மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன


 மனிதனை மீறிய சந்தர்ப்பங்கள் வாழ்க்கையை எவ்வளவு தூரம் திருப்பிவிடுகின்றன என்பதற்கு நான் ஓர் உதாரணம்.’’ – இது, ‘சரித்திர நாவல்களின் ஜாம்பவான்’ சாண்டில்யன் தன்னுடைய, ‘போராட்டங்கள்’ நூலில் எழுதிய வரிகள்.

‘‘ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்’’ என்கிற தன்னம்பிக்கையைக் கொண்டிருந்தவர் சாண்டில்யன்.
சினிமா, நாடகம், சங்கீதம் மீது காதல்!
அந்த மாபெரும் எழுத்தாளர், நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூரைச் சேர்ந்த சடகோபன் அய்யங்கார் – பூங்கோதைவல்லி தம்பதியருக்கு 1910, நவம்பர் 6-ம் தேதி மகனாய்ப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே தந்தையின் இலக்கிய ருசியால் வளர்க்கப்பட்டார். காலை எட்டு மணி வரை உறங்கப் பிரியப்பட்ட சாண்டில்யனை, விடியற்காலை ஐந்து மணிக்கே எழுப்பி முகுந்தமாலை சொல்ல வைத்துவிடுவாராம் அவரது தந்தை. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம்பெற்ற அவர், அப்போதே தேச விடுதலைப் போராட்டத்திலும் பங்கெடுத்துக்கொண்டார். மூதறிஞர் ராஜாஜியின் தாக்கத்தால் அதில் ஒரு துரும்பாக அவரும் அடித்துச் செல்லப் பெற்றார். சினிமா, நாடகம், சங்கீதம் ஆகியவற்றின் மீது கல்லூரிக் காலத்திலிருந்தே காதல் கொண்டிருந்தார்.
‘‘சும்மா கதை எழுது தம்பி!’’
1932-ல் சென்னை தி.நகரில் குடியேறியது சாண்டில்யனின் குடும்பம். அங்கேதான் கல்கியும், சாமிநாத சர்மாவும் வசித்துவந்தனர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாமிநாத சர்மா நடத்திய பஜனையில் கல்கியும், சாண்டில்யனும் கலந்துகொண்டனர். இதனால் அவர்களின் நட்புப் பாலம் விரிந்தது. இருவரும் சாண்டில்யனை கதை எழுதச் சொன்னார்கள். ஆனால் மறுத்துவிட்டார். ‘திராவிடன்’ பத்திரிகை ஆசிரியர் சுப்பிரமணியம், ‘‘சும்மா கதை எழுது தம்பி’’ என்று கட்டாயப்படுத்த, அதன் காரணமாகவே, அவருடைய ‘சாந்த சீலன்’ என்னும் முதல் சிறுகதை உதயமானது. அது, காங்கிரஸை ஆதரித்த கதை… அவருடைய தந்தைக்கும், அவருக்குமான கதை. ‘‘காங்கிரஸ் கதையை நமது பேப்பரில் எப்படிப் போடலாம்’’ என்று ‘திராவிடன்’ நிர்வாகிகள் கொந்தளித்தனர். இதனால் சுப்பிரமணியம் சிக்கலுக்குள்ளானார். ‘‘கதைதான் நன்றாக எழுதுகிறாயே… இன்னும் எழுதேன்’’ என்று கல்கியும், சாமிநாத சர்மாவும் சொல்ல… ‘கண்ணம்மாவின் காதல்’, அதிர்ஷ்டம்’ ஆகிய கதைகள் ‘ஆனந்த விகடனி’ல் பிரசுரமாயின. அதன்பிறகு ‘சுதேசமித்திரன்’ ஆசிரியர் ஸ்ரீநிவாஸன், அவரைப் பத்திரிகையாளராக்கினார். உயர் நீதிமன்ற வழக்குச் சம்பந்தமான செய்திகள் ஆங்கிலப் பத்திரிகைகளில் மட்டுமே வந்துகொண்டிருந்தன. அதை மாற்றி, தமிழ்ப் பத்திரிகைகளில் இடம்பெற புத்துயிர் ஊட்டினார். அந்தக் காலத்தில் தள்ளாட்டத்தில் இருந்த தமிழ்மொழியைத் தலைநிமிரச் செய்தார்.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

ஆரஞ்சுப் பழத்தின் பயன்கள்:

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி