தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில்*
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில்*
இத்தலம் உலகம்மன் கோவில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப் பெறுகிறது.
இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை.
சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.
அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.
தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
தலவிருட்சம் : செண்பக மரம்.
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் தமிழ்நாடு தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோவில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப் பெறுகிறது.
இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும்
வடக்கில் உள்ள காசி திருத்தலத்திற்கு செல்ல முடியாதவர்கள், தெற்கில் உள்ள இந்த காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு வந்து அருளைப் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதால் தென்காசி என பெயர் பெற்றது.
தல வரலாறு :
தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் காசிக்குச் சென்று காசி விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார். மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றை கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்தார்.
இவ்வாறு காசிக்குச் சென்று தினமும் காசி விசுவநாதரை வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்தினான். இறைவன் மன்னனது கனவில் தோன்றி நான் இங்கிருந்து அரைக்காத தூரத்தில்தான் இருக்கிறேன். நான் இருக்குமிடத்தில் நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார்.
மறுநாள் எறும்பு சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் கண்டு வணங்கினான். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர்.
அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோவிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது
அந்த இடத்தில் கோவில் கட்டி, கோபுரமும் கட்டி, தென்காசி நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான். 1445-ல் பராக்கிரம பாண்டியனால் ராஜகோபுர திருப்பணி துவங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பின் பட்டத்துக்கு வந்த பராக்கிரம பாண்டியனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் 1505-ல் ராஜகோபுரத் திருப்பணி முடிவடைந்தது என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன
தலச்சிறப்பு :
இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம். நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது. சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிய பயன் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது. திருக்கோவிலிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது. திருக்கோவில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டுமன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்படுவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
சிறப்பு
இந்த இராஜ கோபுர வாசலில் பக்தர்களுக்கு ஆச்சரியப்படத் தக்க அதிசயம் காத்திருக்கிறது. பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக மேற்கிலிருந்து கிழக்காக வீசி வரவேற்கிறது.
கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது, கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று உங்கள் பின் புறமாக கோவிலுக்குள் உங்களை உள்ளே தள்ளுவது போல, கிழக்கில் இருந்து மேற்காக காற்று வீசும் அதிசயம் உணர்வீர்கள்.
எந்த தடுப்பும் இல்லாத ஒரே நேர்கோட்டில் காற்று இரண்டு எதிர் திசைகளில் வீசுவதை பக்தர்கள் அனுபவித்து மகிழலாம்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கோவில் முகவரி :
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில்,
தென்காசி - 627 811,
திருநெல்வேலி மாவட்டம்.
Comments