உயரங்களே அண்ணாந்து பார்க்கும் உயரம்
உயரங்களே அண்ணாந்து பார்க்கும் உயரம்
*
சிவாஜி என்ற நடிகர் என் மனதில் எப்படிப்பட்ட சித்திரமாக பதிந்திருக்கிறார் என்று கண்கள் மூடி மனதின் உள்ளே நுழைகிறேன்…அங்கே குகை ஓவியங்களாகக் கண்களில் விரிகின்றன பல காட்சிகள்.
"வரி… வட்டி… கிஸ்தி…ஏன் கொடுக்க வேண்டும் வரி?எதற்குக் கொடுக்க வேண்டும் வட்டி? " எனும் வீரபாண்டிய கட்ட பொம்மனின் ஆவேச முகம்…
‘நக்கீரா… நன்றாக என்னை உற்றுப்பார்…’ என்ற திருவிளையாடல் பரமசிவனின் உக்கிர முகம்…
‘கிளிக்கு றெக்கை முளைச்சிடுத்து… அதான் ஆத்தவிட்டுப் பறந்து போயிடுத்து…’ என்ற கௌரவம் பாரிஸ்டர் ரஜினிகாந்த்தின் விரக்தி முகம்…
‘உங்கொப்பனவிட நீ நல்லாத்தேன் பேயுறப்பு…’ என்று பங்காளியின் மகனிடம் நக்கலாகப் பேசும் தேவர் மகன் பெரிய தேவரின் எள்ளல் முகம்...
'காதலே… போ… போ…' என்று மதுக் கோப்பையைக் கையில் ஏந்தியபடி தலையில் வழியும் ரத்தத்தோடு கதறும் வசந்த மாளிகை ஆனந்த்தின் கையறுநிலை முகம்,
தனது கலையில் தானே லயித்து
நாதஸ்வரம் வாசிக்கும் 'தில்லானா மோகனாம்பாள்' சிக்கல் சண்முக சுந்தரத்தின் பரவச முகம் ...
இறைவனைத்தேடிக் கண்களில் ஏக்கத்தோடும் கால்களில் தள்ளாட்டத்தோடும் அலைந்து திரியும் திருவருட் செல்வரின் ஞான முகம் ...
'உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி...' என்று மனைவியிடம் பாடும் பட்ஜெட் பத்மநாபனின் அவலமுகம் ,
'நீதானா அந்தக் குயில்...
யார் வீட்டு சொந்தக் குயில்... ஆத்தாடி... மனசிலொரு காத்தாடி....
பறந்ததே... உலகமே மறந்ததே... ' என மன இறுக்கங்கள் தளர்ந்து கட்டுகள் அறுந்த விடுதலையில் சிறிது நேரம் திளைத்து அதற்காக ஏங்கி இரங்கும் 'முதல் மரியாதை ' பெரிய தலைக்கட்டின்
நெகிழ்ச்சி முகம் ...
என முடிவிலாக் குகை ஓவியக் காட்சிகள் விரிந்து கொண்டே செல்கின்றன.
சிவாஜி சிறப்பிதழுக்காக ஒரு கட்டுரை கேட்டபோது 300 படங்களுக்கும் மேல் நாயகனாக நடித்த அந்த நடிகர் திலகத்தைப் பற்றி எதை எழுத? என யோசித்துப் பின் எதை எழுதினாலும் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும் விதமாக விளக்கிவிட இயலாது எனும் எண்ணத்தில் சோர்ந்து... ஆனால் மலரில் ஒரு கட்டுரை எழுதும் வாய்ப்பை நழுவ விடவேண்டாம் என சுயநலமாக முடிவெடுத்து
அவர் கணேசன் எனும் புதுமுகமாக அறிமுகம் ஆன பராசக்தி படத்தைப் பற்றி எழுதலாம் என நினைத்தேன்.
*
சினிமாதான் என் துறை என்பதைத் தீர்மானிக்கும் காலத்திற்கு முன்பே எனக்குள் முதலில் நுழைந்தவை திரைப்பட வசனங்களே. ‘ஓடினாள்…. ஓடினாள்… வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்…’ என கலைஞர் எழுதிய பராசக்தி பட வசனம், எனக்குள் ஏற்படுத்திய பரவசத்தை விளக்க வார்த்தைகளே இல்லை. கண்களால் அக்காட்சியைக் காணும் முன்பே காதுகளால் அவ்வசனங்களையும் குரலின் ஏற்ற இறக்கங்களையும் ருசித்துக் கொண்டிருந்தேன்.
திரைப்படங்களை நம் மக்கள் எவ்வளவு நேசித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்குக் கோயில் திருவிழாக்களிலும், குடும்ப விழாக்களிலும் ஒலிபெருக்கி கட்டி அவற்றில் திரைப் பாடல்களையும், ஒலிச்சித்திரங்களையும் ஊருக்கே கேட்கும் விதத்தில் அவர்கள் ஒலிபரப்பக் கேட்டு மகிழ்வதே சாட்சி. அப்படி ஒலிபரப்பப்பட்ட பாடல்களும் வசனங்களும்தான் நான் திரைப்படத் துறையில் நுழைந்ததற்கு விதை போட்டிருக்க வேண்டும் என்பதை இப்போது உணர்கிறேன்.
பராசக்தியின் நீதிமன்ற வசனத்தைப் பல முறை கேட்டிருக்கிறேன். பள்ளிப் பருவத்தில் வீட்டிலிருந்து கடையில் இருக்கும் அப்பாவுக்குக் கேரியரில் சாப்பாடு எடுத்துக் கொண்டுபோகும்போது வழியில் எங்காவது அவ்வசனம் ஒலிபெருக்கியில் கேட்டால் நின்று முழுவதையும் கேட்டுவிட்டு அதன் பிறகே நகர்வேன்.
மனதில் பதிந்த வரிகளை வீட்டிலும் நண்பர்களிடமும் உச்சரித்து மகிழ்வேன். ஆனால் எத்தனை முறை பயிற்சி செய்து உச்சரித்தாலும் மூலத்தின் உயரத்தை ஒரு முறை கூட என் குரல் எட்டவில்லை. மீண்டும் மீண்டும் பேசிப் பார்த்துக் கண்ணுக்குத் தெரியாத அந்த நடிகனோடு யாருக்கும் தெரியாமல் போட்டி போட்டுக்கொண்டிருந்தேன்.
‘வாழவிட்டார்களா அவளை…?’ என்று கேட்கும்போது எழும் ஆதங்கம் எப்படிப் பேசிப் பார்த்தாலும் வரவில்லையே எனக்கு. ‘உனக்கேன் அக்கறை’ என்று குறுக்கே பாய்ந்து கேட்டுவிட்டு ‘என்று கேட்கக் கூடும் இன்று சட்டத்தை நீட்டுவோர்’ என்று கேலியுடன் தொடரும் சூட்சுமம் பிடிபடவில்லையே என் குரலுக்கு... என்று இளம்பருவப் பேதமையில் நான் வருந்தியதுண்டு. பிறகுதான் உணர்ந்தேன். நான் மட்டுமல்ல…. பெரும் நடிகர்களே கூட – ஏன் - உலகெங்கும் பரந்து கிடக்கும் கலைத் துறையின் மேதைகள் எவரும் கூடத் தொட முடியாத ஒரு வானத்தை நோக்கி நான் கல் வீசியிருக்கிறேன் என்று.
புதுமுகமாக அறிமுகமாகும் ஒரு நடிகருக்கு எத்தனை விதமான உணர்ச்சிகளை நிகழ்த்திப் பார்க்கும் வாய்ப்புகள் உண்டோ அவ்வளவும் ‘பராசக்தி’ படத்தில் அமைந்திருந்தது சிவாஜி கணேசனுக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றே நினைக்கிறேன்.
பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர்கிறது என்கிற பழகிய திரைப்படக் கதைதான் அடிப்படை என்றாலும் அன்றைய சமூகத்தின் வாழ்க்கையை அதன் கலாச்சார, அரசியல், சமூக நிலையை அதன் ஒவ்வொரு காட்சியும் எதிரொலிக்கும்.
அதனால் முதன்மைக் கதாபாத்திரமான நாயகனுக்குப் பர்மாவில் போரினால் குடும்பத்தைப்பிரியும் போது சோகம், தங்கை திருமணத்தைக் காணப்போகும் மகிழ்ச்சி, கப்பலிலே வரும்போது பெருமிதம், சென்னை வந்ததும் ஒரு பிச்சைக்காரனின் குரல் கேட்டதும் எள்ளல், நடனமங்கையிடம் ஏமாந்ததும் சுய இரக்கம், வேலை தேடும்போது வேலை கிடைக்காத அவலம், பின் ஏமாற்றிப் பிழைக்கும் முடிவுக்கு வந்து பித்தனாக நடிக்கும் கபடம், சமூகத்தின் பொய் வேடதாரிகள் எளிய மனிதர்களை இரையாக்கிக் கொள்ளும் கொடுமை கண்டு கோபம், கொடுமைகள் கண்டு பொங்கி வெடிக்கும் ஆவேசம் எனப் பல விதமான உணர்வுநிலைகளை வெளிப்படுத்தும் காட்சிகள் படத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அக்காட்சிகளுக்கெல்லாம் பொருத்தமாக நடிப்பை வழங்கிப் பிரமிக்க வைத்திருக்கிறார் அந்தப் புதுமுக நடிகர்.
சரியான பாத்திரத்திற்கு ஒரு சரியான நடிகராக சிவாஜி கணேசன் வந்து சேர்ந்திருக்கிறார்.
படத்தை வெளியிட்ட போது முதன்முதலாக ஒரு புதுமுக நடிகரைப் பார்த்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என இப்போது நினைத்துப் பார்க்கும்போது அந்த பிரமிப்பைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.
ஒரு நல்ல நடிகனுக்கு உடல் மெழுகைப் போல் நெகிழ்கிறது ; பாறையைப் போல் இறுகுகிறது ; இறகைப் போல் மிதக்கிறது ;கம்பம் போல் நிலைக்கிறது.
உடலைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தான் சொன்னபடியெல்லாம் அதை அசைய வைக்கமுடிகிறது; அசையாமல் நிலை நிறுத்தவும் முடிகிறது.
மூச்சை நிறுத்தவும் இழுக்கவும் வெளியிடவும் ஒரு சூத்திரம் கண்டுபிடித்து அதைத் தன் கலைக்கு ஏற்பப் பயன்படுத்தத் தெரிகிறது. தன் உடலின் பலம் என்ன? பலவீனம் என்ன? தன்னிடம் உள்ள கவர்ச்சியான அம்சம் எது? பிறர் வெறுக்கும்படி ஏதாவது இருக்கிறதா? என ஓயாமல் ஆராய்ந்து ஆராய்ந்து அதை தன் கருவியாக்கி விடுகிறான்.
உண்மையான நடிகனுக்கு உடல் ஒரு பொம்மலாட்ட பொம்மை. மனதுக்குள் ஒளிந்து நின்று அதை இயக்கும் சூத்திரதாரிதான் அவன்.
வெளியில் தெரியும் உருவத்தைத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் தனக்குள்ளேயே மறைந்து வாழ்ந்து அதை இயக்கும் கலைஞனே நடிகன்.
இவை எல்லாவற்றையும் சிறுவனாக இருந்தபோதே நாடகக் கம்பெனியில் சேர்ந்து நாள்தோறும் பயின்றதால் சிவாஜிக்கு நடிப்பு என்பது ‘தண்ணிபட்ட பாடாக’ ஆகிவிட்டது. அதனால்தான் மேடையானது கடலாகிவிட ஒரு மீனைப்போல் அவர் நீந்துகிறார் . திரைசீலை வானமாகிவிட பறவையைப் போல் அவர் இறக்கை விரிக்கிறார்.
‘ஆரியக் கூத்தாடினாலும்…’ என்ற பராசக்தியின் பாடலைப் பாருங்கள்…காற்றில் மிதக்கும் இறகாகியிருப்பார்.
தங்கை வீட்டின் எதிரில் ஒரு சுமைதாங்கிக்கல்லில் அமர்ந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்யும் பைத்தியக்காரனின் சேட்டைகளைக் கவனித்துப் பாருங்கள்… மீனாகிக் காற்றில் நீந்திக் கொண்டிருப்பார்.
பைத்தியக்காரனாக நடித்துக்கொண்டு ஒரு சுவற்றின் கட்டையில் அமர்ந்திருப்பார் . அப்பொது ஒரு ‘ராஜதர்பார்’ நடத்துவதுபோல் ஒரு ஓரங்க நாடகக் காட்சி வருகிறது.
மன்னனாக , மந்திரியாக, குடிமக்களில் ஒரு சராசரியாக எனப் பல பாத்திரங்களாக மாறி அனாயசமாகச் செய்திருப்பார். இவருக்காகவே இக்காட்சியை எழுதினார்களா? அல்லது அப்படி ஒரு காட்சி கிடைத்ததும் சிவாஜி ஒரு கை பார்த்துவிட்டாரா?
‘ஓடினாள் ஓடினாள்…. வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்’ என்று ஒரு பாத்திரம் கோபத்தோடு நீதிமன்றத்தில் தன் உணர்வை வெளிப்படுத்தியதை எத்தனை வருடங்களாகச் சுமந்து கொண்டு அலைகிறோம். பல நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் அந்த உணர்வு நம் நெஞ்சில் நீடித்து நிலைத்து வாழ்கிறது.
கதாபாத்திரத்தின் உணர்வை உள்வாங்கி அதைத் தன் உணர்வாக மாற்றிக்கொள்ளத் தெரிந்த -அந்த பாத்திரத்திற்குள் கூடுவிட்டுக்கூடு பாயும் வித்தை தெரிந்த நடிகர்- காட்சியின் உயிரைத் தன் உயிரோடு கலந்து கொடுத்த அர்பணிப்பால் நிகழ்ந்தது அது.
இவை எல்லாம் ஒரு அறிமுக நடிகருக்கு எப்படி சாத்தியமாயிற்று?
கருவிலேயே திருவுடன் பிறந்ததாலா?
பயிற்சி… பயிற்சி… ஓயாத பயிற்சி…
தான் நேசிக்கும் கலையின் மீது அவன் கொண்ட காதல்… காதல்… தீராத காதல்…
அதுதான் முதல்படத்திலேயே சிகரத்தில் ஒரு நாற்காலியைப் போட்டு அதில் அமர்ந்து விட முடிந்தது. அதைத் தன் இறுதி நாள் வரைத் தக்கவைத்துக் கொள்ளவும் முடிந்தது
*
எத்தனை விதமான நடைகள்..
எத்தனை விதமான பார்வைகள்…
எத்தனை விதமான ஸ்டைல்…
எத்தனை எத்தனை பாவங்கள்…
நடிப்பு எனும் கலையின் விளக்கம்தான் அவர் நடித்த பாத்திரங்கள்.
எந்த அளவு நெகிழவேண்டும்? எந்த அளவு இறுகவேண்டும்.?தசைகள் தளர்த்தால் போதுமா? உள்ளே நாடி நரம்புகள் இறுகவேண்டுமா? மூச்சைக் கட்டுப்படுத்த வேண்டுமா? இதயத்துடிப்பையும் இரத்த ஓட்டத்தையும் கூடக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டுமா? என ஒவ்வொரு கணமும் யோசித்துப் பயிற்சி செய்து பாத்திரங்களுக்கு வடிவம் கொடுத்துப் பின் உயிரும் உணர்வும் கொடுத்து காட்சியில் அவர் தோன்றிய ஒவ்வொரு முறையும் வாழ்க்கையின் ஒரு துண்டு பதிவாகியது. காலத்தின் ஒரு துளி உறைந்து நின்றது.
இன்று உலகமே ‘நடிகர் திலகம்’ எனப் போற்றும் ஒரு காலகட்டத்தில் இதை எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் அந்தப் படத்தில் அவர் நடிப்பதற்குள் அவர் பட்ட பாடுகளைப் பற்றி ‘நான் பேச நினைப்பதெல்லாம்….’ எனும் பொம்மைப் பத்திரிக்கையின் தொடரில் சிவாஜியே எழுதி இருப்பதை படிக்கும்போது யாரையும் சோதிக்காமல் காலம் ஏற்றுக் கொள்ளாது போலிருக்கிறது என எண்ணாமல் இருக்க முடியவில்லை. லட்சக்கணக்கான மக்கள் ரசித்துக் கொண்டாடும் இந்த நடிகனை ஆயிரக்கணக்கான நுட்பமான நடிப்பை வெளிப்படுத்தும் இந்த முகத்தைப் பார்த்து அது சரியில்லை என்றும் தோற்றம் சரியில்லை என்றும் படத்தில் இருந்து நீக்கச் சொன்னவர்களும் இந்த உலகில் உண்டாம். நெருப்பில் புடம் போடப்பட்டால் தங்கம் என்ன மங்கியா விடும்?
தன் சரித்திரத்தின் ஒவ்வொரு எழுத்தையும் தன் ரத்தத்தால், வியர்வையால், கன்ணீரால், மூச்சுக்காற்றால், இதயத்துடிப்பால், தசைகளில் இயக்கத்தால் நரம்புகளின் அதிர்வால், அணுக்களின் அசைவால் எழுதிய அந்த மாபெரும் கலைஞன் அவற்றை எல்லாம் மீறித்தான் மேலேறி வந்தான். உயரங்களே அண்ணாந்து பார்க்கும் உயரங்களை அடைந்தான்.
அவர் தோளில் மாலை போடும் தகுதி எனக்கில்லை. அதனால் அவர் காலில்ஒரு ரோஜாவாக இந்தக் கட்டுரையைச் சமர்ப்பிக்கிறேன்.
*
- பிருந்தா சாரதி (திரைப்பட இயக்குநர் மற்றும் வசனகர்த்தா)
*
நன்றி: நடிப்பு - காலாண்டிதழ் (ஜனவரி 2016) சிவாஜி கணேசன் சிறப்பு மலர்
*
நடிகர் திலகம் பிறந்த நாள் (அக்டோபர் 1) பதிவு
Comments