: *முருக அவதாரத்தின் மகிமை*

: *


முருக அவதாரத்தின் மகிமை*


முருகப்பெருமானை உள்ளன்புடன் வழிபாடு செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும்.

முருகன் அவதாரத்திற்கான புராண கதை வருமாறு:-

முருகன் என்ற சொல்லுக்கு அழகு, இளமை, மணம், கடவுள் தன்மை என்ற பல பொருள் உண்டு. முருகன் வடிவம் தமிழ் வடிவமாக அமைந்தது. தமிழ்மொழியில் மெய்யெழுத்துகள் கண்களாகவும், வல்லினம், மெல்லினம், இடையினம் என வழங்கும் எழுத்துக்கள் ஆறு திருமுகங்களாகவும், அகர முதல எழுத்துகள் பன்னிரண்டும் தோள்களாகவும், ஆயுத எழுத்து ஞான வேலாகவும் விளங்குகிறது.


முருகன் சிவந்த மேனியும், அரியவரதத்துடன் கூடிய கரங்களும், மார்பில் சாய்ந்த வேலும், திருவடியில் மயிலும், தாமரை ஏந்திய கரத்துடன் வள்ளிதேவி வலது பக்கத்திலும், நீலோத்பலம் ஏந்திய கரத்துடன் தெய்வானை இடது பக்கத்திலும் அமைய காட்சித் தருவார்.


முருகப்பெருமானை உள்ளன்புடன் வழிபாடு செய்யும் பக்தர்களின் வாழ்வு என்றும் மலர்ந்திருக்கும். முருகன் நமக்கு வீடு அளிக்க வல்லவன். ஆனால் இந்த வீடு பேறை நாம் பெறுவதை தடுக்கும் வகையில் நம்முள் ஆறு பகைவர்கள் உள்ளனர். காம, குரோத, லோப, மோக, மத, மாற்சரியங்கள் என்ற ஆறும்தான் அவை.


இந்த ஆறு பகைவர்களின் உருவகமாகத்தான் சூரபத்மன் கருதப் படுகிறான். அவனை சம்காரம் செய்ததன் மூலம் முருகப்பெருமான் மனிதர்களிடம் உள்ள ஆணவத்தை ஒழித்ததாக சொல்வார்கள். இதற்காகத்தான் முருகன் அவதாரம் எடுத்தார். அதற்கான புராண கதை வருமாறு:-


காசிபர் என்ற முனிவருக்கும், மாயை என்ற அசுரக் குலப்பெண்ணிற்கும் பிறந்தவன் சூரபத்மன். தன் தாயின் உபதேசப்படி சூரபத்மன் சிவபெ ருமானை நோக்கிக் கடும் தவம் புரிந்தான். சூரபத்மனின் தவ வலிமையை மெச்சிய சிவபெருமான் சூரபத்மன் வேண்டியபடி அவனுக்கு தேவர்கள் அனைவரையும் வெல்லும் படையாற்றலும், படைக்கலங்களும், நினைத்த உடன் எல்லா இடங்களுக்கும் செல்லும் வல்லமையையும் அளித்தார்.


இதில் உச்சக்கட்டமாக சிவபெருமானைத் தவிர வேறு எவராலும் தன்னை அழிக்க முடியாது என்ற வரத்தையும் பெற்றான். சூரபத்மன் தான் பெற்ற வரத்தின் வலிமையினால் ஆணவம் மிகுந்து கர்வம் கொண்டான். இந்திரன் மகனான சயந்தன் முதலான தேவர்களை சிறையில் அடைத்து சித்ரவதை செய்தான். அதர்ம வழியில் ஆட்சிசெய்யலானான்.


அசுரர்களின் இக் கொடுமைகளைத் தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். இறைவன் அவர்களைக் காப்பாற்ற முடிவு செய்தார். அதன்படி அவர் தனது நெற்றிக் கண்ணைத் திறந்தார். அவைகளில் இருந்து ஆறு தீப்பொறிகள் வெளிப்பட்டன. அவற்றை வாயுபகவான் ஏந்திச் சென்று வண்ண மீன் இனம் துள்ளி விளையாடும் சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்களின் மீது சேர்த்தான்.


அந்த தீப்பொறிகள் ஆறும் உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்தது போன்ற ஆறு குழந்தைகளாக தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி, பாலூட்டி வளர்த்து வந்தனர். ஒரு நாள் பார்வதி தன் மைந்தர்கள் அறுவரையும் ஒன்றாக அன்புடன் கட்டி அணைத்தாள். அவையாவும் ஒரு திருமேனியாக வடிவம் கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு கரங்களும் உடைய ஒரு திருமுருகனாக தோன்றினான். இப்படித்தான் முருகனின் அவதாரம் நிகழ்ந்தது.


ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுகசுவாமி" எனப் பெயர் பெற்றார். இந்த ஆறு திருமுகங்களும் ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களைக் குறிக்கும். பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்திரன், படைக்கும் கடவுளான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்கினியில் தோன்றியவன். அதனால் "ஆறுமுகமே சிவம், சிவமே ஆறுமுகம்" எனப்படுகின்றது.


சூரபத்மனை அழித்து வரும்படி முருகனுக்கு உத்தரவிட்டார். முருகனுக்கு துணையாக செல்ல பெரும் படையையும் ஈசன் உருவாக்கி கொடுத்தார். மனிதர்களின் ஆணவத்தை ஒழித்த முருகப்பெருமான் இதற்காக ஈசன் திருவிளையாடல் ஒன்றை அரங்கேற்றினார்....


சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் புறப்படும்போது அதில் இருந்து வெளிப்பட்ட வெப்பத்தை தாங்கமுடியாது சிவனின் அருகில் இருந்த பார்வதிதேவி பயந்து ஓடினார். அப்போது பார்வதிதேவியின் பாதச் சிலம்புகளில் இருந்த நவரத்தினங்கள் சிதறி விழுந்தன.


அந்த நவமணிகள் மீது இறைவனின் பார்வை பட்டதும் அவைகள் நவசக்திகளாக தோன்றினர். அந்த நவசக்திகளின் வயிற்றில் (வீரவாகுவை மாணிக்கவல்லியும், வீரகேசரியை மௌத்திகவல்லியும், வீர மகேந்திரனை புஷ்பராகவல்லியும், வீர மகேசுவரரை கோமேதகவல்லியும், வீர புரந்தரை வைடூரியவல்லியும், வீர ராக்கதரை வைரவல்லியும், வீர மார்த்தாண்டரை மரகதவல்லியும், வீராந்தகரை பவளவல்லியும், வீரதீரரை இந்திரநீலவல்லியும் பெற்றெடுத்தனர்) வீரவாகுதேவர் முதலான ஒரு லட்சத்து ஒன்பது பேர் (100009) தோன்றினர். இவர்கள் அனைவரும் முருகனின் படைவீரர்கள் ஆனார்கள்.


இதையடுத்து பார்வதி தேவியும் தன்னைப்போன்ற ஒரு சக்தியை உருவாக்கி அதனை தனது சக்திகள் யாவும் கொண்ட ஓர் வீரவேலாக உருமாற்றினார். வெற்றிதரும் அந்த வீரவேலை முருகனிடம் வழங்கினார். ஈசனும் தன் அம்சமாகிய பதினொரு ருத்திரர்களைப் படைக்கலமாக்கி முருகனிடம் தந்தார்.


அம்மையப்பனிடம் வேல் வாங்கிய முருகன், தேரேறி தெற்கே இருந்த வீரமகேந்திரபுரியை நோக்கி சென்றான்.


விந்தியமலை அடிவாரத்து மாயாபுரத்தை ஆண்ட சூரனின் தம்பி தாரகாசுரன் (ஆனைமுகம் கொண்டவன்) கிரௌஞ்சம் என்னும் பெரிய மலையாய் உருமாறி வழிமறிக்க வீரவாகுதேவர் அவனுடன் போர் புரிந்தார். ஆனால் தாரகன் தன் மாயையால் வீரவாகுதேவர் முதலான முருகனின் சேனையை அழுத்தி சிறைப்படுத்தினான். அப்போது முருகனின் கூர்வேல் மாயை மலையை பிளக்க தாருகன் அழிந்தான்.


சூரபத்மன் இச் செய்தி கேட்டு துடிதுடித்து வீராவேசம் கொண்டான். பின்னர் திருச்செந்தூர் நோக்கி முருகனின் மொத்தப் படையும் கிளம்பியது. முருகன் அம்மையப்பர் ஆசியுடனும் தன் படைகளோடும் திருச்செந்தூர் சென்று தங்கினார். அங்கு பராசர முனிவரின் மகன்கள் (சனகர், சனாதனர், சனந்தனர், சனற்குமாரர்) முருகனை வரவேற்றனர். திருச்செந்தூரில் ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில் சூரனை அழித்து தன் அவதார காரணத்தை முருகப் பெருமான் முற்றுப் பெறச் செய்தார். இதுவே கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது

: *

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி