காதுகளை உதடுகளாக்கிய ரசவாதி/கவியரசர் #கண்ணதாசன் நினைவாஞ்சலி.


 காதுகளை உதடுகளாக்கிய 

ரசவாதி

*

காதுகளை உதடுகளாக மாற்றிக்

காற்றை ருசிக்க வைத்த

ரசவாதி


பாமரர்க்கும் புரியும்படி

வேதாந்தம் உரைத்த

தத்துவவாதி


பலாப் பழத் தமிழைப்

பஞ்சு மிட்டாயாக

எளிமை செய்த

இலக்கியவாதி


சதுரங்க விளையாட்டின்

சதிகள் புரியாமல்

அப்பாவியாய்

ஆட்டத்தில் திகைத்து நின்ற

அரசியல்வாதி


கண்ணனைப் பாடிக் களிப்பேறிக் களிப்பேறி

ஆண் ஆண்டாளாய் ஆன

ஆன்மீகவாதி


வாதி பிரதிவாதி 

இருவருமே தானாகி 

வாழ்க்கையை விசாரணை செய்த  நியாயவாதி


போருக்கு அழைத்த

துன்பங்களை எல்லாம்

புன்னகையால்

மண்டியிடவைத்த

யதார்த்தவாதி


மிதவாதி தீவிரவாதி

பயங்கரவாதி எல்லோருக்குமே

உன் பாடல்கள் கேட்டால்

இதயம் கசியும்.


காலங்கள் தேசங்கள் தலைமுறைகள் எத்தனைக் கடந்தாலும்

உன் மேல் நாங்கள் கொண்ட 

காதல் மட்டும் 

தேயாமல் பெருகும்.


கவியரசே

இந்த நாளில் 

இறந்து போனதால் அல்ல

எந்த நாளிலும் நீ 

இறக்காமல் வாழ்கிறாயே

அது எப்படி என்றுதான்

உன் நினைவு நாளில்

உன்னை நினைத்துப் பார்க்கிறேன்.

*

கவியரசர் #கண்ணதாசன் நினைவாஞ்சலி.

***


பிருந்தா சாரதி

*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,