பிலிப்பைன்ஸ் நாட்டை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது.

 


பிலிப்பைன்ஸ் நாட்டை பயங்கர நிலநடுக்கம் உலுக்கியது. இதில் பலர் படுகாயம் அடைந்தன
ர்.

மணிலா,


தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்ஸ், நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் புவிதட்டுகள் அடிக்கடி நகருகிற இடத்தில் அமைந்துள்ளது. இதனால் அங்கு எரிமலை வெடிப்பு மற்றும் நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகின்றன. இதன் காரணமாக அந்த நாடு உலகின் பேரழிவு நாடுகளில் ஒன்றாக உள்ளது.


இந்த நிலையில் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு லுசோன் பிராந்தியத்தில் நேற்று முன்தினம் இரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள அப்ரா மாகாணத்தின் லகாயன் நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது.


வீதிகளில் தஞ்சம்


இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 11 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக பிலிப்பைன்ஸ் தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த பயங்கர நிலநடுக்கம் வடக்கு லுசோன் பிராந்தியத்தியம் முழுவதிலும் கடுமையாக உணரப்பட்டது.


சில வினாடிகளுக்கு நீடித்த நிலநடுக்கத்தின்போது வீடுகள், கடைகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.


ஆஸ்பத்திரியின் மேற்கூரை...


பிலிப்பைன்சின் அதிபர் பெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் சொந்த மாகாணமான லோகோஸ் நோர்டேவின் தலைநகர் லாவோக்கில் உள்ள சர்வதேச விமான நிலையம் நிலநடுக்கத்தில் சேதம் அடைந்தது. அதை தொடர்ந்து அந்த விமான நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது.


அதே போல் லோகோஸ் நோர்டே மாகாணத்தின் படாக் நகரில் உள்ள மிகப்பெரிய ஆஸ்பத்திரியில் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியில் இருந்த நோயாளிகள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர்.


30 பேர் படுகாயம்


அப்ரா மாகாணத்தில் உள்ள பாஸ் நகரில் நூற்றாண்டு பழமையான தேவாலயம் இடிந்து சேதமடைந்தது. ககாயன் மாகாணத்தில் நிலநடுக்கத்தால் மின்கம்பிகள் கடும் சேதம் அடைந்ததால் அங்குள்ள பல நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டன.


இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதில் இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம் அடைந்தனர். இதுவரை சுமார் 30 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


முழு வீச்சில் மீட்பு பணி


இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என நம்பப்படும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனினும் இந்த நிலநடுக்கத்தால் அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த ஜூலை மாதம் பிலிப்பைன்சின் வடக்கு பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.0 புள்ளி கள் அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதும், இதில் 5 பேர் பலியானதோடு மிகப்பெரிய அளவில் பொருள் சேதமும் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,