அனந்தனுக்கு 1000 நாமங்கள்!*

 


அனந்தனுக்கு 1000 நாமங்கள்!*


நன்றி குங்குமம் ஆன்மிகம்


480. அக்ஷர ஸதே நமஹ:(Akshara Sathey namaha)


(திருநாமங்கள் 471 முதல் 482 வரை - தர்மமே வடிவெடுத்தவர் திருமால்)


நான்கு மாணவர்கள் கல்லூரி வகுப்புக்குத் தாமதமாகச் சென்றார்கள். பேராசிரியர் நால்வரிடமும் தாமத வருகைக்கான காரணத்தைக் கேட்டார். அப்போது, நால்வரும் ஒரே குரலில், “எங்கள் காரின் சக்கரம் பஞ்சராகி விட்டது. அதனால்தான் தாமதமாக வந்தோம்!” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட பேராசிரியர், நால்வரையும் வகுப்புக்குள்ளே அனுமதித்தார். ஆனால், நால்வரையும் வகுப்பின் நான்கு மூலைகளிலே தனித்தனியாக அமர்த்தினார். அதன்பின் ஒவ்வொருவர் கையிலும் ஒரு பேப்பரை வழங்கினார். நால்வரையும் பார்த்து, “நீங்கள் வந்த கார் பஞ்சர் ஆனது என்று சொன்னீர்கள் இல்லையா? எந்த டயர் பஞ்சர் ஆனது என்பதை இந்தத் தாளில் நீங்கள் ஒவ்வொருவரும் வரைந்து காட்ட வேண்டும்!” என்று சொன்னார்.


நால்வரும் தாள்களோடு அமர்ந்திருக்க, பாடம் எடுக்கத் தொடங்கினார் பேராசிரியர். “உண்மை என்பது எப்போதும் மாறவே மாறாது. பொய் என்பது மாறிக்கொண்டே இருக்கும்!” என்று பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் அவர். இந்த மாணவர்கள் நால்வரும் என்ன செய்வது என்று புரியாமல் விழித்தார்கள். பேராசிரியரிடம் வசமாக மாட்டிக் கொண்டோமே, எப்படித் தப்பிப்பது என்று புரியவில்லை. வேறு வழியில்லாமல் நால்வரும் பேராசிரியர் சொன்னபடி அந்தத் தாளில் படத்தை வரைந்து பேராசிரியரிடம் வழங்கினார்கள்.


நான்கு தாள்களையும் எடுத்துக் கொண்டு கரும்பலகை அருகே சென்ற பேராசிரியர், அவற்றைத் தூக்கி வகுப்பில் இருந்த எல்லா மாணவர்களுக்கும் காட்டினார். பார்த்தால், முதல் மாணவர் காரின் முன்புறத்தில் ஓட்டுநரின் இருக்கை பக்கம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். இரண்டாவது மாணவர், காரின் முன்புறத்தில் ஓட்டுநரின் இருக்கையின் எதிர்புறம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். மூன்றாம் மாணவர், காரின் பின்புறத்தில் ஓட்டுநர் பக்கம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார். நான்காம் மாணவர், காரின் பின்புறத்தில் ஓட்டுநருக்கு எதிர்புறம் இருக்கும் சக்கரம் பஞ்சர் ஆனதாகப் படம் வரைந்து இருந்தார்.


நான்கு தாள்களையும் மாணவர்களிடம் காட்டிவிட்டுப் பேராசிரியர் சொன்னாராம், “நான் அப்போதே சொன்னேன் அல்லவா? உண்மை என்பது என்றுமே மாறாது. பொய் என்பது மாறிக் கொண்டே இருக்கும் என்று! இதோ இந்தத் தாள்களைப் பாருங்கள். இவர்கள் கார் பஞ்சர் என்று சொன்னது பொய். அதனால்தான் ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு விதமாக மாறிமாறிப் படம் வருகிறது. உண்மையாகவே கார் பஞ்சர் ஆகியிருந்தால், மாறாமல் ஒரே மாதிரி வந்திருக்கும் அல்லவா?” என்று.


இதிலிருந்து நாம் உணர்வது என்னவென்றால், இறைவனை ஸத்யம் என்று வேதங்கள் குறிப்பிடுகின்றன. ஸத்யம் என்றால் உண்மை என்று பொருள். அதாவது, மாறாமல் இருப்பவர் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். வடமொழியில், `க்ஷரம்’ என்றால் அழிவது தேய்வது என்று பொருள். `அக்ஷரம்’ என்றால் அழியாமல் தேயாமல் மாறாமல் இருப்பது என்று பொருள். திருமால் எந்த ஒரு மாறுதலுக்கும் உட்படாமல் இருப்பதால் ‘அக்ஷரம்’ என்று அழைக்கப்படுகிறார்.


அதனால்தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் அவரை ‘அக்ஷரம் ஸத்’ என்று அழைக்கிறது.`அக்ஷரம்’ (Aksharam) என்றால் மாறாதவர்,ஸத் என்றால் உயர்ந்து இருப்பவர் (கடந்த திருநாம விளக்கத்தில் இதன் விரிவு உள்ளது). ‘அக்ஷரம் ஸத்’ (Aksharam sath) என்றால் தன்நிலை மாறாமல் எப்போதும் உயர்ந்து இருப்பவர். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 480-வது திருநாமம்.


“அக்ஷரஸதே நமஹ:” (Akshara Sathey namaha) என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் மனம், அறநெறியிலிருந்து மாறாமல் இருக்கும்படி திருமால் அருள்புரிவார்.


481. அஸதே நமஹ: (Asathey namaha)


திருமாலைத் தரிசிப்பதற்காகக் காரிய வைகுண்ட லோகத்துக்கு சனத்குமார முனிவர்கள் நால்வரும் சென்றார்கள். அங்கே வாயில் காப்பாளர்களாக நின்றிருந்த ஜயனும் விஜயனும் தடுத்தார்கள். “அடியார்கள் பகவானைத் தரிசிக்கச் செல்லும்போது, அவர்களைத் தடுக்கும் உரிமை யாருக்குமே கிடையாது! அப்படியிருக்க, எங்களை எப்படி நீங்கள் தடுக்க முடியும்? இறைவனின் தொண்டர்களாக இருக்கும் தகுதியே உங்கள் இருவருக்கும் இல்லை! ஆகவே, நீங்கள் பூமியில் போய்ப் பிறக்க வேண்டும்!” என்று சனத்குமாரர்கள் ஜய - விஜயர்களுக்கு சாபம் கொடுத்தார்கள்.


வெளியே நடப்பதைத் தன் ஞான திருஷ்டியால் அறிந்த திருமால், கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்து சனத்குமாரர்களுக்குத் தரிசனம் கொடுத்தார். அவரைத் தரிசித்த சனத்குமாரர்கள், திருமாலைப் பலவாறு துதிசெய்தார்கள். அதன்பின், “இறைவா! உனது அனுமதி இல்லாமல் உன் தொண்டர்களான ஜய - விஜயர்களை நாங்கள் சபித்துவிட்டோம்! எங்களை மன்னித்தருள வேண்டும்! தொண்டர்கள் தவறு செய்தால், தலைவனிடம் முறையிடுவது தானே முறையாகும்? நாங்களே அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ளலாமா? எங்களை மன்னிப்பாயாக!” என்று வேண்டினார்கள்.


அப்போது திருமால், “இல்லை முனிவர்களே! என் பக்தர்களுக்கு விரோதமாக இருக்கும் எதையுமே நான் விரும்பமாட்டேன். என் கை, என் பக்தர்களுக்கு விரோதமாகச் செயல்பட்டால் என் கையை வெட்டிக் கொள்ளவும் நான் தயங்க மாட்டேன். எப்போது என் பக்தர்களான உங்களிடம் இவர்கள் அபச்சாரப்பட்டு விட்டார்களோ, இவர்களுக்கு சாபம் தந்ததில் எந்தத் தவறும் இல்லை!” என்றார். மேலும் ஜய - விஜயர்களைப் பார்த்து, “நீங்கள் ஆயிரம் ஜன்மங்கள் பூமியில் பிறக்க வேண்டும்!” என்று சொன்னார் திருமால். “ஆயிரம் ஜன்மங்கள் உன்னைப் பிரிந்திருக்க எங்களால் முடியாதே!” என்று பகவானிடம் கெஞ்சினார்கள் ஜய - விஜயர்கள். சனத்குமாரர்களின் பாதங்களிலும் விழுந்து தங்களை மன்னித்தருளுமாறு கோரினார்கள்.


மனம் இரங்கிய சனத்குமாரர்கள் திருமாலிடம், “இவர்களுக்கு நீங்கள் வழங்கிய தண்டனையைச் சற்றே குறைத்தருள வேண்டும்!” என்றார்கள். உடனே திருமால், “ஜய விஜயர்களே! உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் தருகிறேன். ஒன்று, நல்ல பக்தர்களாகப் பல பிறவிகள் பிறக்கிறீர்களா? அல்லது தீயவர்களாக மூன்றே பிறவி எடுக்கிறீர்களா?” என்று கேட்டார். “தீயவர்களாயினும் மூன்றே பிறவிகள் போதும்! அதற்கு மேல் பிறவிகள் வேண்டாம்!” என்றார்கள் ஜய - விஜயர்கள். “மூன்று பிறவிகளிலும் நானே உங்களை வந்து அழிப்பேன்! நீங்கள் அதன்பின் இதே காரிய வைகுண்டத்துக்குத் திரும்ப வந்துவிடுவீர்கள்!” என்று பதில் அளித்தார் திருமால்.


அதன்படி ஜயனும் விஜயனும் ஹிரண்ய கசிபுவாகவும், ஹிரண்யாட்சனாகவும் பிறந்தார்கள். அவர்களை முறையே நரசிம்ம அவதாரம், வராக அவதாரம் ஆகிய இரு அவதாரங்களால் அழித்தார் திருமால். அடுத்து ராவணனாகவும் கும்பகர்ணனாகவும் அவர்களே வந்து பிறக்க, ராமாவதாரத்தில் அவர்களை முடித்தார் திருமால். முடிவாக, சிசுபாலனாகவும் தந்தவக்த்ரனாகவும் வந்து பிறக்க, அவர்களைக் கிருஷ்ணாவதாரத்தில் முடித்தார் திருமால். இப்படி மூன்று பிறவிகளை நிறைவு செய்தபின், அவர்கள் பழையபடி வாயில் காப்பாளர் பதவிகளைப் பெற்றுவிட்டார்கள்.


ஆக, ஜய விஜயர்களைப் போல் அடியார்களுக்குத் தீங்கிழைத்தல் போன்ற பாபச் செயல்களில் ஈடுபடுவோர்க்குப் பிறவிப்பிணி என்னும் தண்டனையைத் திருமால் அளிக்கிறார். உலகியல் வாழ்க்கையாகிய பிறவிச் சுழற்சிக்கு அஸத் என்று பெயர். பாபிகளுக்கு அந்த அஸத் ஆகிய பிறவிச் சுழற்சியைத் தருவதாலே, திருமால் ‘அஸத்’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 481-வது திருநாமம்.“அஸதே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள் எந்தச் சூழலிலும் சிக்கிக் கொள்ளாதபடி திருமால் காத்தருள்வார்.


482. அஸத் க்ஷராய நமஹ:(Asath-Ksharaaya namaha)


(குறிப்பு: ஸ்ரீபராசர பட்டர் தமது விளக்கவுரையில், அஸத்க்ஷரம் ஆகிய இரு பதங்களை ஒன்றாகச் சேர்த்து அஸத்க்ஷரம் என்று 482-வது திருநாமம் அமைந்திருப்பதாக விளக்கியுள்ளார்)

மகாபாரதப் போர் தொடங்கப் போகிறது. எந்தெந்த மன்னர்கள் யாரோடு கூட்டணி வைக்கப்போகிறார்கள் என்பதே அனைவரின் மத்தியிலும் பரபரப்பான பேச்சாக இருந்தது. கண்ணபிரானின் ஆதரவு யாருக்கு என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாக விவாத மேடைகளில் இடம்பெற்று வந்தது.


இந்தச் சூழலில், தர்மபுத்திரர் அர்ஜுனனிடம், “கண்ணன் எப்படியும் தர்மத்தின் பக்கம்தான் நிற்பார். எனவே, அவரது ஆதரவு நமக்குத்தான். இருந்தாலும்கூட, நாம் பகவானிடம் முறைப்படி சென்று அவரது ஆதரவு வேண்டும் என்று கோருவதுதான் முறை. அவருக்கு உரிய மரியாதையைச் செலுத்தாமல் இருந்துவிடக் கூடாது. எனவே நீ போய்க் கண்ணனைச் சந்தித்து அவரது ஆதரவையும் ஆசியையும் பெற்று வா!” என்று சொல்லித் துவாரகைக்கு அனுப்பிவைத்தார்.


மறுபுறம் சகுனி துரியோதனனிடம், “போர் என்று வந்துவிட்டால் மானம் அவமானம் எல்லாம் பார்க்கக் கூடாது. யார் நம் பக்கம் வந்தாலும் அணி சேர்த்துக்கொள்ள வேண்டும். பாண்டவர்களுக்குக் கண்ணன் மாமன் மகன் என்றால், உனக்குக் கண்ணன் சம்பந்தி ஆவான். எனவே கண்ணனின் ஆதரவைக் கேட்டு நமக்கு வாங்கி வந்து விடு!” என்று சொல்லிக் கொடுத்து அனுப்பி வைத்தான். அர்ஜுனன் துரியோதனன் இருவரும் துவாரகையை அடைந்தார்கள். இதை அறிந்த கண்ணன், தனது பணியாட்களை அழைத்து, அரண்மனையில் உள்ள அனைத்து ஆசனங்களையும் ஒளித்து வைக்கச் சொன்னான். தனக்கே உரிய கட்டிலில் கண்ணன் பள்ளிகொள்ள, அவனது தலைமாட்டில் ஓர் ஆசனமும், திருவடிவாரத்தில் ஒரு முக்காலியும் மட்டுமே போடப்பட்டிருந்தன.


முதலில் உள்ளே வந்த துரியோதனன், கண்ணன் துயில்கொண்டிருப்பதைப் பார்த்து விட்டு, “எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்? இந்த மாடு மேய்ப்பவன் விழிக்கும் வரை காத்திருந்துதான் ஆதரவு பெற வேண்டுமோ?” என்று சிந்தித்தபடி, தனது தலைகனத்துக்கு ஏற்றபடித் தலைமாட்டில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டான். அடுத்து வந்த அர்ஜுனன், கண்ணன் விழித்துக் கொள்ளும் வரை காத்திருப்போம் என்று பொறுமையுடன், அடியவன் என்ற முறையில் கண்ணனின் திருவடிவாரத்தில் இருந்த முக்காலியிலே அமர்ந்து கொண்டான். இருவரும் வந்ததை அறிந்துகொண்ட கண்ணன் கண்விழித்து, “அர்ஜுனா! வா.. வா!” என்ன விஷயம் என்றான். துரியோதனன், “நான்தான் முதலில் வந்தேன்! என்னைக் கவனிக்கவில்லையா?” என்று கேட்டான்.


கண்ணனோ, “நீ முதலில்

வந்திருக்கலாம். ஆனால், நான் முதலில்

அர்ஜுனனைத் தானே பார்த்தேன்!”

என்றான்.


இருவரும் கண்ணனின் ஆதரவு யாருக்கு என்று கேட்டார்கள். அப்போது கண்ணன், “உங்கள் இருவருக்குமே உதவ நான் கடமைப் பட்டிருக்கிறேன். எனது நவகோடி நாராயண சேனையை விரும்புவோர் அதைக் கேட்கலாம். ஆயுதமே எடுக்காத என்னை விரும்புவோர் என்னைக் கேட்கலாம்!” என்றான்.“முதல் வாய்ப்பு இளையவனான அர்ஜுனனுக்கே! கேள் அர்ஜுனா!” என்று கண்ணன் சொல்ல, “எனக்கு நீ மட்டும் போதும்!” என்று சொல்லி விட்டான் அர்ஜுனன். துரியோதனனோ, பெரும் மகிழ்ச்சியோடு நவகோடி நாராயண சேனை என்ற மிகப்பெரிய சேனையைக் கண்ணனிடம் வாங்கிச் சென்றான். ஆனால், முடிவில் என்ன ஆனது? கண்ணனின் அருளும் வெற்றியும் அர்ஜுனனுக்குத் தான் கிடைத்தது. தலைக்கனத்தைக் காட்டிய துரியோதனனுக்கோ தோல்வியும் மரணமுமே கிடைத்தது.


துரியோதனனைப் போல தீய எண்ணம் கொண்டவர்களுக்கு அஸத் என்று பெயர். க்ஷரம் என்றால் நிலையில்லாதவன் என்று பொருள். ‘அஸத்க்ஷரம்’ என்றால் தீயவர்களிடத்தில் நிலைத்து நிற்காதவர் என்று பொருள். நல்லவர்களை இறைவன் சோதித்தாலும் கைவிடமாட்டார், தீயவர்களுக்கு இறைவன் நிறைய கொடுப்பது போல் இருந்தாலும் கைவிட்டுவிடுவார் என்று பிரசித்தமாகச் சொல்லப்படுகிறது அல்லவா?


இப்படித் தீயவர்களிடம் நிலைத்து நில்லாமல் இருப்பதால், திருமால் ‘அஸத்க்ஷரம்’ எனப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 482-வது திருநாமம். “அஸத்க்ஷராய நமஹ:” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்களிடம் திருமால் என்றும் நிலைத்திருந்து, மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி அருள்வார்.


483. அவிக்ஞாத்ரே நமஹ: (Avignaathrey namaha)


“தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாள் ஆகிலும் சிதகு உரைக்குமேல்

என்னடியார் அது செய்யார் செய்தாரேல் நன்று செய்தார் என்பர்”


என்று பெரியாழ்வார் பாடுகிறார்.


இதன் கருத்து யாதெனில், ஒரு ஜீவாத்மா பற்பல தவறுகள் செய்துவிட்டு, பின்னொரு சமயம் மனம் திருந்தித் திருமகளின் திருவடிகளைப் பற்றி அவளது பரிந்துரையோடு திருமாலிடம் சரண் அடைகிறான். திருமகளின் பரிந்துரையை ஏற்ற திருமால், அவனை ஏற்றுக்கொள்வதாகச் சம்மதித்து விடுகிறார்.திருமால் சம்மதித்த பின் திருமகள்,“சுவாமி! இவன் இதுவரை செய்த பாபங்களை எல்லாம் கொஞ்சம் நினைத்துப் பார்த்தீர்களா? பலப்பலப் பொய்கள் பேசி இருக்கிறான். பிறருக்கு எந்த உதவியும் இவன் செய்ததில்லை. மனதில் ஈரமோ இரக்கமோ இல்லாதவனாக இருந்திருக்கிறான். இவனுக்குப் போய் அருள்புரியப் போகிறீர்களா? உங்கள் முடிவைச் சற்றே மறுபரிசீலனை செய்யுங்களேன்!” என்று சொல்கிறாளாம்.


இப்படி மகாலட்சுமி சொன்னவாறே, திருமால், “இல்லை தேவி! அவன் எனது பக்தன் என்று அபிமானித்து விட்டேன்! அங்கீகரித்து விட்டேன்! என் பக்தன் அப்படிப்பட்ட தவறை ஒருநாளும் செய்ய மாட்டான்!” என்று பதில் சொல்வாராம். அவன் குற்றம் செய்தமைக்கான ஆதாரத்தைத் திருமகள் எடுத்துக் காட்டினாலும், “அப்படி என் பக்தன்தான் செய்திருக்கிறான் என்றால் அவன் நன்றாகத் தான் செய்திருக்கிறான், நல்ல செயல்தான் செய்திருக்கிறான் என்று பொருள்!


எனவே, நான் அவனைக் காப்பாற்றியே தீருவேன்!” என்று பதில் சொல்வாராம்.தான் பரிந்துரைத்துத் திருமால் திருவடி களில் சேர்த்த பக்தன் மீது திருமகளே ஏன் பழிசொல்ல வேண்டும்? ஏனெனில், நாம் ஒரு குச்சியைப் பூமியில் நட்டால் அதை ஆட்டிப் பார்ப்போம். அது குச்சியை வெளியே எடுப்பதற்காக அன்று. குச்சி நன்றாக ஊன்றி இருக்கிறதா என்று சோதித்துப் பார்ப்பதற்காகத்தானே?


அதுபோலத்தான், மகாலட்சுமி பக்தனுக்காகத் திருமாலிடம் பரிந்துரை செய்துவிட்டு அந்த பக்தனைக் காப்பதில் அவருக்கு எவ்வளவு தூரம் உறுதி இருக்கிறது என்பதைப் பரிசோதித்துப் பார்க்கவே அவரிடம் அப்பக்தனைப் பற்றிச் சில குறைகளைச் சொல்லிப் பார்க்கிறாள். “என் அடியார் அது செய்யார்!” என்றோ “என்னடி? யார் அது செய்யார்?” என்றோ திருமால் உறுதியாகப் பதில் சொன்னால், “நாம் செய்த பரிந்துரை பலித்துவிட்டது! இந்த பக்தனை இவர் நிச்சயம் காத்துவிடுவார்!” என்ற நம்பிக்கையைப் பெற்று மகாலட்சுமி மகிழ்கிறாள் என்பதுதான் இதில் உள்ள நுட்பம்.இதே கருத்தை ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான், தமது வரதராஜ ஸ்தவம் என்ற துதியில், காஞ்சிபுரம் அத்திகிரி வரதராஜப் பெருமாளைப் பார்த்து,


“அனன்யாதீனத்வம் தவ கில ஜகௌ வைதிக கிர:

பராதீனம் த்வாம் து ப்ரணதபரதந்த்ரம் மனுமஹே

உபாலம்போ யம் போ ச்ரயதி பத ஸார்வஜ்ஞம் அபி தே

யதோ தோஷம் பக்தேஷு இஹ வரத நைவாகலயஸி”


“வரதராஜா! நீ யாருக்கும் கட்டுப்படாத சுதந்திரமானவன் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், நீயோ பக்தர்களுக்குக் கட்டுப்படுபவனாக இருக்கிறாய். நீ எல்லாம் அறிந்தவன் என்று வேதங்கள் சொல்கின்றன. ஆனால், உனக்குத் தெரியாத விஷயம் ஒன்று இருக்கிறது. உன் பக்தர்கள் செய்யும் தோஷங்கள் மட்டும் உன் கண்களுக்குத் தெரிவதில்லை. அதாவது, அவற்றை நீ கண்டாலும், பக்தர்கள் மீதுள்ள அன்பால் கண்டு கொள்ளாமல் அவர்களை மன்னித்து விடுகிறாய்!” என்று தெரிவிக்கிறார்.


இப்படித் தன் அடியார்கள் செய்யும் குற்றங்களின் விஷயத்தில் அதை அறியாதவர் போல் இருந்து அவர்களை மன்னித்து விடுவதால், திருமால் அவிக்ஞாதா என்று அழைக்கப்படுகிறார். ‘அவிக்ஞாதா’ என்றால் அறியாதவர் - அடியார்கள் செய்யும் குற்றங்களை அறியாதவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 483-வது திருநாமம். விளக்கவுரை வழங்கிய ஸ்ரீபராசர பட்டர், ‘ப்ரபன்ன க்ருத பாபானாம் கிஞ்சிதபி அவிசாரணாத் அவிக்ஞாதா’ என்று விளக்கியுள்ளார். சரணாகதர்கள் செய்த பிழை களைக் கொஞ்சமும் அறியாதவர் போல் இருப்பவர் என்பது இதன் பொருளாகும்.


“அவிக்ஞாத்ரே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களின் பிழைகளைத் திருமால் நிச்சயம் பொறுத்தருள்வார்.


484. ஸஹஸ்ராம்சவே நமஹ: (Sahasraamshavey namaha)


கலி என்ற அசுரன் சிவனைக் குறித்துக் கடும் தவம் புரிந்தான். அவனுக்குப் பரமசிவன் காட்சி அளித்து என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். “எனக்கு வைரம் பாய்ந்த உடல் என்னும்படி வலிமை மிக்க உடல் கட்டமைப்பு வேண்டும்! திருமால் என்னைக் கொல்லக் கூடாது!” என்று இரண்டு வரங்களைக் கேட்டான் கலி. சரி என்று வழங்கிவிட்டார் சிவன். வரங்களைப் பெற்று அதனால் கர்வம் அடைந்த கலி, பார்வதியிடம் அபச்சாரப் பட்டு விட்டான். “என் கணவர் தந்த வரங்களைப் பயன்படுத்திக் கொண்டு என்னிடமே தவறிழைக்கப் பார்க்கிறாயா? நீ இடுப்புக்கு மேல் வஜ்ரம் பாய்ந்த உடம்போடு இருந்தாலும் இடுப்புக்குக் கீழே வலிமையற்றவனாக ஆகிவிடுவாய்!” என்று சபித்து விட்டாள் பார்வதி.


பரமசிவனுடைய வரத்தையும், பார்வதியின் சாபத்தையும் ஒருங்கே பெற்றுக் கொண்டு, பூமியிலே வந்து பிறவி எடுத்தான் கலி அசுரன். அவன்தான் துரியோதனன். இது வியாச பாரதத்தில் வன பர்வத்தில் கோஷயாத்ரா உப பர்வத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ரகசியத்தை இளம்வயதில் அறிந்து கொண்ட துரியோதனன், கதாயுத்தம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தான். ஏனெனில், கதாயுத்தத்தில் இடுப்புக்குக் கீழே அடிக்கக்கூடாது என்ற விதி உள்ளது. மற்ற போர் முறைகளில் இடுப்புக்குக் கீழே தாக்கப்பட்டால் உடனே துரியோதனன் அழிந்து விடுவான். எனவே தன்னைக்காத்துக்கொள்ள கதாயுத்தம் மட்டுமே புரியவேண்டும் என்று தீர்மானித்து விட்டான் அவன்.


எந்த பலராமனிடம் பீமன் கதாயுத்தம் பயின்றானோ, அதே பலராமனிடம் கதாயுத்தம் கற்றான் துரியோதனன். அதன் விளைவாகவே கர்வம் தலைக்கு ஏறி, பாண்டவர்களைச் சூதுக்கு அழைத்து, திரௌபதியை அவமானப்படுத்தி பல கொடுமைகள் செய்தான். அவமானப்பட்ட திரௌபதி, “எந்தத் தொடையில் வந்து என்னை அமரச் சொன்னாயோ, அந்தத் தொடையைப் போரில் பீமன் தனது கதையால் அடித்துப் பிளப்பான்!” என்று சபதம் செய்தாள். நான் அவ்வாறே செய்வேன் என்று பீமனும் சபதம் செய்தான்.


ஆனால், கதாயுத்தத்தில் இடுப்புக்குக் கீழே அடிக்கவே முடியாதே. எப்படித் தொடையில் அடிப்பது இந்தச் சபதமே தவறான சபதம் ஆகும். ஆனாலும், தனது பக்தர்கள் செய்த சபதத்தை நியாயப் படுத்த விழைந்தான் கண்ணன். அதனால், மைத்ரேய முனிவரைத் துரியோதனனிடம் அனுப்பி அவனுக்கு அறிவுரை வழங்க வைத்தான். பங்காளிகளைப் பகைத்துக் கொள்ளாமல், உரிய பங்கை அவர்களுக்குத் தருமாறு மைத்ரேய முனிவர் அறிவுரை சொல்ல, அதனால் கோபம் கொண்ட துரியோதனன் அலட்சியமாகத் தொடையைத் தட்டி, “நீங்கள் எல்லாம் வந்து எனக்கு அறிவுரை சொல்வதா?” என்றான். கோபம் கொண்ட மைத்ரேயர், “என்னை அவமானப் படுத்தும் விதமாக, எந்தத் தொடையை நீ தட்டினாயோ, அந்தத் தொடையைப் போரில் பீமன் தன் கதையால் அடித்துப் பிளந்து விடுவான்!” என்று சாபம் கொடுத்தார். இப்போது இது ஒரு முனிவரின் சாபமாக மாறிவிட்டதால், பீமன் செய்த சபதம் நியாயப்படுத்தப்பட்டு விட்டது.


பாரதப் போரின் முடிவில், துரியோதனனைப் பீமன் தொடையில் அடித்து வென்ற போது, பலராமன் கோபம் கொண்டு பீமனைத் தாக்க வந்தார். “என்னிடம் கதாயுத்தம் பயின்றவன் என்று சொல்லிக்கொண்டு இப்படித் தவறான முறையில் தொடையில் அடிக்கலாமா?” என வெகுண்டார் பலராமன். அப்போது அவரைத் தடுத்த கண்ணன், “அண்ணா! பீமன் சரியாகத் தான் போரிட்டான். ஆனால் என்ன செய்வது? ரிஷியின் சாபம் வலிமையானது அல்லவா? தொடையில் அடிபட்டு இவன் மாளவேண்டும் என்பது மைத்ரேயர் துரியோதனனுக்கு இட்ட சாபம்! அதன்படி அவன் விதி முடிந்து விட்டது!” என்றான். பலராமனும் சமாதானம் அடைந்துவிட்டார்.


இங்கே கண்ணன் எவ்வளவு விஷயங்களை அறிந்து இந்த லீலையைச் செய்துள்ளான் என்று கவனித்துப் பாருங்கள். இடுப்புக்குக் கீழே வலிமையற்றுப் போவான் என்று துரியோதனனுக்குப் பார்வதி தந்த சாபம், நாராயணனால் மரணம் இல்லை என்று சிவன் கொடுத்த வரம், திரௌபதியும் பீமனும் செய்த சபதம் ஆகிய அனைத்தின் அடிப்படையிலும் பீமன், துரியோதனனின் தொடையில் கதையால் அடித்து அவனை வதைக்கும்படி கண்ணன் செய்தான். மேலும், பலராமன் இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதையும் முன்கூட்டியே அறிந்து, பீமன் செய்த சபதத்தை முனிவர் தந்த சாபமாகவும் மாற்றிவிட்டான்.


இப்படி அனைவரின் மனப்போக்கையும் அறிந்திருப்பவராகத் திருமால் திகழ்வதால், அவர் ‘ஸஹஸ்ராம்சு:’ என்றழைக்கப்படுகிறார். அம்சு என்றால் பொதுவாகக் கிரணம் என்று பொருள். இங்கே அம்சு என்ற வார்த்தை அறிவுக் கிரணத்தைக் குறிக்கிறது. ஸஹஸ்ரம் என்றால் ஆயிரக் கணக்கான என்று பொருள். ‘ஸஹஸ்ராம்சு:’ என்றால் ஆயிரக் கணக்கான அறிவுக் கிரணங்களைக் கொண்டவர் அதாவது, எல்லாம் அறிந்தவர் என்று பொருள். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 484-வது திருநாமம்.“ஸஹஸ்ராம்சவே நமஹ:” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு நல்ல ஞானத்தைத் திருமால் அளித்தருள்வார்.


திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்...

: *

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,