சரஸ்வதி வழிபட்ட திருமயிலைக் காரணீச்சரம்*

 


சரஸ்வதி வழிபட்ட திருமயிலைக் காரணீச்சரம்*


நன்றி குங்குமம் ஆன்மீகம்


சரஸ்வதி தேவியை சகல கலாவல்லி என்றும், சகலகலா மயில் என்றும் கொண்டாடுகிறோம். மயில் தனது தோகையில் கண் போன்ற எண்ணற்ற புள்ளிகளைக் கொண்டுள்ளது. அதையொட்டி அது ஆயிரங்கண்ணோன் என்றும், அழைக்கப்படுகிறது. உலகினைத் தன் அறிவுக் கண்ணால் நோக்கி அனுபவங்களில் இருந்து பலவிதமான செய்திகளை அறிந்து கொள்வதே - ஞானமாகும். அதை உணர்த்தவே சரஸ்வதி தேவி மயிலாகக் காட்சி தருகிறாள். அந்த மயில் வடிவுடன் அவள், பல தலங்களில் பூஜை செய்து மகிழ்ந்துள்ளாள். அவற்றில் ஒன்றாகச் சிறப்புடன் திகழ்வது சென்னை மயிலாப்பூர் காரணீச்சரமாகும். அந்த தலத்தை இந்தச் சரஸ்வதி பூஜை நன்னாளில் தரிசித்து மகிழலாம்.


மயில் நீல நிறத்துடன் ஆயிரம் கண்களைக் கொண்டிருப்பதால், இந்திர நீலப் பறவை என்றும் அழைக்கப்படுகிறது. இந்திரனின் தேவியான இந்திராணியும், மயில்வடிவில் இங்கு வழிபட்டுப் பேறு பெற்று உள்ளாள். அதனால், இங்குச் சிவபெருமான் இந்திரேஸ்சுவரராகவும், சசிவல்லீஸ்வரராகவும் பெயர் தாங்கி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். கல்விக் கடவுளான சரஸ்வதியும், வித்தையை அருளும் கிரகமான புதனின் அதிதேவதையான இந்திரனும், இந்திராணியும் வழிபட்டு அருள் பெற்ற தலமாகத் திருமயிலைக் காரணீச்சரம் விளங்கி வருகிறது. அதன் சிறப்புக்களைத் தொடர்ந்து காணலாம்.


ஒரு சமயம் கயிலை மலைச் சாரலில் சித்ரவனம் என்னுமிடத்தில் உமையம்பிகையும், சிவபெருமானும் வீற்றிருந்தனர். அப்போது, உமாதேவியார் சிவபெருமானிடம் எனக்கு வேதாகமங்களின் நுண்பொருளை விளக்கிக் கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டாள். அவரும் உடன்பட்டுச் சிறந்த கருத்துக்களை உயர்ந்த முறையில் உபதேசித்துக் கொண்டிருந்தார். தொடக்கத்தில் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு, நேரம் செல்லச் செல்ல மனம் அதில் ஒன்றுபடவில்லை. அங்கு நடனமாடிக் கொண்டிருந்த மயில்கள் மேல் கவனம் சென்றது. அதையே ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அதையறிந்த சிவபெருமான் கோபித்தார். அவளை மயிலாகப் பிறந்து பூமியில் இருக்கும்படி கூறினார். அதைக்கேட்ட அவள் அஞ்சினாள். தன்னை மன்னிக்கும்படி வேண்டினாள். அவர், ‘‘அம்பிகையே நீ பூவுலகில் புன்னை வனத்தில் நம்மைப் பூஜை செய்து மகிழ்ந்திருப்பாய் உரிய வேளையில் உன்னை வந்தடைவேன் என்றார்.அதன்படியே அவள் மயில் வடிவு கொண்டு வங்கக் கடலோரம் புன்னை மலர்ச்சோலைக்கு வந்து ஒப்பிலதாய் முளைத்த லிங்கத்தைக் கண்டு வணங்கி மகிழ்ந்து இருந்தாள்.


அவளுடன் லட்சுமி, சரஸ்வதி, இந்திராணி முதலிய தெய்வப் பெண்களும் மயில் வடிவம் கொண்டு அவளுக்குத் துணையாக இருந்தனர். அவர்களும் அருகில் இருந்த சிவலிங்கங்களை விருப்பத்துடன் பூஜை செய்து வந்தனர். அவர்கள் மயில் வடிவில் வழிபட்டதால், இத்தலம் மயிலாப்பூர் என வழங்குகிறது.பார்வதி மயில் வடிவில் வழிபட்டுப் பேறு பெற்ற தலம் திருமயிலை கபாலீச்சரமாகும். சரஸ்வதியும், இந்திராணியும் இதே தலத்தில் வழிபட்ட லிங்கத்திற்கு அமைந்திருக்கும் ஆலயம் காரணீசுவரம் என்று அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் சரஸ்வதி அருள்பெற்ற வரலாற்றைக் காணலாம்.


சரஸ்வதி செய்த சிவவழிபாடு


பார்வதி தேவிக்குத் துணையாக வந்த சரஸ்வதி தேவி, வெண்மை படர்ந்த பொன்னிற மயிலாக விளங்கினாள். அவள் புன்னை மரத்தின் நடுவே இருந்த நந்தியாவர்த்தன மரத்தின் கீழ் சிவலிங்கத்தைக் கண்டாள். அந்த லிங்கம் ஆதியில் அகத்திய முனிவராலும், அஷ்ட உருத்திரர்களில் ஒருவரான மகாதேவன் என்பவராலும் வழிபடப்பட்ட சிறப்புகளைக் கொண்டதாகும். சரஸ்வதி அந்த லிங்கத்தைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தாள்.


 பூக்களைப் பறித்து வந்து பூஜித்தாள். அதன் முன்னே நாட்டிய அஞ்சலியாகத் தோகையை விரித்து ஆடினாள். இனிய கீதங்களைப் பாடினாள். சிறப்புடன் அதனைப் போற்றி வணங்கினாள். அவ்வேளையில் பொன் மயிலாக வந்த இந்திராணியும், அவளுடன் சேர்ந்து கொண்டாள். அவளும் அன்புடன் அந்த லிங்கத்தைப் பூஜை செய்தாள். அவர்களைத் தொடர்ந்து அரம்பையர்களும் மயிலாகி அங்கே வந்து அவளுடன் தங்கியிருந்தனர்.


அவர்கள் அதிகாலையில் எழுந்து உருத்திரர்களால் அமைக்கப்பட்டிருந்த குளங்களில் மூழ்கினர். கடற்கரையில் காலைக் கதிரவனைப் போற்றித் துதித்து செவ்வான் உருவில் திகழும் சந்திரசேகர ஜடாதரனைத் தியானித்தனர். பின்னர், புன்னைவனத்தின் நடுவே அன்னை உமாதேவியாருடன் சேர்ந்து சிவலிங்க வழிபாடு செய்து வந்தனர். அவர்களுடைய உருவம்தான் மயிலாக இருந்ததைத் தவிர உள்ளமும் அன்பும் சிவமாகவே இருந்தன.


நாட்கள், கடந்தன. அவர்களைத் தேடி பிரம்மனும், இந்திரனும் பூமிக்கு வந்தனர். மயிலாகி நிற்கும் இந்திராணியையும், கலைமகளையும் கண்டனர். அவர்களுடன் சேர்ந்து தாமும் சிவ பூஜையைச் செய்தனர். இந்திரன் அவ்விடத்தில் தமது படையான மேகங்களைக் குடைபோல நிறுத்தினான். அவர்களுடைய பூஜையால் மகிழ்ந்த இறைவன், அந்த லிங்கத்திலிருந்து வெளிப்பட்டார். கலைமகளையும், இந்திராணியையும் நோக்கி அம்பிகையின் பொருட்டு நீங்கள் மயில் வடிவில் வந்து தவம் செய்ததை கண்டு மகிழ்ந்தோம்.


அம்பிகைக்கு யாதொரு துணையும் தேவையில்லை என்றாலும், அவளுக்காக உவந்து நீங்கள் உம்மை வருத்திக் கொண்டு சிவபூஜை செய்தது நிறைவாக இருந்தது. உமக்கு வேண்டிய வரங்களை உவந்து அளிக்கிறேன் கேளுங்கள் என்றார். சரஸ்வதி, ‘‘ஐயனே! உம்முடைய தரிசனமும் அருளும் கிடைத்தபிறகு எமக்கென வேண்டுவது ஏது? என்றாலும் உலக நன்மையின் பொருட்டு சில வரங்களை யாசிக்கிறேன் என்றாள். சிவபெருமாள் புன்முறுவல் பூத்தார்.


உடனே சரஸ்வதி தேவி, ‘‘பெருமானே தாங்கள் இந்த லிங்கத்தில் எப்போதும் நிலை பெற்றிருக்க வேண்டும். இங்கு வழிபடுவர்களுக்குக் கல்வியில் தேர்ச்சியும், அறிவில் விசாலமும் புத்தியில் கூர்மையும் உண்டாக வேண்டும். மறதி தொலைந்து புத்தி பிரகாசிக்க வேண்டும் என்றாள். உலக நன்மைக்காக நீ கேட்ட வரங்களை இப்போதே தந்தேன். இங்கு எம்மை அன்புடன் பூஜிக்கும் எவரும் அறிவில் மேன்மை அடைவர்.


கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறுவர். உமது அருள் அவர்களுக்குப் பூரணமாகக் கிடைக்கும் என்றாள். அவ்வேளையில், அவளுடைய மயில் வடிவம் நீங்கியது. வெள்ளைக் கலையுடுத்து (வெண்ணிற ஆடை) வெண்முத்து மாலைகள் அணிந்த தெய்வீகப் பெண்ணாகக் காட்சியளித்தாள்.


பிரம்மன் கலைமகளுடன் அவரைப் பணிந்தான். ‘‘ஐயனே! மிகுந்த கல்வியால் அகங்காரம் உண்டாகிறது. அகங்காரத்தால் அறிஞன் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான். அதனால் அகங்காரம் அற்றவனாகவும், அறிவில் தேர்ச்சி பெற்றவனாகவும் இருக்கும் வரத்தை அளிக்க வேண்டும் என்றார். சசிசேகரனான சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார். மயில் வடிவுடன் இருந்த இந்திராணி, அவரைப் பணிந்தாள். சிவபெருமான் அவளிடம், பொன்னுலக போகங்களை விட்டு உமையின் பொருட்டு இங்கு வந்து அரிய தவத்தைச் செய்தாய், சசிதேவியே விரும்பியதைக் கேள் என்றார்.


இந்திராணியின் மயில் வடிவம் நீங்கியது. சிவந்த அழகிய மேனியுடன் பொன்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெய்வமங்கை வடிவம் கொண்டாள். இந்திரனுடன் இணைந்து சிவபெருமானைப் பணிந்தாள். சர்வேஸ்வரா! ஐஸ்வர்யங்களால் நிறையப் பெற்றவரே! உலகில் செல்வங்களால் நிறையப் பெற்று மாடமாளிகை, கூடகோபுரங்களையும் நவநிதிகளையும் நிறைய பெற்றிருந்தாலும், அவற்றை முழு மனதுடன் அனுபவித்து மகிழ்ச்சி பெற வேண்டியதற்குத் தேவையான மனம் வேண்டுமே. அந்த மன அமைதியை எல்லோருக்கும் அருளுக என்றாள்.


சிவபெருமான் அவளை நோக்கி, இந்திராணீ! அச்சமும் அதிக ஆசையுமே மனதை அலைகழிக்கின்றன. அவற்றை இல்லாமல் செய்து விட்டால் எங்கும் எதிலும் சுகம் உண்டாகும். உலக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ நீ கேட்ட வரத்தை இக்கணமே அளித்தேன்.


இந்த லிங்கத்தை வழிபடும் எல்லோரும் மன நிம்மதியையும், மகிழ்ச்சியையும் அடைவார்கள். அவர்களைக் குழப்பம் அணுகாது. பாற்கடலில் உதித்த பாவையே! நீ வேண்டியபடி மனம் மகிழ்ச்சி கொள்ளும் வரத்தைத் தந்து விட்டேன் என்றார்.இந்திரன் சிவபெருமானை வணங்கிய பின் அவருடைய இடப்பாகத்தில் விளங்கும் பராசக்தியை நோக்கி, உன்னைப் பணிகிறேன். நினைத்தவற்றை நினைத்த வண்ணம் அருளும் தேவியே உமது பாத கமலத்தில் சரணடைந்தபிறகு எமக்கு வேண்டுவது எது. நீயே வரமாகவும், இருக்கிறாய். நீ எதை விரும்புகிறாயோ அதையே எனக்கு அளித்தருள்க என்றான்.


சிவபெருமான் அவனை நோக்கி புரந்தரனே, உமது பக்தியால் மகிழ்ந்தோம் மேகங்களைக் கொண்டு எமக்குக் குடை பிடித்தாய். இயல்பாகவே மயில்கள் மேகத்தைக் கண்டு ஆடும். இவர்கள் சிவபக்தியால் பெற்றிருந்த மகிழ்ச்சியை அந்த மேகங்கள் மேலும்மேலும் பெருக்கின. முன்னாளில் மேகங்கள் நமது ஆணைக்கு அஞ்சி சிறைப்பட்டன. இப்போது எம்மை அவை மகிழ்வித்தன. அவற்றின் பெயரால் இத்தலம் காரணி என வழங்கும் (கார்-மழை மழையைக் குறித்து அதை அளிக்கும் மேகங்களுக்குப் பெயராயிற்று) என்றார்.


அவ்வேளையில் இந்திரன் பொன் மயில் வடிவம் கொண்டு ஆடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தான். சிவசக்தியர்களும் அதைக் கண்டு மகிழ்ந்தனர்.அங்கே வந்த மற்ற தேவர்கள் அம்பிகையைப் பலவாறு போற்றினர். அவள் அனைவரையும் நோக்கி, உமது பக்தியால் மகிழ்ந்தோம். முன்பு மயில் ஆட்டத்தை விரும்பிக் கண்டதாலேயே நான் இப்புவியில் வந்து பிறக்க நேர்ந்தது. இப்பேதைய மயில் நடனம் எம்மை இறைவனுடன் சேர்த்து வைக்கும் நடனமாயிற்று என்றாள்.


பிறகு, இந்திரனே! நீ கேட்காமலேயே ஒரு வரத்தை அளிக்கிறேன். பொன் மயிலாகி நீ நடித்தது என்றும், நினைவில் நிற்க, நான் சுவர்ண கௌரி பெயர் பூண்டு அருள்பாலிப்போம். பொன்னுலக வேந்தனான உன் பெயரால் நான் பொற்கொடியாக இருப்பேன் எம்மைக் காமவல்லி என்று போற்றினாய், இனி நாம் சுவர்ணவல்லி எனும் பெயரில் இங்கே விளங்குவோம் என்றாள். இந்திரன் மிகவும் மகிழ்ந்தான்.


இப்படி தன்னை வழிபட்ட பிரம்மன், சரஸ்வதி, இந்திரன், இந்திராணி ஆகியோருக்குச் சிவபெருமானும் உமாதேவியும் வேண்டியவாறு விரும்பிய வரங்களைத் தந்தபின், அந்த லிங்கத்தில் கலந்து மறைந்தனர். அன்று முதல் கல்வியில் மேன்மை பெற இத்தலத்தை வணங்கிப் பயன் பெறுகின்றனர். பலவாறு பணிந்தபின் விடைபெற்றுக் கொண்டு எல்லோரும் தத்தம் இடங்களுக்குத் திரும்பினர். காலப்போக்கில் புன்னை வனமாக இருந்த திருமயிலைப் பெரிய நகரமாகிப் பொலிவுடன் விளங்கி வருகிறது.


அதனுள் காரணீசுவரர் ஆலயம் சிறப்புடன் திகழ்கிறது. அதில் அன்பர்களுக்கு வேண்டிய வரமருளும் தேவியான பொற்கொடியுடன் (சுவர்ணவல்லி) காரணீசுவரர் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அருள்மிகு பொற்கொடி அம்பிகை, உடனாய காரணீசுவரப் பெருமான் ஆலயம் சரஸ்வதி மயிலாக இருந்து பூஜித்த தலம். இங்குப் பிள்ளைகளுக்குக் கல்வி தொடக்கம் செய்தால் அவர்கள் எதிர்காலத்தில் நன்கு படிப்பார்கள். புதன் திசையால் வருந்துபவர்களுக்குச் சிறந்த பரிகாரம் அருளும் தலம் இது.


புதன்கிழமைகள், நவமி திதிகளில் இங்கு வழிபாடு செய்தால் மிகுந்த கல்வித் தடைகள், மனக்குழப்பம் முதலியவை நீங்கும். நாட்டியம், பாட்டு முதலிய கலைகளில் தேர்ச்சி பெற இங்கு முறையான வழிபாடு செய்தால் நிச்சயம் பலன் கிட்டும்.சென்னை - மயிலாப்பூரில் பஜார் ரோடில் காரணீசுவரர் கோயில் உள்ளது. மயிலாப்பூர் வடக்கு மாடவீதி வழியாக, செங்கழுநீர்ப் பிள்ளையார் கோயில் தெரு வழியாக முண்டகக் கண்ணி அம்மனை வணங்கி, அதையடுத்து, மாதவப் பெருமாளை வணங்கி, சிறிது தூரம் நடந்தால் இந்த கோயிலை அடையலாம், சென்னை வானொலி நிலையத்தை ஒட்டிச் செல்லும் சாலையில் வந்தாலும் எளிதில் கோயிலை அடையலாம்.


தொகுப்பு: ஆட்சிலிங்கம்...

*

 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,