அவருக்கு மாற்று என்று யாரையும் சொல்ல முடியாது.

 


தமிழ்ச்சூழலில் மக்கள் கவிஞன் என்று அறியப்பட்ட பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் மறைந்து 50 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்று வரை அவருக்கு மாற்று என்று யாரையும் சொல்ல முடியாது. அப்பேர்பட்ட மகாகவிஞரின் பிறந்த ஊரான செங்கப்பட்டுத்தான் காடு கிராமத்தில் அவருடைய மனைவி கௌரவாம்பாளிடம் 50 ஆண்டுகளை கடந்த அவர்குறித்த நினைவுகளை ஒரு உரையாடலாய் தொடங்கினோம் மலர்ந்தது ஒரு நேர்காணல் (2011ல் செம்மலர் இதழில் வந்தது)


உரையாடலை நாமாக கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளோம்.

கேள்வி: கவிஞருடன் வாழ்ந்த நாட்களைப்பற்றி …?

உரையாடல் : அது மிகவும் இனிமையான நாட்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தோம். விட்டுக்கொடுத்து வாழ்ந்ததால் எங்களுக்குள் பிரச்சனை பெரும்பாலும் வராது. நான் “ஏன் லேட்டு எங்க போயீட்டு வாரீங்கன்னு ” வம்பு இழுக்க மாட்டேன். ஒரு நாள் அவராகவே கேட்டார். ஏம்மா! நான் பாட்டுக்கும் வரேன், நான் பாட்டுக்கும் போரேன். எங்க போணீங்க? எப்ப வருவீங்கன்னு கேட்க மாட்டியா என்றார். ஏன்! நீங்க எங்கபோனாதான் என்ன? வீட்டுக்கு சரியா வந்துடரீங்கள்ள. அப்புறம் நான் ஏன் கேட்கணும் என்றுச் சொல்லிவிட்டு சிரிச்சேன். அதற்கு அவர் நீ ஒரு பிறவி என்று சொல்லிவிட்டு சிரிச்சார். எங்க போனீங்க என்று கேட்க்கூடாது என்று சொல்லும் ஆண்களுக்கு மத்தியில் அவர் எங்க போனீங்கள் என்று கேட்க சொன்னார். அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகுதான் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் வந்ததால், எப்போதும் பரபரப்பாகவே இருப்பார்.

அதிகாலையிலேயே கார்வந்து விடும், கிளம்பினா மதியம் சாப்பிடத்தான் வருவார். சில நாட்களில் அதுவும் கிடையாது. அதனால் நாங்கள் சேர்ந்து இருக்கும் குறைவான பொழுதுகள் என்பது எப்போதுமேஎங்களுக்கு சுகமாகவே இருந்தது.

கேள்வி: பட்டுக்கோட்டையார் எப்போது பெரிய ஆளுமைஎன்பதை உணர்ந்தீர்கள்

உரையாடல்: அவர் பாட்டு எழுதுவார்ன்னு எனுக்கு தெரியும், இருந்தாலும் நான் அவருடன் சென்னைக்குபோன பிறகுதான் பார்த்தேன் தினமும் அவரை அழைக்க பல படநிறுவனத்தின் வாகனங்கள் தினந்தோறும் காத்துக்கிடக்கும். அந்தக்காலம் தான் அவர் உச்சத்திற்கு சென்று கொண்டிருந்த காலம். எந்த நிறுவனத்தின் வாகனம் முதலில் வருகிறதோ அவர்களுக்கே வாய்ப்பு. மற்ற நிறுவனங்களுக்கு அன்று ஏமாற்றம்தான். சில நிறுவனங்கள் அவரை யாருக்கும் தெரியாமல் ஊரைவிட்டே வெகுதூரம் அழைத்துச் சென்று அங்கே பாட்டெழுதச் சொல்வார்கள். அங்கே போனாலும் இராயப்பேட்டை பொன்னுசாமி கடை சோறு கேட்டு நிறுவனத்திடம் குறும்பும் செய்வார். இப்படித்தான் ஒரு நிறுவனம் அவரை மகாபலிபுரத்திற்கே அழைத்துச்சென்று விட்டது. அன்று இரவு அவர் வரவே இல்லை.

இப்போதுபோல் அப்போ போன் எல்லாம் கிடையாது. நாங்கள் இன்னும் காணவில்லையே என்று பதரிக்கொண்டு இருந்தோம். அடுத்தநாள் காலை 5 மணிக்கு ஒருவர் வந்து கதவைத்தட்டினார். அவர் அந்தப்பட நிறுவனத்தின் டிரைவர் கவிஞர் மகாபலிபுரத்தில் இருப்பதாகவும், எங்களையும் அங்கே அழைத்து வரச்சொன்னதாகவும் சொல்லி அழைத்துச்சென்றார். நாங்கள் செல்வதற்குள் கவிஞர் பாடல்களை எழுதிமுடித்துவிட்டார்.

கேள்வி: சென்னையில் புதிதாக குடியேறியபோது உங்கள் அனுபவம்

உரையாடல்: திருமணத்திற்கு பிறகுதான் நான் முதன்முதலில் சென்னைக்கு சென்றேன். போன புதிதில் நான் என் வீட்டை நினைத்து என் பெற்றோரை நினைத்து தூக்கத்தில் புலம்புவேன் என்று அவர் சொல்வார். அதுமட்டுமல்லாமல் அப்போது புதிய சூழலில் எனக்கு காய்ச்சலே வந்துவிட்டது. அவர் என்னவோ ஏதோ என்று என்னை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். மருத்துவர் என்னை பரிசோதித்து விட்டு, இது வீட்டு ஏக்கம்தான் வேறு ஒன்றுமில்லை என்று சொல்லி அனுப்பி விட்டார். உடனே அவர் என்னை எங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டார். அதன் பிறகு தீபாவளிக்கு வந்தவர் என்னை மீண்டும் அழைத்துச் சென்றார்.

கேள்வி: வீட்டுக்குள் இவர் பாடுவதுண்டா? உங்கள் பாட்டை கேட்பதுண்டா?

உரையாடல்: எப்போது வீட்டுக்குள் நுழைந்தாலும் பாட்டோடுதான் வருவார். ஏதாவது ஒரு பாட்டை இரண்டடி பாடிக்கொண்டேதான் இருப்பார். அதுதான் அவர் பாடு. என் பாட்டை பொருத்த வரையில்,கவிஞருடைய அண்ணன் மனைவி கற்பமாக இருந்தபோது நான் அக்காவுக்கு வலைகாப்பு, அத்தானுக்கு இடுப்பு வலின்னு கிண்டலாக சொன்னதை அப்படியே கல்யாண பரிசு படத்தில் பாட்டாக எழுதிவிட்டார். இதுதான் என் பாட்டு.

கேள்வி: திருமணத்திற்கு பிறகு சேர்ந்து வெளியே சென்றது உண்டா?

உரையாடல்: இயக்குனர் சுப்ரமணியன் வீட்டிற்கு சென்றிருந்தோம். அவர் திருமணத்திற்கு வரவில்லை. அதனால் அவரது அழைப்பின் பேரில் அவர் வீட்டிற்கு சென்றோம். அவருடைய பெண்தான் பத்மா சுப்ரமணியம். அவங்க அப்போ நாட்டியம் கற்றுக்கொண்டு இருந்தாங்க. அதே போல் ஒரு சினிமாவுக்கும் போனோம். அது ஒரு வேடிக்கையான கதை. பொதுவாக அவர் வேலையாக இருப்பதால் சினிமாவுக்குக்கூட அவர் அண்ணனைத்தான் அழைத்துப்போகச் சொல்வார். ஒரு நாள் அவரே எங்களை சினிமாவிற்கு அழைத்துச் சென்றார். தியேட்டரில் அல்ல, ஜெமினி ஸ்டுடியோவில். அதுவும் எங்களுக்கான பிரத்தியேக காட்சி. உள்ளே சென்று பார்த்தால் அது ஒளவையார் படம். நான் ஏற்கனவே பட்டுக்கோட்டை நீலா தியேட்டரில் அந்தப்படத்தை பார்த்துவிட்டேன். இருந்தாலும் அவருக்காக ஒன்றும் சொல்லாமல் பார்த்தேன். அப்போது எங்கள் மகன் மூன்று மாதக்குழந்தை. படத்தில் குழந்தையை ஆற்றில் விடும் காட்சி வந்ததும் இவன் அழத்தொடங்கிவிட்டான். பிறகு அவனை சமாதானப்படுத்த நான் தூக்கிக் கொண்டு வெளியே சென்றுவிட்டேன். அது எங்களுக்கான பிரத்தியோக காட்சி என்பதால் பாவம் அவர் மட்டும் தனியே அமர்ந்து ஒளவையார் படத்தைப் பார்த்தார்.

கேள்வி: குடும்பத்தலைவராக கவிஞரின் பணி குறித்து?

உரையாடல்: அவரின் பணி சூழல் காரணமாகவும், அவர் அண்ணன் மீது கொண்ட பற்றின் காரணமாகவும், எல்லா குடும்பப்பொறுப்புகளையும் அண்ணனிடமே விட்டுவிடுவார். அண்ணன் சொல்லுக்கு மறு சொல்லே கிடையாது. அதேபோல் குடும்பத்திற்குள் விட்டுக்கொடுத்து செல்வார். அவர் பெரும் கவிஞர், தன் மகனுக்கு என்ன பெயர் வைக்கவேண்டும் என்று பல கனவு இருந்திருக்கும். ஆனால் எங்கள் மகன் பிறந்த பொழுது என்னுடைய மாமனார் அவரின் தந்தை தன் பேரனுக்கு குமரவேல் என்று பெயர் வைத்து விட்டார். கவிஞர் வந்தவுடன் தன் அப்பாவிடம் “என்னப்பா?“ என்று கேட்டதோடு சரி. அதற்குப்பிறகு அப்பா வைத்த பெயரை மாற்றுவானேன் என்று, தான் என்ன பெயர் வைக்க வேண்டும் என்ற தன் ஆசையையும் கூட வெளியே சொல்லாமல் இருந்துவிட்டார்.

கேள்வி: திருமணத்திற்கு பிறகு அவர் சங்கம் கட்சின்னு சுத்தராரேன்னு எண்ணி வருத்தப்பட்டது உண்டா?

உரையாடல்: நிச்சயமாக கிடையாது. இன்று வரை எனக்கு அந்த வருத்தம் துளியும் இல்லை. இன்று வரை நான் காசு பணத்துக்கு ஆசைபட்டதே கிடையாது. மனுசனுக்கு புகழ்தானே முக்கியம்.

கேள்வி: கவிஞர் உயிருடன் இருக்கையில் அவரை அதிகம் வந்து சந்தித்தவர்கள் யார் யார்?

உரையாடல்: எனக்கு நினைவு தெரிந்தவரை நான் அறிந்தவர்களாக ஜீவாவும், கே. முத்தையாவும்தான் அடிக்கடி வந்து சந்திப்பார்கள். நீண்ட நேரம் அரசியல் குறித்து விவாதித்துக் கொண்டு இருப்பார்கள்.

கேள்வி: அவர்இறந்த பிறகு யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்?

உரையாடல்: திரைத்துறையில் தொடர்புகள் குறைந்து விட்டன. ஏனென்றால் நாங்கள் சென்னையை காலிசெய்து வந்துவிட்டோம். ஜீவாவும், முத்தையாவும் தான் பிறகு வெகுநாட்கள் வந்து கொண்டிருந்தார்கள். 80 களில் கவிஞருடைய பொன்விழா கூட எங்கள் வீட்டருகே தோழர். கே.எம். தலைமையில் நடைபெற்றது. அதன் பின்பு பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. இப்போதும் நடந்து கொண்டு இருக்கின்றது. அதுமட்டுமல்ல சங்கரையாதான் எங்களை அப்போதைய முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் அழைத்துச் சென்றார். அதன் பின்னர்தான் நானும் பாவேந்தரின் மனைவியும் தமிழக அரசால் மதுரை விழாவில் கௌரவிக்கப்பட்டோம். இப்போதும் சங்கரையா வந்தால் விசாரிப்பார்.

கேள்வி: நீங்கள் வாழ்ந்த சென்னை இல்லத்திற்கு மீண்டும் சென்றீர்களா?

உரையாடல்: இராயப்பேட்டை சீனிவாசபெருமாள் தெருவில் உள்ள நாங்கள் வாழ்ந்த வீட்டிற்கு எதிர் வீட்டுக்காரர் மறைந்தபோது மீண்டும் அங்கு சென்றேன். அந்த வேப்பமரம் அருகே இறங்கிய உடன் அந்த வீடுதான் என்பதை உணர்ந்தேன். நான் இறங்கியதற்கு பின்புறம்தான் எங்கள் வீடு இருந்தது. நான் திரும்பியே பார்க்கவில்லை. பார்க்க விரும்பவில்லை.

கேள்வி: கவிஞருக்கு நினைவு இல்லம் இல்லாதது குறித்து

உரையாடல்: அது குறித்து நான் ஏதும் கூறமுடியாது. அது இந்த அரசும் மக்களும் உணர்ந்து செய்ய வேண்டிய கடமை.

கேள்வி: கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமுஎகச தொடர்ந்து விழா எடுப்பது குறித்து.

உரையாடல் : அது எங்களுக்கு பெருமைதான். கவிஞர் இல்லையே என்கின்ற வருத்தத்தை இதுபோன்ற நிகழ்ச்சிகள் தான் போக்குவதாக உள்ளது. ரொம்பவே சந்தோசம் தான். நான் மனதார பாராட்டுவதை விட வேறு ஏதும் என்னால் சொல்ல இயலாது.

இணையத்தில் இருந்து எடுத்தது 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,