*வெற்றியைத் தரும் விஜயதசமி*

 


*வெற்றியைத் தரும் விஜயதசமி*


அம்மனை வழிபடுவதற்கு உகந்த நவராத்திரி விழா, கடந்த 26-ந் தேதி தொடங்கியது. ஒன்பது நாட்கள் நடைபெறும் இந்த விழாவைத் தொடர்ந்து, 10-ம் நாளில் விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் துன்பம் விளைவித்து வந்த மகிஷாசுரனுடன் அன்னை துர்க்கா தேவி போரிட்டாள். அவர்கள் இருவருக்கும் இடையே ஒன்பது நாட்கள் உக்கிரமாக போர் நடந்தது. 10-ம் நாளில் அன்னையானவள், மகிஷாசுரனை அழித்து வெற்றிபெற்றாள். இந்த நாளையே 'விஜயதசமி' (வெற்றித் திருநாள்) என்று கொண்டாடுகிறோம். வட இந்தியாவில் இந்த நிகழ்வை இரண்டு விதமாக கொண்டாடுகிறார்கள். காளி தேவியின் வெற்றியாகவும், ராவணனை ராமபிரான் அழித்த நாள் என்பதால் 'ராம்லீலா' என்றும் கொண்டாடுகின்றனர்.


புராணக் காலத்தில் எருமை தலை கொண்ட அசுரன் வாழ்ந்து வந்தான். எருமைக்கு 'மகிஷம்' என்று பெயர். இதனால் அவனை அனைவரும் மகிஷாசுரன் என்று அழைத்தனர். அந்த அசுரனால் மூவுலகிலும் நிம்மதி குறைந்தது. இதையடுத்து துர்க்காதேவி, அசுரனை அழித்து அனைவருக்கும் நிம்மதியை பெற்றுத் தந்தாள். மகிஷாசுரனை துர்க்கை வதம் செய்தநாள் 'விஜயதசமி.' இந்த நாளில் எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அது வெற்றியாக முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இத்திருநாளில் தொழில் நிறுவனங்களில் புதிய கணக்கு தொடங்குவார்கள். இதனால் லாபம் சேரும் என்பது ஐதீகம். அதே போல் புதிய வியாபாரத்தை இந்த நாளில் தொடங்கினாலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.


விஜயதசமி தினம் கல்விக்கு உகந்த நாளாக இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் தான் மழலைக் குழந்தைகளுக்கு முதல்முதலாக எழுத்தறிவிக்கப்படும் நிகழ்வை ஆரம்பிப்பார்கள். இதற்கு 'வித்யாரம்பம்' என்று பெயர். இதையொட்டி நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை, புதிய வகுப்புகள் தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். பித்தளை தாம்பூலத் தட்டில் பச்சரிசியைப் பரப்பி அதில் தங்கள் குழந்தைகளின் கையைப் பிடித்து, தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்று பெற்றோர்கள் எழுதச் செய்வர். (ஒவ்வொருவரின் தாய் மொழியின் முதல் எழுத்துக்கள் எழுதப்படும்). மேலும் அவரவர்களின் அபிமான தெய்வங்களின் திருநாமத்தையும் எழுதச் செய்வர். இதனால் அந்தக் குழந்தைகள் கல்வியில் பெரும் புகழோடு விளங்குவார்கள் என்பது ஐதீகம்.

Comments

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,