வில்லுக்கு வணக்கம்

 


வில்லுக்கு வணக்கம்

வில்லிசை வேந்தர்

சுப்பு ஆறுமுகம் மறைந்தார்

வயது முதிர்ந்து 

பூரணமாகி நிறைந்தார்.


தந்தனத்தோம் என்று பாடியே 

வில்லிசை வாசிப்பார்

கலைவாணியைப் பூசிப்பார்

அதில்

அகிலத்தையே நேசிப்பார்.


அன்பொழுகும்

வில் அவரது வில்


அது யாரையும் காயப்படுத்தாத வில்

எதையும் சேதப்படுத்தாத வில்.


நம் அறிவில் 

நிலைத்த வில்.


சொற்களை

வில் கொண்டு வீசுவார் 

அவற்றில் இசை பூசுவார்

இடையில் கொஞ்சம் பேசுவார் .


இதிகாசங்களை 

இசைப் பாட்டாய்ப் பாடுவார்

பாத்திரங்களைப் படமாகக் கண்முன்னே ஓட்டுவார் .


வரலாற்றை எளிய கதையாகக் கூறுவார்

காந்தி பாரதி

புத்தரை எல்லாம்

மீண்டும் அழைத்துவந்து நம்மிடத்தில் காட்டுவார்

ஆணி அடித்துப் படமாக அவர்களை

நம் நெஞ்சில் மாட்டுவார்.


ஆன்மீகம் அறநெறி 

தத்துவம் அனைத்தையும் 

உப்பு புளி மிளகாய் போல் கதைகளில் சேர்ப்பார் 

சமையலின் நடுவே தானும் ருசி பார்ப்பார் 

நகைச்சுவையால் 

நம்மை எல்லாம் ஈர்ப்பார்.


நாக்கிற்கு இனிமை அறுசுவை 

இதயத்திற்கு இனிமை இவரது

நகைச் சுவை. 


கலைவாணர் , நாகேஷ் எனும் ஆளுமைகளோடு முன்பு பணியாற்றினார்

வில்லிசையால்

பல கதைகள் அரங்கேற்றினார்

கலை வாழ்வால்

தன் கடமைகளை நிறைவேற்றினார்.


வீணை வாசிக்கும் கலைவாணி

இவர் வில்லை வாங்கியும் சில சமயம் வாசிப்பதுண்டு 

பின் அதிலேயே அவள் வசித்ததும் உண்டு.


வில்லில் இருந்தவர் 

இன்று அம்பாகப்பறந்தார் 

உடல் இறந்தார்

உயிர் துறந்தார் 

ஆனாலும் 

நம் நெஞ்சமெல்லாம் நிறைந்தார்.


இன்று

தனித்து அழுகிறது 

அவர்  வாசித்த வில் 

தமிழர்கள் நேசித்த வில்.


*

பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை