அசுவத்தாமா!*

*


அசுவத்தாமா!*


நன்றி குங்குமம் ஆன்மிகம்


தலை சிறந்தவரான துரோணரின் பிள்ளை, இளையதலைமுறை, பெரும் வீரன். தீவிரமான தவம் உடையவன். அனைத்திற்கும் மேலாக, சிரஞ்ஜீவிகள் என்று சொல்லப்படும் எழுவரில் முதலாவதாகச் சொல்லப்படுபவன். அசுவத்தாமா, மகாபலி, வியாசர், அனுமார், விபீஷணர், மார்க்கண்டேயர், பரசுராமர் என்று சொல்லப்படும் ஏழு சிரஞ்ஜீவிகளில், முதலாவதாகச் சொல்லப்படுபவர்இவரே! மகாபாரத யுத்தத்தில், வேறு யாராலும் செய்ய முடியாத அளவிற்குப் பாண்டவர்க்குச் சேதம் விளைவித்தவன். பெரும் திறமைசாலி. சேரக்கூடாதவர்களோடு சேர்ந்து, செய்யக்கூடாதவைகளைச் செய்தவன். துரோணருக்கும், கிருபிக்கும் பிள்ளையாகப் பிறந்த அசுவத்தாமா, ஏழ்மையான சூழ்நிலையில்தான் பிறந்தான்.


குழந்தைக்குத் தேவையான அளவு, தாய்ப்பால் கொடுக்க இயலாத நிலையில் இருந்தாள் கிருபி. என்ன செய்வது? மாவைக் கரைத்து (கஞ்சி போல), அதையே குழந்தைக்குப் பாலாக ஊட்டி வளர்த்தார்கள். குழந்தையான அசுவத்தாமா, பசும்பாலைப் பார்த்ததே இல்லை. இதை,‘‘மாவின் பாலே அன்றி மரபுக்குரிய மைந்தன்ஆவின் பால் கண்டு அறியான்”என வில்லிபாரதம் சொல்கிறது. துரோணருக்கே இந்த நிலை!


குழந்தையின் பசி தீர, தன் நண்பனான, மன்னனான துருபதனிடம் சென்று, ‘‘என் குழந்தையின் பசி தீர, ஒரு பசுமாடு கொடு! நாம் இருவரும் ஒன்றாகக் குருகுலவாசம் படித்தபோது, நீ மன்னன் ஆனவுடன் பாதி ராஜ்ஜியமே எனக்குத் தருவதாகச் சொன்னாய். ராஜ்ஜியம் வேண்டாம். நண்பன் என்ற முறையில் ஒரு பசுமாடு கொடு! அது போதும்’’ எனக் கேட்டார் துரோணர். மன்னன் துருபதனோ, துரோணரை மிகவும் இழிவாகப்பேசி, அவமானப்படுத்தி விரட்டிவிட்டான். மகன் பசிக்காக மன்னனிடம் மாடு கேட்கப்போன துரோணர், மானம் இழந்து திரும்பினார். விளைவு?


துரோணர், குருகுலத்திற்கு குருநாதராக மாறி, தன் சீடனான அர்ஜுனனை விட்டுத் துருபதனைக் கட்டி இழுத்துவரச் செய்தார். அதன் பிறகு நிகழ்ச்சிகள் தொடர்கதையாக மாறி, குரு க்ஷேத்திர யுத்தகளத்தில், மகன் காரணமாகவே மாண்டார் துரோணர். இடையில் நடந்தவைகளையும், இதன் பின் நடந்தவைகளையும் அசுவத்தாமா எப்படிக் கையாண்டான் என்பதைப் பார்க்கலாம். மகாபாரதப் போர்க்களத்தில், துரோணர் தலைமை ஏற்று, கெளரவ சேனைகளை நடத்திக் கொண்டிருந்த நேரம், கௌரவ சேனையைச் சேர்ந்த ஜயத்ரதன், அர்ஜுனனால் கொல்லப்பட்டான்.

 

அதற்காகத் துரியோதனன் முதலான அனைவரும் வருந்தியபோது, ஆறுதல் சொன்ன கர்ணன் தற்பெருமை பேசி, ‘‘பாண்டவர்களை நானே கொல்வேன்’’ என்றதோடு, கிருபாச்சாரியாரையும், ‘‘நாக்கை அறுப்பேன்’’ என்று கடுமையாகப் பேசி அவமானப்படுத்தினான். அதைக் கண்டு வெகுண்ட அசுவத்தாமா, ‘‘கர்ணா! உன்னை இப்போதே ஒழித்து விடுகிறேன் பார்!’’ என்று கர்ணன் மீது பாயத் தொடங்கினான். அவனைத் தடுத்த துரியோதனன், ‘‘நாம் போரிட வேண்டியது பாண்டவர்களுடனே தவிர, நமக்குள் அல்ல’’ என்று கூறினான். போர் தொடர்ந்தது.


துரோணாச்சாரியாரால், பாண்டவ சேனைகளுக்குப் பெருத்த சேதம் விளைந்தது. துரோணரைக் கீழே தள்ளினால் ஒழிய, பாண்டவர் சேனை பிழைக்காது என்ற நிலை. ‘‘இந்தத் துரோணர் கையில், வில் இருக்கும் வரை, தேவர்களால் கூட இவரைக்கொல்ல முடியாது. இவர் மகனான அசுவத் தாமா இறந்ததாக, யாராவது துரோணரின் நம்பிக்கைக்கு உரியவர்கள் பொய் சொன்னால் கூடப் போதும். இவர் வில்லைக் கீழே வைத்துவிடுவார். அதன்பின் இவரைச் சாதாரண மனிதர்களால் கொல்ல முடியும். வேறு வழியில்லை’’ என்றார் கண்ணன்.


கண்ணன் எண்ணப்படி, பீமன் மாளவ தேச மன்னரின் யானையான `அசுவத்தாமா’ என்ற யானையைப் போர்க்களத்தில் கொன்றான். அதை மனதில் கொண்டு, ‘‘அசுவத்தாமா ஹத: குஞ்சர:’’ என்று துரோணர் காதுகளில் விழும்படியாகக் கூறினார் தர்மர். ஆனால், அதைச் சொல்லும்போது, யானை என்று பொருள்படும் ‘குஞ்சர:’ என்ற சொல்லை மட்டும், மிகவும் மென்மையான, ஓசை குறைந்த குரலில் சொன்னார்.


அதைக்கேட்ட துரோணர், ‘‘தர்மனே சொல்லிவிட்டான், அசுவத்தாமா இறந்துவிட்டானென்று. இது உண்மையாகத் தான் இருக்க வேண்டும்’’ என்று எண்ணி, அசுவத்தாமாவை நினைத்து ஏங்கி, வில்லைக் கீழே வைத்தார். அவரைக் கொல்வதற்காகவே பிறந்திருந்த திருஷ்டத்யும்னன், அப்போது வெகுவேகமாகக் கையில் கத்தியுடன் ஓடி, துரோணரின் கதையை முடித்துவிட்டான். அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள்.மகனுக்காக, மன்னன் துருபனிடம் மாடு கேட்டவர்; அந்த மன்னனின் மகன்(திருஷ்டத்யும்னன்) கையாலேயே, தன் மகன் (அசுவத்தாமன்) காரணமாகவே மாண்டார் துரோணர்.உண்மை அறிந்த அசுவத்தாமா கொதித்தான். அதன்பின் அவன், கடுமையாகப் போரிட்டான்.


மிகவும் சக்தி வாய்ந்த ‘நாராயண’ அத்திரத்தை எடுத்துப் பாண்டவர் சேனையை நோக்கி விட்டான். (நாராயண அஸ்திரத்தின் தோற்றங்கள், மகிமை, அதன் விளைவுகள் ஆகியவற்றைப் பல சுலோகங்களில், பாடல்களில் விவரித்திருக்கிறார் வியாசர்) நாராயண அத்திரம் ஜொலித்துக் கொண்டு வருவதைக் கண்டதும், அதன் விளைவை எண்ணிப் பாண்டவர் சேனை நடுங்கியது. அப்போது கண்ணன், ‘‘உத்தமமான இந்த அத்திரத்தில் இருந்து தப்ப, ஒரே ஒருவழிதான் உள்ளது. அனைவரும் அவரவர் கைகளில் உள்ள ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு, ஆயுதம் இல்லாமல் நிராயுதபாணிகளாக, தேரை விட்டு இறங்கித் தரையில் நில்லுங்கள்!’’ என்றார்.


அனைவரும் அப்படியே செய்தார்கள். பீமன் மட்டும் மறுத்தான். ‘‘எந்த ஆயுதமாக இருந்தாலும் சரி! நான் ஒரு கை பார்க்கிறேன்’’ என்றான். கண்ணனும், அர்ஜுனனும் பீமன் கைகளில் இருந்த ஆயுதங்களைப் பிடுங்கி எறிந்துவிட்டு, அவனையும் தேரை விட்டு இறக்கித் தரையில் நிற்கச் செய்தார்கள். நாராயண அத்திரத்தால் பாண்டவ சேனைக்கு, எந்தத் தீங்கையும் செய்ய முடியவில்லை.


அசுவத்தாமனோ, ‘‘இதைக் கொடுத்த பகவானே, இதோ! எதிர்ப்பக்கத்தில் கண்ணனாக இருந்து, இதன் நுணுக்கங்கள் அறிந்து செயல்படாமல் செய்துவிட்டார்’’ என்று புலம்பினான். புலம்பியவன், பாண்டவர்களைப் புலம்பச்செய்தான்.


மகாபாரத யுத்தகளத்தின் முக்கிய கட்டம்! துரியோதனன் பீமனால் கடுமையாகத் தாக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்தான். கண்ணனும், பாண்டவர்களும் போர்க்களத்தில் இருந்து திரும்ப, அசுவத்தாமா - கிருபர் - கிருதவர்மா ஆகியோர் துரியோதனனைப் பார்க்க வந்தார்கள். வந்தவர்கள், துரியோதனன் இருந்த நிலையைக்கண்டு வருந்தினார்கள். ‘‘பாண்டவர்களையும், பாஞ்சாலர்களையும் கொல்வேன்நான்’’ என்று, அசுவத்தாமா பிரதிக்ஞை சபதம் செய்தான்.


துரியோதனன் உடனே, கிருபர் மூலமாக அசுவத்தாமாவிற்கு சேனாபதியாக அபிஷேகம் செய்வித்தான். அதன்பின், அசுவத்தாமா முதலான மூவரும், பாண்டவரின் பாசறைகளின் அருகில் இருந்த காட்டில் நுழைந்தார்கள். இரவு சூழத் தொடங்கியது. காட்டிற்குள் நுழைந்த மூவரும் அங்கிருந்த ஒரு பெரும் ஆலமரத்தின் அடியில் தங்கினார்கள். ஆலமரத்தில் ஆயிரக்கணக்கான காகங்கள், தனித்தனிக் கூடுகளில் இருந்தன.


சற்று நேரத்தில் கிருபரும், கிருதவர்மாவும் தூங்கத் தொடங்கினார்கள். அசுவத்தாமா மட்டும் விழித்திருந்தான். அவன் மனம் பாண்டவர்களை எப்படிப் பழி தீர்க்கலாம் என்பதிலேயே இருந்தது. அந்த நேரத்தில் திடீரென்று ஒரு பெருத்த கோட்டான் (இது அரியவகை பறவை) இருளில் ஔிவீசும் பச்சைக் கண்களோடு, நடுங்கும்படியாக ஓசையிட்டவாறே, ஆல மரத்தின் கிளைகளில் நுழைந்தது. சற்று நேரத்திற்குள் விவரமறிந்த காக்கைகள் தப்ப முயற்சித்தன.


ஆனால், இருளில் வழி தெரியாமல் தவித்த அக்காகங்களை, இருளில் நன்றாகப் பார்க்கும் திறன்கொண்ட கோட்டான் கொன்றது. அதைப்பார்த்துக் கொண்டிருந்த அசுவத்தாமா, விபரீதமான ஒரு முடிவு எடுத்தான். ‘‘ஆயிரக்கணக்கான காகங்களை, அவைகள் சக்தியற்று இருக்கும் இரவு நேரத்தில், ஒரே ஒரு கோட்டான் கொன்றதைப்போல, பாண்டவர் பாசறையில் தூங்கிக் கொண்டிருக்கும் அனைவரையும் இந்த இரவுக்குள் கொன்று குவிப்பேன்’’ என்று தீர்மானித்தான் அசுவத்தாமா.


உடனே, தூங்கிக்கொண்டிருந்த கிருபரையும், கிருதவர்மாவையும் எழுப்பி, தன் எண்ணத்தைச்சொன்னான் அசுவத்தாமா. ‘‘தூங்குபவர்களைக் கொல்லக்கூடாது’’ என்று, அவர்கள் இருவரும் எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார்கள். ஆனால் அசுவத்தாமா, அதைக் கேட்க வில்லை. ‘‘என் தந்தையைக் கொன்றவர்களைக் கொன்றால்தான், என் ஆத்திரம் தீரும்’’ என்று சொல்லி, பாண்டவர்பாசறையை நோக்கி நடக்கத் தொடங்கினான் அசுவத்தாமா.


கிருபரும், கிருதவர்மாவும் வேறு வழியின்றிப் பின் தொடர்ந்தார்கள். பாசறையின் வாசலை அடைந்த அசுவத்தாமா, அங்கே பெரும்பூதம் ஒன்று விசித்திரமான வடிவத்தோடு, வாசலை அடைத்தபடி நின்றிருந்ததைக் கண்டு திகைத்தான். இருந்தாலும் திகைப்பை விட்டு, ஆயுதங்கள் பலவற்றையும் பூதத்தின் மீது ஏவினான். அசுவத்தாமா ஏவிய ஆயுதங்கள் அனைத்தையும், மிகவும் சுலபமாக ஒதுக்கித் தள்ளியது பூதம்.


பயமே அறியாத அசுவத்தாமாவைப் பயம் பிடித்துக்கொண்டது. ‘‘கிருபரும், கிருதவர்மாவும் சொன்னார்கள் அவர்கள் பேச்சைக்கேட்காமல் சென்றுவிட்டேன். இப்போது என்ன செய்வது? சிவபெருமானைச் சரண் அடைவதைத்தவிர, வேறு வழி இல்லை’’ என்று வாய்விட்டுச் சொன்னான் அசுவத்தாமா.சொன்ன அசுவத்தாமா, சிவபெருமானை நோக்கித் தியானம் செய்யத் தொடங்கினான். (இந்த இடத்தில் ‘வியாச பாரதத்தில்’ சிவபெருமானைக் குறித்து விரிவாக - அற்புதமாக வர்ணித் திருக்கிறார் வியாசர்) தியானத்தின் பலனாக, சிவபெருமான் அருளைப் பரிபூர்ணமாகப் பெற்ற அசுவத்தாமா, சிவபெருமானிடம் இருந்து ஒரு கத்தியையும் பெற்றுத் திரும்பினான். திரும்பிய அசுவத்தாமாவைப் பார்த்ததும், பாசறையைக் காத்துநின்ற பூதமும், அதைச்சுற்றி இருந்தவைகளும் ஓடிப்போய் விட்டன.


அதற்குள் தன்னுடன் வந்த கிருபரையும், கிருதவர்மாவையும் பாசறை வாசலில் நிறுத்திய அசுவத்தாமா, ‘‘இருவரும் இங்கேயே நில்லுங்கள்! நான் உள்ளே சென்று, ஒருவன்கூட மீதமில்லாமல் அனைவரையும் கொன்றுவிட்டு வருகிறேன். எவனாவது தப்பி வந்தால், அவனை இங்கே நீங்கள் கொல்லுங்கள்! ஒருவனும் உயிருடன் தப்பக்கூடாது’’ என்று சொல்லிவிட்டு, பாசறையின் உள்ளே புகுந்தான். விவரிக்க வேண்டுமா என்ன? அங்கிருந்த அனைவரையும் அசுவத்தாமா, மிகவும் கொடூரமான முறையில் கொன்றான். உயிர் பிழைக்க எண்ணி ஓடி வந்தவர்களைக் கிருபரும், கிருதவர்மாவும் கொன்றார்கள்.


வெளியில் வந்த அசுவத்தாமா, மிகுந்த உற்சாகத்தோடு கூவினான். ‘‘திருஷ்டத்யும்னன், திரௌபதியின் பிள்ளைகள் உட்படப் பாஞ்சாலர்கள் அனைவரையும் கொன்றுவிட்டேன்’’ என்று கத்தினான். கூடவே, ‘‘நாம் இனிமேல் காலதாமதம் செய்யக் கூடாது. நம் அரசன் (துரியோதனன்) உயிருடன் இருந்தால், அவனுக்கு விருப்பமான இத்தகவலை, அவனிடம் உடனே போய்ச் சொல்ல வேண்டும்’’ என்றான் அசுவத்தாமா.


மூவருமாக உடனே சென்று, யுத்த களத்தில் அடிபட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்த துரியோதனனிடம், நடந்த விவரங்களைச் சொன்னார்கள். துரியோதனன் மகிழ்ந்து போய், ‘‘அசுவத்தமா! நீ செய்த இந்தப் பெரும் செயலை பீஷ்மர், கர்ணன் ஏன்? உன் தந்தையான துரோணர் கூடச் செய்ய வில்லை’’ என்று மனமாரப் பாராட்டிக் கட்டித் தழுவினான். உயிரை விட்டான்.


அதே சமயம், வேறு இடத்தில் இருந்த பாண்டவர்கள் தகவல் அறிந்து, கண்ணனுடன் வந்தார்கள். திரௌபதியும் வந்தாள்; துயரம் தாங்காத திரௌபதி, ‘‘இவ்வளவுக்கும் காரணமான அந்தப் பாவி அசுவத்தாமா பிறக்கும்போது, தலையில் ஒரு மணியுடன் பிறந்ததாகக் கேள்விப்பட்டேன். அவனைக் கொன்று, அந்த மணியைக் கொண்டு வந்தாலொழிய, நான் உயிருடன் இருக்க மாட்டேன்’’ என்று சபதம் செய்தாள்.


(இதன் பிறகு விரிவாக உள்ள தகவல்களை, மிகவும் சுருக்கமாகப் பார்க்கலாம்)அசுவத்தாமாவைக் கொல்வதற்காகப் பாண்டவர்கள் ஓடினார்கள். அவர்கள் வருவதை தெரிந்து கொண்ட அசுவத்தாமா, போரில் ஈடுபட்டு, பிறகு எப்படியாவது பிழைத்தால் போதும் என்ற நிலையில் பாண்டவர்களின் எண்ணப்படி தன்தலையில் இருந்த மணியைப் பாண்டவர் களிடம் கொடுத்தான். இருந்தாலும் கோபம் தணியாத அசுவத்தாமா, உத்தரையின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை அழியும் பொருட்டு அத்திரத்தை ஏவினான்.


‘‘அந்தக் குழந்தைக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லாமல் நான் கட்டிக் காப்பாற்றுவேன்’’ என்று கூறிய கண்ணன், அசுவத்தாமாவிற்குக் கடுமையான சாபம் கொடுத்தார். ‘‘உடல் முழுதும் சீழ், ரத்தம், துர்நாற்றம் ஆகியவைகளால் பீடிக்கப்பட்டு, மக்களால் வெறுத்து விலக்கப்பட்டு, ஆளரவமற்ற காட்டில், மூவாயிரவருட காலம்துன்பப் படுவாயாக!’’ என்று சாபம் கொடுத்தார் கண்ணன். அதை வியாசரும்ஆமோதித்தார்.வியாசர் மகாபாரதத்தில் சொல்லும் அசுவத்தாமாவைப் பற்றிய தகவல்கள் இத்துடன் முடிந்தாலும், அடுத்த யுகத்தில் அசுவத்தாமா, வியாசராக வரப்போகிறார் என்ற தகவலும் உண்டு.


தொகுப்பு: - பி.என்.பரசுராமன்

...

: *

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,