*வீட்டுச் செய்முறையில் இயற்கை உணவகம்*/சாலிகிராமம் ‘மாதவிரையன்பட்டி விஜயா மெஸ்’


*


வீட்டுச் செய்முறையில் இயற்கை உணவகம்*


சாலிகிராமம் ‘மாதவிரையன்பட்டி விஜயா மெஸ்’


சென்னை சாலிகிராமம்  நேரு நகரில்  அமைந்துள்ளது  இயற்கை ஹோம் மேட் புட் உணவகம். உணவகம் என்றால் அங்கே அமர்ந்து சாப்பிடும் வசதியெல்லாம் கிடையாது. பார்சல் மட்டுமே வழங்கப்படும். முழுமையான வீட்டுச் சமையல் செய்முறையில் தயாரிக்கப்படும்  தனது உணவகம் குறித்து பகிர்ந்துகொள்கிறார் அதன்உரிமையாளர் கே.விஜயா.


“சொந்த ஊர் சிவகங்கை பக்கம் மாதவிரையன்பட்டி. மழை பெய்யாமல்  விவசாயம் குறைவானதால் பிழைப்பைத் தேடி சென்னைக்கு வந்தோம் நானும் என் கணவரும். இங்கு வந்ததும் என்ன வேலை  செய்றதுனு எதும் புரியல. எங்க ஊரில்  அப்பா  சின்னதா ஒரு ஹோட்டல் வைத்து நடத்தியிருந்தார். அதில் சமைத்த அனுபவம் இருந்ததால், வீடுகளில் சமையல் வேலைக்கு போகலாம்  என்று முடிவு செய்தேன். வீடுகளுக்குச் சென்று சமைத்துக் கொடுக்கத் தொடங்கினேன்.  என் கணவருக்கு எந்த வேலையும் கிடைக்காததால்,  அவர் மீன்  வாங்கி வந்து வியாபாரம் செய்யத் தொடங்கினார். அவர் இன்றுவரை மீன் வியாபாரம்தான்  செய்துவருகிறார்.


கடந்த  ஐந்து ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு சென்று திரும்பியபோது, நாங்கள்  வந்த வண்டி விபத்தில் சிக்கியது.  அதில் என் கால்களில்  பலத்த அடி. அதனால் காலில்    அறுவைசிகிச்சை  செய்துள்ளேன். அதன்பின்னர்,  என் பிள்ளைகள் இனிமேல் நீங்கள் வேலைக்குப் போக வேண்டாம். வீட்டிலிருந்தபடியே சமைத்துக் கொடுங்கள்  என்று சொன்னார்கள். அப்படித் தொடங்கியதுதான் இந்த இயற்கை  ஹோம் மேட் உணவகம். இது ஹோட்டல் போன்று இல்லாமல், சமைத்து பார்சல் செய்து தருகிறோம். அதுபோன்று ஹோட்டல்களில் தினசரி  பலவகையான உணவுகளை சமைத்து வைப்பது போன்றும் கிடையாது. யாருக்கு என்ன வேண்டும் என்று  கேட்கிறார்களோ  அதைத்தான் சமைத்து கொடுக்கிறோம், முன்பே சமைத்து வைப்பது கிடையாது.


எங்களிடம் பேச்சலர்ஸ்,  ஹாஸ்ட்டலில் தங்கியிருப்பவர்கள், படிக்கும் பிள்ளைகள்  வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், என்று நிறைய  வாடிக்கையாளர்கள்   இருக்கிறார்கள். அவர்களுக்கு மாதம் முழுக்க  மூன்று வேளையும் சமைத்துத் தருகிறோம். மேலும், எங்கள் வீட்டுச் செய்முறையைப் பற்றி அறிந்து கேட்பவர்களுக்கும் சமைத்துத் தருகிறோம். இதைத்தவிர, பிறந்தநாள், திருமண ஆர்டர்கள்,  சைவம், அசைவம் இரண்டுமே  உண்டு.   நவதானிய சமையல்கள்,  சிறுதானிய சமையலும் செய்துத் தருகிறேன்.


தினை, வரகு, குதிரைவாலி,  கேழ்வரகு போன்றவற்றில் பொங்கல், இட்லி. உப்புமா, தோசை, அடை, கஞ்சி வகைகள் செய்வேன். இதைத் தவிர,  நானே   நவதானியங்களில் கஞ்சி  ஹெல்த் மிக்ஸ் பொடி மற்றும் நேந்திரம் வாழைப்பழப் பொடி, இட்லிப் பொடி,  சாம்பார் பொடி  போன்றவற்றையும் தயாரித்து வைத்திருக்கிறேன். அதில் கஞ்சி கேட்பவர்களுக்கு கஞ்சி தயாரித்து தருகிறேன். பொடியாக கேட்டாலும் செய்து கொடுக்கிறேன்.  என்ன வேண்டும் என்று முதல்நாள் சொல்லிவிட்டால்போதும், தேவையானவற்றை தயார் செய்து வைத்துக் கொண்டு மறுநாள் சமைத்துக் கொடுப்பேன். அசைவத்தில்  மீன், சிக்கன், மட்டன்,  இறால் என  எதை கேட்கிறார்களோ அதை செய்துத் தருவேன். பெரும்பாலும், சைவ உணவுகள்தான் விரும்புகிறார்கள்.  


தினசரி வாடிக்கையாளர்கள்   30 பேருக்கு மேல் இருக்கிறார்கள். இதுதவிர, தொலைபேசியில்  அழைத்து ஆர்டர் கொடுத்தால், கேட்கிற ரெசிப்பிகளை பொருத்து  அரைமணி நேரத்தில்  இருந்து  1 மணி நேரத்திற்குள்  சமைத்து அனுப்பிவிடுவேன். இதுவரை  யாருமே  சமையலை சாப்பிட்டுவிட்டு குறை சொன்னது கிடையாது.  எங்கள்  வீட்டில் சமைத்து சாப்பிடுவது போல் இருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள்.  என் பேரன், பேத்தி முதல்கொண்டு நாங்களும் இந்த உணவுகளைத்தான் சாப்பிடுகிறோம்.  இதைத்தவிர,  அம்மாவீட்டு சமையல் என  ஒரு யூடியூப் சேனல் தொடங்கி, அதில் சமையல் ரெசிபிகளை சமைத்துக் காட்டுகிறேன். எனக்கு  நான்கு  பிள்ளைகள்.  இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்  இருக்கிறார்கள்.  இந்த  வருமானத்தில்தான் என்  பிள்ளைகளை   என்ஜினியர் வரை படிக்க வைத்தேன். தொழில் என்பதை தாண்டி ஆரோக்கியத்தை மனதில் வைத்து சேவை போலத் தான் சமையல்  கலையை  பார்க்கிறேன்” என்கிறார்.


வரகு நெல்லிக்காய் சாதம்


தேவையானவை:

வரகரிசி - அரை கப்  

பெரிய நெல்லிக்காய் - 5

வர மிளகாய் - 1

பச்சை மிளகாய் - 2


தாளிக்க :

கறிவேப்பிலை - சிறிதளவு

 கடுகு, உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயம், மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி

நல்லெண்ணெய், இந்துப்பு - தேவைக்கேற்ப.


செய்முறை:  

முதலில் வரகரிசியை 20 நிமிடம் ஊறவைத்து நன்கு களைந்து கொள்ளவும். பின் ஒரு பானையில் இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்கு கொதிவந்ததும் வரகரிசியை அதில் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடம் வரை வேகவிடவும். வரகரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து நீரினை நன்கு வடித்துவிடவும். இப்பொழுது வரகு சாதம் தயார். இந்த வரகு சாதத்தினை ஒரு தட்டில் ஆறவைத்துக் கொள்ளவேண்டும். பெரிய நெல்லிக்காயை கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாகத் துருவிக்கொள்ள வேண்டும். அடுப்பில் வாணலியை வைத்து  நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகைப் போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு போட்டு வறுத்து சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும். அதனுடன் துருவிய நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும். சிறிது நேரம் வதங்கியவுடன் (இரண்டு அல்லது மூன்று நிமிடம்) அடுப்பிலிருந்து இறக்கி நெல்லிக்காய் கலைவையை ஆற வைத்த வரகு சாதத்துடன் சோ்த்து கிளற வேண்டும் (வரகு சாதம் குலையாமல் கிளறவேண்டும்).

...

 *

*

 *

 *

 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி