எங்க பாட்டி



 எங்க  பாட்டி




 பார்வதி இவர் கிழக்கு தாம்பரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.இவரது ஒரே மகன் சந்துருவை B. E.,படிப்பு முடித்துவிட்டு மின்சாரத் துறையில் பொறியாளராக, A. E. (Assistant Engineer ) பணிபுரிந்து வருகிறார்.


 Flash back பார்வதியின் கணவரான ராஜன், அக்காலத்தில் மின்சாரத் துறையில் போர்மேனாக பணிபுரிந்தவர்.



 பார்வதி தனது அப்பா அம்மாவுக்கு ஒரே மகள்.  ராஜனும் பார்வதியும்  காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.  இவர்களின் இரண்டு பேர் வீட்டிலும் எதிர்ப்பு,அதையும் மீறி நல்ல தம்பதிகளாய் வாழ்ந்து வருகின்றனர்


 பலகாலம் இவர்களுக்கு மகப்பேறு இல்லை. பார்வதி இறை பக்தி நிறைந்தவள்.  அவளின் வேண்டுதல்  வீண் போகவில்லை  பலித்தது.17 ஆண்டுகளுக்குப் பிறகு மகன் பிறந்தான்.  சந்துரு என்று பெயர் வைத்தார்கள். அப்போது  பார்வதிக்கு 40 வயது.


 நீண்ட காலம் குழந்தை இல்லாத காரணத்தால், பிறந்த பிள்ளை மீது பார்வதியும், ராஜனும் அதிகமாய் அன்பும் பாசமும் வைத்தனர்.


 பெற்றவர்கள் அப்போதும் தன்னுடைய பேரக் குழந்தையைப் பார்க்க வரவில்லை. இதனால் பார்வதி மிகவும் வருத்தப்பட்டாள். சில நேரம் தன் கணவனிடம் பேசும் போது வருத்தப்படுவாள்.


 இனிமேல் எதற்கும் எப்போதும் வருத்தப்படக்கூடாது, நமக்குத்தான் பையன் இருக்கானே, உனக்கு நீ எனக்கு நான் நமக்கு நம் பையன். அந்த ஒரு திருப்தியில் வாழ 

வேண்டியது தான்.


 தனது கணவனின் வார்த்தை வேதவாக்காய் எடுத்துக்கொண்டு புன்னகை பூத்தாள் பார்வதி.


அப்போது மழைக்காலம், மின்சாரத் துறையில் அப்போதைக்கப்போது திடீரென்று வேலை வரும். தனது குழந்தைக்கு அன்பு முத்தமிட்டு  ராஜன் வேலைக்குச் சென்றான் .அப்போது சந்துருவுக்கு இரண்டு வயது,


 மின்சாரத் துறையில் Foreman ஆக வேலை பார்த்த ராஜன்,அந்த மழைக் காலத்தில் கம்பத்தில் மின் கசிவு ஏற்பட்டதை சரி செய்யும் பொழுது,  தற்செயலாக Electric shock அடிக்கப்பட்டு, தூக்கி வீசப்பட்டார். பின்னர் இரண்டு நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, எவ்வித முன்னேற்றம் அடையாமல் இறந்துவிட்டார்.


எதிர்பாராத இந்த நிகழ்வு பார்வதியை மிகவும் பாதித்தது. தன்னைப் பெற்றவர்களிடமிருந்து விலகியே இருந்த அவள், தனது குழந்தைக்காகத் தனியே போராட வேண்டியிருந்தது.  மின்சாரத் துறையில் தனது கணவர் இழப்பிற்காக பெற்ற தொகையில்,  சேலையூர் பக்கத்தில் உள்ள திருவஞ்சேரியில் 2000 சதுர அடி காலி மனை வாங்கினாள்.


பின்னர் கொஞ்சம், கொஞ்சமாய் முதலீடு செய்து கட்டுமான பணி மேற்கொண்டு ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குள் இரண்டு அறை படுக்கை வசதி கொண்ட வீட்டை கட்டினாள்.


பார்வதி 58 வயதைக் கடந்து ஓய்வு பெறும் போது தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றாள். பார் வதியின் மகன்  சந்துரு அப்போது தான் +2படித்து முடித்தான்.


அந்த நேரத்தில் தனது மகனை மேல்படிப்புக்காக  கோச்சிங் class அனுப்பி படிக்க வைத்து, merit ல் சேலையூர் கேம்ப் ரோடில் உள்ள,  அதாவது வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள பாரத் பொறியியல் கல்லூரியில் B. E. சிவில் படிப்பில் சேர்த்தாள்.


 பார்வதி ஒவ்வொரு கட்டத்திலும் தனியே தன் மகனின் முன்னேற்றத்திற்காக மட்டுமே  போராடினாள்.


 சந்துருவுக்கு சுதா என்பவளை பெண் பார்த்து திருமணம் செய்தாள். அவர்களுக்கு தமிழரசன் என்னும் ஐந்தாம் வகுப்பு படிக்கும்  ஒரு பிள்ளை இப்போது உள்ளான்.


தற்போது பார்வதிக்கு 75 வயது முடிந்துவிட்டது. 


பார்வதி தனது பேரனிடம் மிகவும் அன்பு கொண்டவளாய் இருப்பாள். பாட்டியிடம் பேரனும் மிகவும் பாசமுடன் இருப்பான்.


 இரண்டு படுக்கை அறை கொண்ட இந்த வீட்டில் பாட்டிக்கு ஒரு அறை நிரந்தரமாக ஒதுக்கப்பட்டது.


பள்ளி செல்லாத நாட்களில்,பேரன் பாட்டியிடம் படிப்பான்.


 திருக்குறளில் அன்றாடம் ஒரு குறளும் அதற்குரிய  பொருளையும் சொல்வது கட்டாய மாக்கப்பட்டது  ஒப்பந்தம்  போல இரு வர்களுக்கும்.



ஒரு நாள் பாட்டி குறளுடன் பொருள் சொல்வதும் தமிழரசனுக்கு  மிகவும் எளிதானது.


 திருக்குறள்  மட்டுமின்றி பல நீதிக் கதைகளையும் பார்வதி பாட்டி, பேரனுக்கு சொல்லுவாள்.


தமிழரசனின் பாட்டி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை என்பதால், இவன் படிப்பில் படு சுட்டியாக வரவேண்டும் என்று எண்ணினாள். அதற்கான முயற்சியிலும் ஈடுபட்டாள்.



எப்போதும் பாட்டியின் அறையில் தனது பிள்ளை இருப்பதால் மிகவும் எரிச்சலோடு இருப்பாள்  தமிழரசனின் தாயார் சுதா.


 பாட்டி சொல்லும் நீதிக் கதைகளை கேட்டு அதில் ஒன்றி விடுவான் தமிழரசன்.


 தனது மகனுக்கு, அவனுடைய பாட்டி நல்லது செய்கிறான் என்பதை புரிந்து கொள்ளாமல் மிகவும் கடுப்பாகி போவாள் சுதா.


யார் தான் புள்ளைய பெத்துக்கலே, யார் தான் பசங்களை படிக்க வைக்கல, எனக்கு வந்து வாய்ச்ச மாமியார் போல அப்பப்பா என்று தனியாக புலம்பிடுவாள்.



 அப்போது மணி இரவு  7.30. வீட்டுக்குள் சந்துரு நுழைந்தான்.


 வரும்போதே மிகவும் டென்ஷனாக இருந்தான்.  சுதா மேலும் டென்சன் படுத்தினாள்.


ஐந்து மணிக்கு, உங்க அம்மா ரூமுக்கு போன பையன், இன்னும் வெளியே வரவில்லை என்றாள்.


அவனுக்கு எல்லாம் தெரியும். சரி. சரி நான் அழைக்கிறேன். தமிழரசன் இன்னும் என்னடா பாட்டி அறையில் வாடா என்றான் சந்துரு.


 ஏறக்குறைய அன்றைய ஹோம்வொர்க் முடித்துவிட்டு online கிளாசில் சொன்னது எல்லாம் ஒரு முறை படித்து எழுதி விட்டான்.  அன்றாடம் கிளாஸில் சொல்வதை முடித்துவிட வேண்டும்.  தலைமை ஆசிரியராக இருந்த பார்வதி, பேரன் படிப்பில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்கிறவள்.


 பாட்டி அறையிலிருந்து வெளியே வந்தான் தமிழரசன். அப்பா நான் எல்லாம் வீட்டுப்பாடத்தையும் முடித்து விட்டேன்.


 அப்புறம் பாட்டி சத்திய சோதனை, அதாம்பா காந்தி வரலாறு  சொன்னாங்க, அதைக் கேட்டு நான் ரொம்ப ஆச்சரியப்பட்டேன் என்றான்.


அப்படி என்ன சொன்னாங்க உங்க பாட்டி.


 காந்தி,  லண்டனுக்கு பாரட் லா படிக்க வாய்ப்பு வரும்போது அவங்க பெற்றோருக்கு இவரைப் பிரிய மனசு இல்லையாம். வெளிநாட்டுக்கு போய்  தன்னுடைய மகன்  எல்லை மீறி, தீய வழிக்கு சென்று விடுவான் என்று உள்ளூர பயம் இருந்ததாம்.


 இதை தெரிந்து கொண்ட  காந்தி, நான் சுய ஒழுக்கமாக தான் வாழ்வேன் என்று அம்மாவிடம் சத்தியம் செய்துவிட்டு  த் தான் படிக்கச் சென்றராம். அதன் பிறகு  வக்கீலுக்கு படித்து  தென்னாப்பிரிக்காவுக்கு வேலைக்குப் போனதைப் பத்தி சொன்னாங்க என்றான்.


 உங்க பாட்டிக்கு எல்லாம் தெரியும் பாட்டி சொன்னது ரொம்ப கரெக்டுடா.


 வாழ்க்கைல எப்படி கட்டுப்பாடாக இருக்கணும்னு காந்தி நமக்கு சொன்ன பாடம். இது முழுசா கடைப்பிடிக்கிறவர்கள் வாழ்க்கையில் முன்னேறுவார்கள் 


அதுமட்டுமில்லை எளிமையாக எப்படி வாழணும்னு சொன்னவர் காந்தி. தன்னுடைய ஆடையை தானே துவைத்துக் கொண்டு வாழ்ந்தவர்  அந்த மகான்.


 இந்திய சுதந்திரத்திற்கு பாடுபட்டவர்களுள் முக்கியமானவர். அதனாலதான் நான் அவர் பிறந்த நாளை காந்தி ஜெயந்தியாக   கொண்டிருக்கிறோம் என்றான் சந்துரு.


என்ன சுதா ஏதோ பையனைப் பற்றி  குறை சொன்னே இப்ப பாத்தியா, தன்னுடைய வீட்டுப்பாடம் முடிச்சுட்டும்,  அம்மா சொன்ன  காந்திஜி  கதையையும் கேட்டு சமத்தா இருக்கான் பாரு, உலக விஷயங்கள் எல்லாம் எங்கம்மா சொல்லிக் கொடுக்கிறாங்க. எப்படி டீச் பண்றாங்க தெரிஞ்சிக்கோ..


பள்ளி தலைமை ஆசிரியராக இருந்தவர்கள் அல்லவா. இப்பவே நம்ம பையனுக்கு  எவ்வளவு கற்றுக்கொடுக்கிறார் பாரு.  நீயும் என்னைக்காவது அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து இருக்கிறாயா.


 உன் பையன் எப்பவும் என் கிட்ட வருவதே இல்லை. நான் எங்க அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது.


நீ வேணும்னா பாரு ஒரு காலத்தில் நம்ம பையன் புத்திசாலியாக ஊர் மெச்சும் படி  வருவான்,  அதுக்கெல்லாம் எங்கம்மா தாண்டி காரணம் என்றான் சந்துரு.


 அப்பப்பப்பா,  அப்பனும் பிள்ளையும் பாட்டியை தூக்கி வச்சு கொண்டாடுங்க. உங்களாலே எனக்கு தலைவலி வந்தது தான் மிச்சம். என்னாலே தாங்கமுடியல,


சமையல் அறையிலே சட்டினி மட்டும் அரைச்சு வச்சிருக்கிறன்.நீங்க மாவு ஊத்தி இட்லியோ, தோசையோ  சாப்பிடுங்க என்று சொல்லி விட்டு படுக்கை அறைக்கு சென்றாள் சுதா.


 உண்மையைச் சொன்னா உங்க அம்மாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. சரி விடு இதெல்லாம் சகஜம் தானே. நமக்கு இதெல்லாம் பழகிப் போச்சு.


டேய்,தமிழ்,  இன்றைக்கு என்ன சமையல் செய்யலாம் என்றான் சந்துரு.


 தமிழ்,அவனது பாட்டி அறைக்குச் சென்று சில நொடிகளில் வந்து. பாட்டிக்கு இட்லி தான் வேண்டுமாம். எனக்கும் தான் இட்லி சுட்டுக் கொடுப்பா என்றான் .


 சமையலறையில்,  இட்லிக்கு மாவு ஊற்றி இருபத்தைந்து நிமிடத்தில் செய்து முடித்து எங்க அம்மாவிற்கு மூன்று இட்லியும் சட்டினி கொஞ்சம் எடுத்து சென்று கொடுத்தான்.


சந்துரு, தனது மகன் தமிழரசனும்  சேர்ந்து இருவரும் டைனிங் டேபிளில் கொண்டு இட்லி சாப்பிட்டார்கள்.



படுக்கை அறையில் இருந்து வெளியே வந்த சுதா,நீங்க ரெண்டு பேரும் சாப்பிடும்போது ஏன் என்னை  கூப்பிடல என்றாள் தன் மகனிடம்.


அம்மா, நீ, தான் தலை வலின்னு போய் படுத்துக் கொண்டீர்கள். உங்களை எழுப்பினால் மிகவும் தொந்தரவாக இருக்கும் என்று நான்தான் அப்பாவிடம் சொன்னேன் இப்போதைக்கு எழுப்ப வேண்டாம் என்று.


நல்ல வேலை, நீங்க தானா எழுந்து வந்துட்டீங்க,வாங்கம்மா சாப்பிடலாம் என்றான் தமிழ்.



 என்ன, டைனிங் டேபிள்ல எனக்கு இட்லியக் காணோம்


 கிச்சன் ரூம்ல இருக்குது. நீ எவ்வளவு சாப்பிடுவாய் இப்போது எனக்குத் தெரியாது. சுதா சமையலறைக்குச் சென்றாள்.


தமிழ், உங்கம்மா உலகமகா நடிப்பு செய்கிறார் பாரு என்று சந்துரு சொல்ல,  அதனைச் சரி வர கேட்காமல், என்ன டைனிங் டேபிளில் முணுமுணுப்பு சப்தம் என்றாள் சுதா.


 அது ஒண்ணும் இல்லம்மா, அப்பா  நீ செய்த சட்னி அருமையாக இருக்கிறது என்றான்.


 அப்போது மணி இரவு 9.10. படுக்கை அறையில் சந்துருவிடம், அப்பா பாட்டி உன்னை வளர்க்க  ரொம்ப கெ ஷ்டப்பட்டார்களாம்.


ஆமாண்டா, அப்பா இல்லாத எனக்கு மாதா,பிதா இரண்டுமே உங்க பாட்டி தான்.


 அந்த காலத்துல ஒரு பழமொழி சொல்லுவாங்க. தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்று, அதை நானும் உங்க பாட்டி மூலம்  என் வாழ்க்கை முழுவதுமாக உணர்ந்தவன் என்றான் சந்துரு.


 அப்போது குறுக்கீடு செய்த சுதா,  தனது பையனிடம் டேய் படுடா, என்றாள்.


ஏம்பா எப்ப பாத்தாலும் பாட்டி பேச்சை  எடுத்தால் அம்மாவுக்கு ஏன் கடுப்பாக இருக்கிறது.


 அதுவா, உங்கம்மாவை அவங்க அம்மா வளர்க்கும் போது நல்லது எதுவும் சொல்லிக் கொடுத்திருக்க மாட்டாங்க. இனிமே இதப்பத்தி எதும் பேசாதே பிரச்சனை பெருசா ஆயிடும். நீ படு நானும் படுக்கிறேன் என்றான் சந்துரு.


 அப்போது பக்கத்தில் உள்ள அம்மா அறையில் இருந்து சத்தம்.


சந்துரு வேகமாக போய் பார்த்தான்.

 அம்மா பாத் ரூமில் சறுக்கி விழுந்து விட்டார்கள். தனது தாயை பக்கமாக தூக்கிக்கொண்டு படுக்கவைத்தான்.


 அம்மா எங்கேயாவது வலிக்கிறதா சொல்லுமா ஆஸ்பத்திரிக்கு  போகலாமா என்றான்.


 அதெல்லாம் ஒன்றுமில்லை,


 நான் வேண்டுமானால் இங்கே பக்கத்தில் படுத்துக் கொள்ளட்டுமா என்றான் சந்துரு.


 கொஞ்சம் கால் வலிக்குதுடா,  நீ கொஞ்சம் அமுக்கி விடுகிறாயா என்றாள் பார்வதி.


 அதற்கென்ன  உனக்கு செய்யாத  வேற யாருக்கு செய்யப்போகிறேன்.


 சந்துரு  தைலம் எடுத்துக்  கால்களில் தடவி  பாதங்களில் தேய்த்தான். ஏறக்குறைய பத்து நிமிடம் ஆனபிறகு, நீ போய்  படுத்துக்கொள் என்று சந்துருவிடம் சொன்னாள் பார்வதி.


சரி என்று சொல்லிவிட்டு,இந்தாம்மா தண்ணி  பக்கத்திலே வச்சிருக்கிறேன் தேவையானால் எடுத்து குடித்து கொள்ளம்மா என்று சொல்லி அம்மா அறையை விட்டு வெளியே வந்தான்.


 அப்போது இரவு மணி 10.00. மகனும் தூங்கவில்லை. படுக்கை அறைக்கு வந்த சந்துருவை,சுதா உங்க அம்மாவுக்கு இதே வேலையாப் போச்சு, வேலைக்கு  போயிட்டு வந்திருக்கிற பையனை நிம்மதியா தூங்க விடறதில்ல. இப்போது எனக்கும் உங்க பையனுக்கும் நமக்கும் தூக்கம் போச்சு.


ஏங்க பேசாம உங்க அம்மாவை முதியோர் இல்லத்தை சேர்த்திருங்க. அதான் உங்க அம்மா பென்ஷன் வாங்குகிறார்களே அங்கே இருக்குறவங்க உங்க அம்மாவை  பார்த்துக்கொள்வார்களே,paying system த் தில் booking நாளைக்கே பண்ணி விடுங்கள் 


 அப்போதுதான் நாம் எல்லாம் ஒவ்வொரு ராத்திரியும் நிம்மதியாக தூங்க முடியும்  என்றாள் சுதா வெகு சாதாரணமாக.


 எங்க அம்மாவைப் பற்றி எதுவும் பேசாதே, அவங்க கஷ்டப்பட்டு என்னை வளர்த்தது நீ சொல்றத செய்யறதுக்கு தானா, பேசாம படு டீ என்றான் ஆவேசமாக.


 அப்ப நா சொல்றத கேக்க மாட்டீங்க


 சுதா, எனக்கு உன் மேல கோபமா வருது பேசாம படு என்றான் சந்துரு.


 நீங்க என்ன பண்ணுவீங்க? என்றால் சுதா  


 உன்னை, என்று சொல்லியபடியே படுக்கையிலிருந்து கையை அடிக்க ஓங்கினான்.


 நீங்க என்ன அடிச்சுட்டா உங்க அம்மா மனசு ரொம்ப குளிர்ந்திடும்மோ.


 நானே டென்ஷன்ல இருக்கிறேன். உன்னை அடிக்க நான்  கையை  ஓங்கினதற்கு சாரி சுதா. எனக்கு தூக்கம் வருது, இந்த ராத்திரியில் நமக்கு   இந்த சண்டை தேவையா பேசாம படு என்றான் அப்போது மணி 11.00.


 மறுநாள் காலை 5.30 மணிக்கு எழுந்தாள் சுதா. புலம்பிக்கொண்டே சமையலறைக்குச் சென்றாள். சமையலறையில் ஒரே சத்தம்.


 என்ன சுதா, சமையலறையில் என்ன சத்தம், ராத்திரி சரியாக தூக்கம் உன்னால போச்சு, சத்தம் போடாம வேலை செய். நான் இன்னிக்கி எட்டு மணிக்கு வேலைக்கு போகணும், டிபன் சாப்பாட்டை எடுத்து வை என்றான் நிதானமாக.


 ஏங்க நேத்து ராத்திரி, நீங்கள் சரியாக தூங்காததற்கு  நானா காரணம்.


 நீங்க அடிக்கிறதுக்கு கைய உயர்த்துவீங்க, நான் பொறுத்துப் போகணும்  அப்படித்தானே.


 சுதா அதற்குத்தான் நான் நேற்றே சாரி சொல்லிவிட்டேனே. விடு.. விடு மீண்டும் அந்த கதை எதற்கு என்றான் சந்துரு.



 அப்பஎன்னுடைய பேச்சை நீங்கள் கேட்க மாட்டீங்க


 என்னதான் செய்யணும்னு நீ, எதிர்பார்க்கிற என்றான்  ஆவேசமாய் மீண்டும் சந்துரு.


நான் நேற்று ராத்திரி சொன்னது..


எங்க அம்மா எப்போதும் என் கூட தான் இருப்பாங்க. நீ என்ன வேணாலும் செய்துகொள்.


 நீங்க உங்க அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்க்க மாட்டேன் என்பதால் நான் எங்க அம்மா வீட்டிற்கு செல்கிறேன் என்றாள் சுதா.


 தாராளமா போ, நீ வேண்டுமென்றே  பிரச்சனை  செய்ற என்றான் சந்துரு.


 காலையில டிபன், சாப்பாடு செய்யலாம்னு நினைச்சேன்   இப்போது எதுவும் செய்யவில்லை. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்று சமையலறையை விட்டு வெளியே வந்து மெயின் அறையில் உட்கார்ந்து கொண்டாள்.


 சரி உன்னை இனிமேல் திருத்த முடியாது, உன் பிடிவாத குணத்தை நான் என்னை மாற்றவா முடியும் என்று சொல்லிவிட்டு சந்துரு, தான் குளித்துவிட்டு  சமையலறைக்குச் சென்று  ஏற்கனவே வீட்டில் இருந்த இட்லி பொடியை வைத்துக்கொண்டு இட்லி தயார் செய்தார்.


 ஃப்ரிட்ஜில் இருக்கின்ற தயிர் பயன்படுத்தி, சற்று சாதம் வடித்து தயிர்சாதம்  பண்ணினான் 


 ஆமா உங்கம்மா வீட்டுக்கு போகப்போறேன் என்று சொன்னாயே சுதா  எப்போது போகப் போகிறாய் என்றான் சந்துரு.


 ஆத்திரத்துடன் இருந்த  சுதா, தனது பீரோவில் உள்ள துணி எடுத்து ஒரு சூட்கேசில் வைத்தாள்.


 சிறிது நேரத்திற்கெல்லாம் சமையல் செய்து முடித்துவிட்ட சந்துரு, தமிழரசனிடம் உங்க அம்மா அவங்க அம்மா வீட்டுக்கு போகப் போகிறாராம். நீ பாட்டி கூட இருடா என்றான்.


 நான் பாட்டிக்கு சாப்பாடு வச்சுட்டு போறேன். உனக்கும் டைனிங் டேபிள் சாப்பாடு எடுத்துட்டு போறேன் என்று தன்  தன் மகனிடம் சொல்லிவிட்டு 

வேலைக்கு கிளம்பினான் சந்துரு.


தமிழரசன் தன் தாயின் அருகில் வந்து, என்னமா நீ செய்வது கொஞ்சம் நல்லா இல்லை என்றான், எப்ப பாத்தாலும் அப்பாவிடம் கோவித்துக் கொள்கிறாய். நீ செய்வது என்னமா நியாயம்.


 அப்பனுக்கு ஏற்றமாதிரி புள்ள தப்பாம பிறந்து இருக்கிறடா, எப்பவுமே நீ உங்க அப்பனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவே, இன்னிக்கு மட்டும் என்ன விதிவிலக்கா என்ன சொல்லுடா தமிழ்.


ஆமா நான் சொல்றதை கவனமா கேளு, எனக்கு நீயும் வேணும் அப்பா வேணும்.


 நான் உனக்கு ஒரு திருக்குறள் சொல்கிறேன்,  அதுக்கு விளக்கம் மட்டும் சொல்லு என்றான் அம்மாவிடம்.


அட எனக்கே நீ புத்தி சொல்ல வந்துட்டியா,


 இல்லம்மா, அந்த திருக்குறளுக்கு அர்த்தம் தானே கேட்கிறேன்.


உம்மேல எனக்கு பாசம் இருக்குமா,

சரிடா நீ அறிவாளி ஆச்சே, பாட்டியோட செல்லப்பேரன்.அந்த திருக்குறளைச் சொல்லு என்றாள் சுதா.


பிறர்க்கின்னா முற்பகல் செயின் தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்.

 

இதற்கு என்ன பொருள் என்றான்.


 நாம ஒருத்தருக்கு முற்பகல்  துன்பம் கொடுத்தா அந்தத் துன்பம் நமக்கும் பிற்பகலிலே வரும் என்பது தானே அர்த்தம்.


சரியா சொன்னீர்கள் அம்மா. உன் பிரச்சனையும் இதுபோலத்தான்.



 உனக்குப் பாட்டியை பிடிக்கவில்லை என்பதற்காக, அவர்களை வீட்டை விட்டு வெளியே அதாவது முதியோர் இல்லம் சேர்க்கணும் நீ சொல்ற, ஆனா அப்பா என்னவென்றால், என் கூடத்தான் எங்க அம்மா இருப்பார்கள் என்பது அவருடைய நிலைமை,


 வாழ்க்கையில் காலம் உருண்டோடிச் செல்லும் . நானும் வளர்ந்து விடுவேன், ஒரு நல்ல வேலைக்கு செல்வேன், எனக்கும் திருமணம் ஆகும். உனக்குப் பேரன் பேத்தி பிறப்பார்கள். உனக்கு அப்போது பாட்டியைப் போல  வயது ஆகும்.



 அந்த நேரத்தில் என் மனைவிக்கு நீ தொந்தரவாக இருக்கலாம். உன்னை அவளுக்கு பிடிக்காது  என்று வைத்துக்கொள்வோம். அவள் உன்னை முதியோர் இல்லம் சேர்க்கச் சொன்னாள் நான் உன்னை சேர்க்கும் நிலை வரும் அல்லவா. அப்போது உன் மனம் வாடும் அல்லவா?


 தமக்கின்னா பிற்பகல் தாமே வரும்

 என்பது நியாயம் தானே. நான் அந்த நிலைமையில் மனைவியின் பேச்சைக் கேட்பானா அவள் சொல்லை மீறி நடப்பேனா. இதற்கு பதில்  சொல்லும்மா என்றான் தமிழ்.


என்னடா இப்படி பேசுற, நீ ஒரு சின்னப் பையன் என்று நினைத்தேன், பெரிய பெரிய வார்த்தை எல்லாம் சொல்கிறாய்  என்றாள் சுதா.


 அம்மா நான் கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்லு என்றான்.


 உன்னுடைய கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாதுடா.


 ஆமாம்மா, அடுத்தவருக்கு வருகின்ற வலியைப் பத்தி எவரும் கவலை பட மாட்டாங்க, தனக்கு அந்த வலி வரும்போது தான் யோசிப்பாங்க என்றான் தமிழ்.


 அப்போது தான் சுதாவுக்கு ஆயிரம் ஈட்டியை தன் உடம்பில் குத்திக் கொண்டது போல உணர்ந்தாள்.



 ஒரு திருக்குறளால் நம்ம பையன் நமக்கு  பாடம் புகட்டி விட்டானே என்பதை உணர்ந்தாள்.


 ஐந்து நிமிடம் யோசித்தாள்.


 தனது பையனின் பேச்சில் நியாயம் தெரிந்தது.


 தான் சூட்கேசில் வைத்திருந்த துணியை மீண்டும் பீரோவில் வைத்தாள்.


 தனது மாமியாரின் அறைக்குச் சென்றாள்,  படுத்திருந்த பார்வதி முகத்தை பார்த்தாள். பக்கத்திலே அமர்ந்தாள். கணவனை இழந்த ஒரு பெண் தன் மகனை வளர்க்க எவ்வளவு சிரமப்பட்டால் என்பதை உணர்ந்தாள். தன் அம்மாவையும், பாட்டியையும் ஒரே அறையில் பார்த்த தமிழரசனுக்கு வந்த இன்பம் கொஞ்சமல்ல.


 தனது தந்தைக்கு போன் செய்தான். அம்மா, பாட்டியின் அறையில்  இருப்பதை தெரிவித்தான் தமிழ் 


முருக. சண்முகம் 


ஐயப்பன்தாங்கல் சென்னை -56.



.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,