பாடும் நிலா S.P.B.யின் குரல் ஓய்ந்து இன்றுடன் இரண்டு வருடங்களா


 பாலு அண்ணா என உரிமையோடும், பிரியத்தோடும், அன்போடும் நான் அழைத்த பாடும் நிலா S.P.B.யின் குரல் ஓய்ந்து இன்றுடன் இரண்டு வருடங்களா? காலந்தான் எத்தனை வேகமாகப் பறக்கிறது?


வாழ்க்கையில் உறவும், பிரிவும் மிகச் சாதாரணமானவைதான். என்றாலும் சிலரது பிரிவுகள் நமது மனதில் நிலையான வடுக்களை பதித்து விடுகின்றன. இயற்கையான மரணங்கள், அதாவது வயோதிபத் தாக்கத்தால் ஏற்படக்கூடிய இழப்புகள் காலப் போக்கில் நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஓரளவு மறக்கவும் வைத்து விடுகின்றன. என்றாலும் அகால மரணங்களே நம்மைப் பெரிதும் பாதித்து, மனதிலே நீங்காத வடுக்களை ஏற்படுத்தி விடுகின்றன.


அந்த வகையில் மெல்லிசை மன்னர், டிஎம்எஸ் அவர்கள் -  இப்படி இசையால் நம் மனதில் நீங்கா இடம் பெற்ற பலரின் இழப்புகள் இயற்கையானவை என்பதால் வருத்தம் இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தன.  ஆனால் பாலு அண்ணா எழுபதுகளைத் தாண்டியிருந்தாலும் நமது குடும்பத்தில் ஒருவரைப் போல் நம்மோடு வாழ்ந்து, இடைவெளி இல்லாமல் இசையால், பாடல்களால், குரலால் நம்மை மகிழ்வித்துக் கொண்டிருந்தார். அதனால்தான் அவரின் அகால (நோய்த்தாக்க) மரணம் நம்மை/என்னை நிலை குலையச் செய்தது.


இதற்குப் பிரதான காரணம் திறமையின், புகழின் உச்சியில் இருந்தபோதும் மிக எளிமையான, பண்பாளராக, மிகச் சாதாரண மனிதராக நம் மத்தியிலே வலம் வந்ததுதான் என்பது மறுக்க முடியாத உண்மை. அவரது குரல் நம்மை மகிழ்விக்க இறைவனால் அளிக்கப்பட்ட வரம் என்றால் அதுவும் மிகையில்லை.


இவை மட்டுமல்லாது, அவரது ஐம்பது வருட கால இசைத்துறை அனுபவத்தில் அவர் செய்யாத சாதனைகளே இல்லை எனலாம். அந்தளவுக்கு இமாலயத் திறமை கொண்ட ஒரு இசை மேதை அவர். என்னைப் பல தடவைகள் உருகவும், ஏன் அழவும் வைத்த பாடகர்களில் பாலு அண்ணாவுக்குத் தனி இடம் உண்டு. அது என் உயிர் பிரியும் வரை மறையப் போவதில்லை.


பாலு அண்ணா என்ற உலகப் புகழ் இசைக் கலைஞனைப் பற்றி எழுத முற்பட்டால் என் கைகள் ஓயாது. எழுதிக் கொண்டே இருக்கும். அந்தளவுக்கு என் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பாலு அண்ணா. எத்தனையோ கலைஞர்களை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பை எனக்களித்த இறைவன், எவ்வளவோ முயற்சிகள் செய்தும் இறுதிவரை அவரைச் சந்திக்க இயலாமல் செய்துவிட்டது எனது பெரும் துரதிர்ஷ்டம். அந்த வடுவும் இறுதிவரை என் மனதை விட்டு அகலாது வாட்டிக் கொண்டேதான் இருக்கும்.


1970களில் அவர் பாடிப் பிரபலமடைந்த பாடலின் வரிகள் இறுதியில் அவருக்கும், எழுதிய கவியரசுவுக்குமே உதாரணமாகிப் போய்விட்ட கொடுமையை நினைத்தால் ஓவென்று அழ வேண்டும் போலிருக்கிறது.


"கடவுளின் படைப்பிலே

 கவிதையும் உண்டு

 காந்தியைப் போலவே காவியம் உண்டு

 முடிவு விளங்காத தொடர்கதை உண்டு

 முடிக்க வேண்டுமென்று

 முடிப்பதும் உண்டு"


ஆமாம், பாலு அண்ணாவை (கவியரசுவையும்) முடிக்க வேண்டுமென்றுதான் இறைவன் முடித்துவிட்டான்.


தாங்க முடியாத சோகத்துடனும், நெஞ்சை அழுத்தும் நினைவுகளுடனும் 

பாலு அண்ணாவுக்கு என்னால் செய்ய முடிந்தது இந்தப் பதிவு மட்டும்தானே?


பாலு அண்ணா, இதை எழுதும்போது என் விழிகளில் வழியும் கண்ணீர் உங்கள் பாதங்களில் விழட்டும். என் உடல் மண்ணில் வீழும் நாள்வரை என் மனதில் உங்கள் குரல் ஒலித்துக் கொண்டேதான் இருக்கும். அது மட்டுமே உங்களுக்காக நான் செலுத்தும் நன்றிக் கடன் அண்ணா.♥♥♥


#ஆத்மார்த்த_அஞ்சலியுடன்

#பாத_வணக்கம்_பாலு_அண்ணா.


Loganadan Ps


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,