மழை ரகசியம்!*
*மழை ரகசியம்!*
நன்றி குங்குமம் ஆன்மிகம்
ஸ்ரீகிருஷ்ண அமுதம் - 34 (பகவத் கீதை உரை கர்ம யோகம்)
நல்லார் ஒருவர் உளரேல், அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை’ என்று சொல்வார்கள். அதில் உள்ள ‘நல்லார்’ என்பவர் தனக்கென வாழாதவர் ஆவார். பிறர் நலனிலேயே அக்கறை கொண்ட அவர், தனக்காகக்கூட மழையை வேண்டுவதில்லை; ஊராருக்காகத்தான் வேண்டுகிறார். ரிஷ்யசிருங்கர் என்று ஒரு முனிவர் இருந்தார். அவர் செல்லுமிடமெல்லாம் மழை பொழிந்து, அந்த இடத்தில் வளம் செழிக்கும். அவர் யாகங்கள் வளர்ப்பதிலும், யக்ஞங்கள் இயற்றுவதிலும் முழுமையாக ஈடுபட்டவர். தசரதன் தனக்குக் குழந்தை வரம் வேண்டி, மேற்கொண்ட `புத்ரகாமேஷ்டி’ யாகத்தை நடத்திவைத்தவர் இந்த ரிஷ்யசிருங்கர்தான்.
வறட்சி மிகுந்த பகுதியிலுள்ளோர் அவரைத் தங்கள் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுப்பார்கள். அவரும் மனமுவந்து வருவார். உடனே அங்கே மழை பொழியும், வறட்சி தீரும். இப்படி நன்மை அடையப்பெற்ற ஊர்மக்கள், அவரிடம் நன்றியைத் தெரிவிப்பார்கள். அவர், ‘அப்படியா, மழை பொழிந்ததா? நல்லது. நீங்கள் எல்லோருமே நல்லவர்கள். அதனால்தான் மழை பொழிந்திருக்கிறது.
நான் வந்தது தற்செயல்தான். எல்லாப் பெருமையும், புகழும் உங்களுக்கே,’ என்று சொல்லிவிட்டு எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல் மென்முறுவலுடன் சென்றுவிடுவார். இந்தவகையில் இயற்கைக்கும் மனித வாழ்க்கைக்கும் உண்டான தொடர்பை கிருஷ்ணன் மிகச் சுருக்கமாகக் கூறுகிறார்.
இயற்கைதான் எத்தனை ரகசியமாகத் தன் அருளை மக்களுக்கு வாரி வழங்குகிறது! கடல் நீர் ஆவியாகிறதே, அந்த ஆவியை நம்மால் பார்க்க முடிகிறதா? அந்த ஆவி பெருகி மேகமாக மாறுவதும்தான் எத்தனை ரகசியமாக நடைபெறுகிறது! மழை பொழியும்போதுதான், அதன் மூலத்தை ஆராய முற்படுபோதுதான், கடல்நீர் ஆவியாகி மேலே போன உண்மை புரிகிறது. ஆனாலும், அப்படிப் போகும் ஆவி நம் கண்களுக்குப் புலப்படுவதில்லை. யக்ஞம் இயற்றுபவனும் இப்படிப்பட்டவன்தான். தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தன்னால் பிறர் அடையும் பயனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவன் அவன்.
இயற்கை, நாம் அறியாதபடி இன்னொரு அற்புதத்தையும் புரிகிறது. கடல் ஆவியைப் போலவே கண்ணுக்குத் தெரியாத கரியமிலவாயுவை (நாம் சுவாசித்து நம் நாசியிலிருந்து நீக்குவது அதாவது நாம் வெளிப்படுத்தும் நம்முடைய விஷம்!) தாவரம் பெருமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு, நமக்குப் பிராணவாயுவைத் தருகிறது! நாம் ஒதுக்கி வெளியேற்றும் நம் சுவாசக் கழிவை, அது ஏற்று நம் பிராணன் நிலைக்கும்படியாக நமக்கே ஆக்ஸிஜனை வழங்குகிறது.
மனிதரைவிட இந்தத் தாவரம்தான் சரியான யக்ஞத்தில் ஈடுபட்டிருக்கிறதோ!மழைவேண்டி ஒரு ஊரில் யாகம் நடத்தினார்கள். பெரியவர்களாகக் கூடி எடுத்த தீர்மானம் அது. அதற்காகப் பெரிய யாகசாலை அமைக்கப்பட்டது. வேள்விப் பொருட்கள், தீயிலிடவேண்டிய ஆஹுதிகள் என்று அந்தக் கொட்டகையில் பாதி நிரம்பிவிட்டது. வேதியர்களும் வந்து குழுமிவிட்டார்கள். யாகத்தால், மழை பொழியப்போகும் அதிசயத்தைக் காண ஊர்மக்களும் யாகசாலைக்கு வெளியே வெள்ளமாகத் திரண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு சிறுவன் மழைவரும் என்று மிகத் திண்மையாக நம்பினான். ஆமாம், அவன் கையில் ஒரு குடை இருந்தது!
யாகம் ஆரம்பித்தது, ஆரவாரமாக நடந்தது, மண்டப உச்சியை நோக்கி ஓங்கி வளர்ந்தது யாகத்தீ. அதன் புகை விண்ணோக்கிச் சென்றது. தன் நிறம் ஒத்த கருமேகங்களை அழைக்க முயன்றது. இந்த கட்டத்தில், மழை பொழியுமானால் அது இரண்டு காரணங்களுக்காகத்தான் இருக்க முடியும். ஒன்று, அர்ப்பணிப்புப் பூர்வமான தொனியில் உச்சரிக்கப்பட்டிருக்கும் யாக மந்திரங்கள் - இறைவனிடம் சமர்ப்பணமாகும், சரணடையும் மனப்பக்குவமும் அதில் இணைந்திருக்கும்.
இரண்டாவது, அந்தப் பையன். சான்றோர்களையும், ஆன்றோர்களையும் விட, ஆயிரம் கோடி யாகங்கள் இயற்றிய ஆத்மார்த்த நம்பிக்கையைக் குடையாகக் கொண்டு வந்திருந்தானே அந்தப் பையன்! இயற்கையும், மனிதமும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றுக்கு ஒன்று வாழ்வாதாரமாக இருக்க வேண்டியவை. வானில் செல்லும் மேகம் கீழே மக்களைப் பார்த்தபடிதான் செல்கிறது. இவர்களுக்கு என்னாலான நல்லதைச் செய்ய வேண்டும் என்று யோசித்தபடிதான் செல்கிறது!
‘
Comments