*கலாம் கண்ட கடைசி கனவை நனவாக்குவோம்*

 *


கலாம் கண்ட கடைசி கனவை நனவாக்குவோம்*


ஒரு காலத்தில் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா பின்தங்கிய நிலையில் இருந்தது. ஏவுகணை தொழில்நுட்ப பரவலைக் கட்டுப்படுத்தும் சர்வதேச அமைப்பான எம்.டி.சி.ஆர்.-ன் கெடுபிடியால் இந்தியாவுக்கு ஏவுகணை தொழில்நுட்பம், தளவாட உதவிகள் கிடைக்கவில்லை. இந்த இக்கட்டான சூழலில் அப்துல் கலாம் தலைமையில் கடந்த 1983-ம் ஆண்டு, தேடித் தாக்கும் (Guided missiles) ஏவுகணைகளை தயாரிக்கும் திட்டத்தை இந்தியா தொடங்கியது. கலாமின் வழிகாட்டுதலில் இந்திய விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் உள்நாட்டிலேயே தேடித் தாக்கும் ஏவுகணை தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது.


கலாம் விதைத்த விதையால் ஏவுகணை தொழில்நுட்பத்தில் இந்தியா இப்போது பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக நீண்ட தொலைவு சீறிப் பாயக்கூடிய ஏவுகணைகளுக்கான ரீ-என்ட்ரி தொழில்நுட்பத்தை உள்நாட்டில் உருவாக்கியது மிகப்பெரிய சாதனையாகும். அதாவது ரீ-என்ட்ரி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் ஏவுகணைகள் பூமிக்கு மேலே பல நூறு கிலோ மீட்டர் பயணித்துவிட்டு பின்னர் வானில் இருந்து பூமி நோக்கி திரும்பி இலக்கை தாக்கி அழிக்கும்.


சூப்பர் கம்ப்யூட்டர், ஒரே நேரத்தில் பல இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளுக்கான தொழில்நுட்பம், அதிநவீன வழிகாட்டி, சென்சார் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களை இந்தியா சொந்தமாக உருவாக்கி இருக்கிறது. தொழில்நுட்பம் மறுக்கப்படுவது, தொழில்நுட்பத்தை உருவாக்கு வதற்கான வழியை ஏற்படுத்தும் என்பதை இந்திய விஞ்ஞானிகள் உலகுக்கு நிரூபித்து உள்ளனர்.


அணு ஆயுதங்களை சுமந்து செல்லும்அக்னி ஏவுகணைகளை இந்தியா வெற்றிகரமாக தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகள் 700 கி.மீ. முதல் 5,000 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்டவை. இதன்மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருக்கிறது. வலிமை, வலிமையால் மதிக்கப்படும் என்பதற்கு உதாரணமாக இந்தியா திகழ்கிறது.


சூப்பர் கம்ப்யூட்டர்


ஆரம்ப காலத்தில் அக்னி ஏவுகணைக்கான சூப்பர் கம்ப்யூட்டர் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு எந்த நாடும் வழங்கவில்லை. இதன்காரணமாக முதலில் சாதாரண கம்ப்யூட்டர்கள் மூலம்அக்னி ஏவுகணையின் வடிவமைப்பு உருவாக்கப்பட்டது. இதனால் நீண்டகாலதாமதம் ஏற்பட்டது. ரீ-என்ட்ரிதொழில்நுட்பத்தில் அக்னி ஏவுகணையை வடிவமைக்க அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டர் அத்தியாவசியமாக தேவைப்பட்டது


தலைநகர் டெல்லியில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் வானிலையை கண்காணிக்க சூப்பர் கம்ப்யூட்டர் இருந்தது. அமெரிக்கா வழங்கிய இந்த கம்ப்யூட்டரை வேறு எந்த பணிக்கும் பயன்படுத்தக்கூடாது என்று அந்த நாடு கண்டிப்புடன் நிபந்தனை விதித்திருந்தது. அதோடு இந்தியாவுக்கு சூப்பர் கம்ப்யூட்டரை வழங்க எந்தவொரு நாடும் முன்வரவில்லை.


இந்த சவாலான நேரத்தில் இந்திய பல்கலைக்கழங்களில் புதிதாக சேர்ந்திருந்த 14 இளம் விஞ்ஞானிகள் சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கும் ஆய்வில் இறங்கினர். அனுராக் என்றுபெயரிடப்பட்ட அந்த குழு, 24 மாதங்களில் அதிநவீன சூப்பர் கம்ப்யூட்டரை உருவாக்கியது.


இந்தியாவுக்கு வெளிநாடுகள் வழங்க மறுத்த சூப்பர் கம்ப்யூட்டரைவிட உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சூப்பர் கம்ப்யூட்டர் 20 மடங்கு வேகத்தில் செயல்பட்டது. சாதாரண கம்ப்யூட்டர் மூலம் ரீ-என்ட்ரி ஏவுகணைக்கான ஒரு மாதிரியை உருவாக்க 9 நாட்கள் தேவைப்பட்டது. உள்நாட்டு சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் 5 நிமிடங்களில் ஒரு மாதிரியை தயாரிக்க முடிந்தது. இது அக்னி ஏவுகணை திட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது.


நமது நாடு எதிர்கொள்ளும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் இளைஞர்களுக்கு உள்ளது. இந்தியாவின் எதிர்காலம் அவர்கள் கையில் உள்ளது என்று கலாம் அறுதியிட்டு கூறினார். அவரது நம்பிக்கையை இன்றளவும் இளைஞர்கள் காப்பாற்றி வருகின்றனர்.


பிரம்மோஸ் ஏவுகணை


இந்தியா, ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை, இந்தியாவை முதலிடத்துக்கு உந்தி தள்ளி உள்ளது. இது உலகின் அதிவேக சூப்பர்சானிக் ஏவுகணை ஆகும். நிலம், கடல், வானில் இருந்துஏவும் வகையில் பிரம்மோஸ் தயாரிக்கப்பட்டு, முப்படைகளிலும் சேர்க்கப்பட்டிருக்கிறது. வேகம், வலிமை, துல்லியமாக தாக்கும் திறனில் பிரம்மோஸ் ஏவுகணைக்கு ஈடு இணை எதுவும் இல்லை. இன்றளவும் இந்திய பாதுகாப்பு படைகளின் பிரம்மாஸ்திரமாக, பிரம்மோஸ் விளங்குகிறது. அடுத்து ஹைப்பர்சோனிக் ஏவுகணை தயாரிப்பில் இந்தியா தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இது கிருஷ்ணரின் சுதர்சன சக்கரம் போன்று உருவாக்கப்படும்.


பூமியைக் காப்போம்


‘‘அண்டவெளியில் பூமியில் மட்டுமே உயிரினங்கள் வாழ முடியும்.எதிர்கால சந்ததியினருக்காக பூமியைக்காக்க வேண்டும்’’ என்று அமெரிக்க விண்வெளி ஆய்வாளர் கார்ல் சேகன்உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.அவரது கூற்று நூற்றுக்கு நூறு உண்மை. உலகின் பல்வேறு பகுதிகளில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் கருத்து வேறுபாடுகள், வல்லரசு கனவு, எல்லைப் பிரச்சினைகளை மறந்து மனித குலம் ஒன்றியணைய வேண்டும்.


தமிழ் கவிஞர் கணியன் பூங்குன்றனார், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று முழங்கினார். எல்லா ஊர்களும் எமது ஊர், நாம் அனைவரும் உறவினர் என்று சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பே அவர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பின்படி உலகம் ஒன்றுபட வேண்டும். சுற்றுச்சூழலைச் பாதுகாக்க வேண்டும்.


கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள மேலாண்மை கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு அப்துல் கலாம் உயிரிழந்தார். அன்றைய தினம் ‘‘பூமியை காப்போம்’’ என்ற தலைப்பில் அவர் பேசினார். அவரது வாழ்நாளின் கடைசி கனவை நனவாக்க, அவரது பிறந்த நாளான இன்று நாம் உறுதியேற்க வேண்டும்.


பூமி பந்தில் மனித குலம் அமைதி, மகிழ்ச்சியோடு வாழ வேண்டும். சுத்தமான குடிநீர், தூய்மையான காற்று, இயற்கை விளைபொருட்கள், தரமானகல்வி, அனைவருக்கும் வேலைவாய்ப்பு, எல்லோருக்கும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும்.


அன்டார்டிகாவுக்கு மேலே ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டிருக்கும் ஒட்டையை அடைக்க வேண்டும். வளர்ந்த நாடுகளின் விண்வெளி தொழில்நுட்பம் மக்கள் நலன் சார்ந்ததாக மட்டுமே இருக்க வேண்டும். இன்னொரு போர்க்களமாக விண்வெளியை மாற்றக்கூடாது. விண்ணில் மிதக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும்.


உலகம் முழுவதும் 4,000 கோடி மரங்களை நட்டு, பூமியை ஆக்சிஜன் உற்பத்தி ஆலையாக மாற்ற வேண்டும். அப்போதுதான் பூமித் தாய் பூரிப்பாள். இந்த லட்சிய கனவை, நனவாக்க அனைத்து நாடுகளும் ஒரணியில் திரண்டு பூமியைக் காக்க உறுதியேற்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,