளே, மாட்டுக்கார வேலன், பெரிய இடத்துப் பெண், குடியிருந்த கோயில் என்று பல படங்களில் நகைச்சுவைக்குப் பஞ்சமேயில்லை. 


உருக்கமான நடிப்புக்கு உதாரணங்களாய் பெற்றால்தான் பிள்ளையா, பணம் படைத்தவன், எங்க வீட்டுப் பிள்ளை என்றும், 


வீரத்துக்கு அடிமைப்பெண், அரச கட்டளை, மதுரை வீரன், மன்னாதி மன்னன், மகாதேவி என்றும் ஏராளமாய்! 


இப்படி நவரசங்களையும் வெளிப்படுத்தும் நயமான கதாபாத்திரங்களிலெல்லாம் நடித்து தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்து, ரிக்சாக்காரன் திரைப்படத்துக்காக இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான ‘பாரத்’ விருதும் பெற்றார்.


courtesy-ஜியாவுத்தீன்.


பகிர்வு

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி