பொன்னியின் செல்வன் /எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்
பொன்னியின் செல்வன்
என்னோட பார்வை -
எழுத்தாளர்
பட்டுக்கோட்டை பிரபாகர்
முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் ஆர்வம் எந்தப் படத்திற்கும் இருந்ததில்லை. மாப்பிள்ளை டிக்கெட் புக் செய்து அனுப்பியிருந்ததால் பொன்னியின் செல்வனுக்கு வாய்த்தது.
இந்தப் படத்தை விமரிசிப்பதற்கு முன்பாக ஒரு சில விஷயங்களை மனதில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
மணிரத்னம் முன்பு இருந்த மிகப்பெரிய சவால்கள் இவை:
ஆனாலும் 5 பாக நெடு நாவலை இரண்டு பாக திரைப்படமாக சுருக்கி வழங்க வேண்டும். நாவலின் சுவாரசியம் குறையக்கூடாது. நாவலின் பாத்திரங்களின் தன்மை கெட்டுவிடக்கூடாது. அதே சமயம் நாவல் வாசிக்காதவர்களுக்கும் கதை புரியவேண்டும். நாவல் வாசித்தவர்கள், வாசிக்காதவர்கள் இரண்டு வகையினரையும் ஈர்க்க வேண்டும். தவிர தமிழ் தாண்டிய மற்ற மொழியினருக்கும் கதை போய்ச் சேர வேண்டும்.
திணறித்தான் போயிருக்கிறார்.
நாவலை அதன் சம்பவ வரிசைப்படியே படமாக சொல்ல முடிவெடுத்ததில் ஒருவித ஆவணப்படுத்துதல் என்கிற தன்மை வந்துவிட்டது. அங்கே திரைக்கதை சுதந்திரத்தைக் கையில் எடுக்காமல் விட்டுவிட்டார்.
முதல் பாகம் முடியும்வரைக்கும் கதையின் முக்கியமான பாத்திரங்கள் வந்துகொண்டேயிருப்பது இயக்குனரின் தவறல்ல.. அத்தனைப் பாத்திரங்கள் அந்தக் கதையில் உள்ளதே.
இத்தனைக்கும், கந்தமாறன் கொலைச் சதி, கலங்கரை விளக்கத்தில் பூங்குழலியின் கவித்துவமான அறிமுகம், குடந்தை ஜோதிடர், என்று அழகழகான பகுதிகள் மிஸ்ஸிங். அல்லது எடுக்கப்பட்டு கத்தரியில் எகிறியிருக்கலாம்.
எல்லா கதாப்பாத்திரங்களுக்குமான நடிகர்களின் தேர்வில் நியாயம் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அத்தனைப் பேரும் சீசன்ட் நடிகர்கள். அவர்கள் அந்தந்த பாத்திரங்களுக்கு கச்சிதமாகப் பொருந்தி சிறப்பாக நடித்திருப்பது சிறப்பு.
படு ஆச்சரியமாக ஆழ்வார்க்கடியான் பாத்திரத்தை ஜெயராம் ஹேண்டில் செய்திருக்கும் விதத்தில் புத்தகத்தில் விடவும் ரொம்பப் பிடித்தது. அதேப்போல த்ரிஷா அமைதியான கள்ளத்தனமான புன்னகையுடனேயே அத்தனைக் காட்சிகளிலும் வசீகரிக்கிறார். ஐஸ்வர்யா ராய் என்னைக் கவரவில்லை என்று சொன்னால் ஐஸ்வர்யாராயின் டை ஹர்ட் ஃபேன்ஸ் அடிக்கவரலாம். ஆதித்த கரிகாலன் மூர்க்கத்தனத்துடன் பல ஷேட்ஸ் கொண்ட பாத்திரம் என்பதால் விக்ரமுக்குத் தீனி. அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவி கம்பீரம் சேர்த்துவிட்டார்.
தஞ்சாவூர், பழையாரை, இலங்கை என்று பெயர் போடுகிறார்களே ஒழிய.. அந்தந்த ஊர்களை ஸ்தாபிக்கும் விதமாக காட்சிகள் இல்லாததில் சம்பவம் நிகழுமிடங்கள் எல்லாமே கொஞ்சம் ஒட்டாமல் தள்ளியிருக்கின்றன.
ஆதித்த கரிகாலனுக்கும், அருண்மொழிவர்மனுக்கும் அறிமுகக் காட்சிகளில் வைக்கப்பட்டிருக்கும் போர்க் காட்சிகள் விரயம். யாருக்கும் யாருக்குமான போர் , அதில் யார் வெல்ல வேண்டும் என்று எந்தப் பின்னணியும் தெளிவாக பதியவைக்காததால் மிகுந்த பொருட் செலவில் எடுக்கப்பட்ட அந்தப் போர்க்காட்சிகள் சும்மா கடந்துபோகின்றன.
இனிமையான எல்லா பாடல்களையும் பாதியிலேயே கழுத்தை நெறித்துவிடுகிறார்கள். ரவிவர்மனின் கேமிரா அத்தனை உழைத்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் அருகில் இடம்பெறுகிற கடல் போர் மற்றும் சுனாமி காட்சிகளில்.
காட்டப்படுகிற கப்பல்கள் எல்லாம் கட்டு மரத்திற்கு பெரியண்ணன் சைசில் கம்பீரமே இல்லாமல் இருக்கின்றன. வீர் பாண்டியன் கொலைக் காட்சி மேடை நாடகம் மாதிரி வெகு சுமார் செட்டில் எடுக்கப்பட்டிருக்கும் விதம் நம்ப முடியவில்லை.
ஃபேன்டசி கலந்த முழுக்க கற்பனைக் கதைகளான பாகுபலி, ட்ரிபிள் ஆர் படங்களை இதனுடன் ஒப்பிடுவது அநியாயம். ஆனால் சமீபத்தில் பேன் இண்டியன் சரித்திரப் படங்களாக அவை மிகப் பெரிய வெற்றியைப் பெற்றதால் சாதாரண சினிமா காதலர்கள் அந்தப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கத்தான் செய்வார்கள்.
இது தமிழ் நாவலின் படம். எல்லாப் பெயர்களும் தமிழ்ப் பெயர்கள். தமிழ் தாண்டி மற்ற மொழியினர் புரிந்து ரசிக்க திரைக்கதையில் மேஜிக் நிகழ்ந்திருக்க வேண்டும்.
Comments