டாக்டர் ரங்காச்சாரி

 


டாக்டர் ரங்காச்சாரியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?”

“நல்லாப் பார்த்திருக்கேன். இப்போ இருக்காப்போல கண்ணுக்கு ஒரு டாக்டர், காதுக்கு ஒரு டாக்டர், பல்லுக்கு ஒரு டாக்டர்னு அப்போ ஏது? எல்லாத்துக்கும் ஒரே டாக்டர்தான். அவர்கிட்டே அவர்தான் ரங்காச்சாரி. எப்பவும் ரெண்டு கார் இருக்கும். ஒண்ணு ரோல்ஸ்ராய்ஸ், இன்னொண்ணு போர்டு. பணக்காரங்க வீட்டுக்கு வீட்டுக்கு ரோல்ஸ்ராய்ஸிலே போவார்; ஏழையின் வீட்டுக்கு போர்டிலே போவார். எங்கே போனாலும் பெட்ரோல், விஸிடிங் பீஸா செலவுக்காவது அவருக்கு ஒரு ரூபா கொடுத்துடணும். கொடுக்கலேன்னா இன்னொரு தடவை கூப்பிட்டா வரமாட்டார்…”
“எப்படி வரமுடியும்? பெட்ரோலை யாரும் தருமத்துக்குப் போடமாட்டாங்களே!”
“நாடகம் பார்க்க வரப்போல்லாம் அவர் எங்களைப் பார்க்கத் தவற மாட்டார். மேடைக்கு வந்து, ‘கண்ணைக் காட்டு ‘ம்பார். ‘நாக்கை நீட்டு’ம்பார்; வெளிக்குப் போறியா? ம்பார், ‘இல்லே’ன்னா ‘கீரை சாப்பிடும்பார்.
“எல்லாம் சரி, அவர் மட்டும் காப்பி சாப்பிட்டுக் கொண்டு நோயாளிகளைக் காப்பிசாப்பிட வேண்டாமென்று சொல்லும் வழக்கம் அவரிடமும் உண்டா?”
“அதுதான் கிடையாது; சாதாரண ஜனங்களைப் போல அவரும் ‘பழையது’ சாப்பிடுவார்…”
‘அது என்ன பழையது?’
“பொழுது விடிஞ்சதும் டிபன், காப்பியெல்லாம் அப்போ ஏது ? அநேகமா எல்லாருடைய வீட்டிலும் ராத்திரி மிச்சமான சோத்திலே தண்ணியைக் கொட்டி வைச்சிருப்பாங்க. காலையிலே அந்தச் சோத்திலே உப்பைப் போட்டு ஊறுகாயைத் தொட்டுக்கிட்டுச் சாப்பிடுவாங்க. அதுதான் பழையது. ஆனா இந்தப் பழையதுக்கும் டாக்டர் ரங்காச்சாரி சாப்பிட்ட பழையதுக்கும் கொஞ்சம் வித்தியாசம் உண்டு.”
“அது என்ன வித்தியாசம்?”
“ராத்திரி வடிச்ச சோத்திலே தண்ணியைக் கொட்றதுக்குப் பதிலா அவர் பாலைக் காய்ச்சிக் கொட்டி, அந்தப் பால்லே துளி தயிரைப் புரை குத்தி வைச்சிடுவார். பொழுது விடிஞ்சதும் பார்த்தா அந்தச் சோத்தோடு தயிரும் தோய்ஞ்சிருக்கும். அதுதான் டாக்டர் ரங்காச்சாரி சாப்பிட்டுக்கிட்டிருந்த பழையது. அந்தப்
பழையதைத்தான் நானும் அன்னியிலேருந்து இன்னியவரையிலே சாப்பிட்டுக்கிட்டிருக்கேன். அது மட்டுமில்லே, முதல் நாள் ராத்திரியே தண்ணியைக் காய்ச்சி ஆற வைச்சி, மறு நாள் பொழுது விடிஞ்சதும் அவர் குளிப்பார். அதே மாதிரி நானும் குளிச்சிக்கிட்டிருக்கேன்…”
“பலன் ஏதாவது…?”
“என்னாலே டாக்டர்களுக்கு ஒரு பைசாக்கூட வருமானம் கிடையாது; அது போதாதா?”
எம்.ஆர்.ராதா சிறை அனுபவங்கள் நூலுக்காக விந்தன் நேர்காணல்
நன்றி: உதய முகம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,