ரிஷி சூனக் மனைவி அக்ஷதா மூர்த்தி - கோடீஸ்வரர் மகளின் கடந்தகால வாழ்க்கை

ரிஷி சூனக் மனைவி அக்ஷதா மூர்த்தி - கோடீஸ்வரர் மகளின் கடந்தகால வாழ்க்கை
















 

ரிஷி சூனக் அதிகாரத்திற்கு வந்திருப்பது இந்தியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பிரிட்டிஷ்-ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் பிரதமர் என்பது மட்டுமே அதற்குக் காரணம் அல்ல.


அவரது மனைவி அக்ஷதா மூர்த்தி, 'இந்தியாவின் பில் கேட்ஸ்' என்றழைக்கப்படும் நாட்டின் சிறந்த தொழிலதிபர்களில் ஒருவரான இந்திய கோடீஸ்வரர் நாராயண மூர்த்தியின் மகள்.

பல்லாயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளின் வாரிசான அக்ஷதா மூர்த்தி இந்த ஆண்டின் தொடக்கத்தில் நான்-டாம் (non-domicile) அந்தஸ்தை பெற்றபோது பலரது கவனத்தையும் ஈர்த்தார். (நான்-டாம் அந்தஸ்துடன் பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டு குடிமக்கள், பிரிட்டனுக்கு வெளியே தங்கள் ஈட்டும் வருவாய்க்கு பிரிட்டன் அரசுக்கு வரி செலுத்தத் தேவையில்லை.)


நான்-டாம் அந்தஸ்தை பயன்படுத்தி அவர் பிரிட்டனில் வரி செலுத்துவதைத் தவிர்த்ததாக விமர்சனங்கள் எழுந்த பின்னர் வெளிநாடுகளில் ஈட்டிய வருமானத்திற்கு பிரிட்டனில் வரி செலுத்த ஒப்புக்கொண்டார்.

அவரது குடும்பத்தின் அபரிமிதமான செல்வம் இருந்தபோதிலும், அக்ஷதா மூர்த்தி மிகவும் எளிமையான ஆரம்பத்தைக் கொண்டவர்.

தனது குடும்பத்தால் ஒரு தொலைபேசி வாங்க முடியாத நிலையில் இருந்ததால் ஏப்ரல் 1980இல் ஹூப்ளியில் அக்ஷதா மூர்த்தி பிறந்த செய்தியை ஒரு சக ஊழியரிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொண்டதை 2013ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, மகளுக்கு எழுதப்பட்ட கடிதத் தொகுப்பில் நினைவு கூர்ந்திருந்தார் அவரது தந்தை நாராயண மூர்த்தி.


உன் அம்மாவும் நானும் அப்போது இளமையாக இருந்தோம். எங்கள் வாழ்க்கையில் எங்கள் பாதையைக் கண்டுபிடிக்கப் போராடினோம்," என்று அவர் எழுதினார்.


தாத்தா பாட்டியோடு வசிக்க...

அவர் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையாக இருந்தபோது, தனது தந்தை வழித் தாத்தா பாட்டியோடு வசிக்க அனுப்பப்பட்டார். ஏனெனில் அவரது தாயார் சுதா மூர்த்தியும் தந்தையும் மும்பையில் தங்கள் தொழிலை முன்னேற்றுவதில் கவனம் செலுத்தினர்.


ஓராண்டு கழித்து, நாராயண மூர்த்தி அவரை இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவராக மாற்றவிருந்த இன்ஃபோசிஸ் என்ற தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரானார்.


ரிஷியை சந்தித்தது எப்போது?

அக்ஷதா மூர்த்தியின் பெற்றோர் தங்கள் இரு குழந்தைகளின் கல்வியிலும் கடின உழைப்பிலும் கவனம் செலுத்தினர். "படிப்பது, கலந்துரையாடுவது, நண்பர்களைச் சந்திப்பது போன்ற விஷயங்களுக்கு நேரத்தை தனியாக ஒதுக்குவதற்கு அவர்களின் வீட்டில் தொலைக்காட்சி இருக்கவில்லை" என்று நாராயண முர்த்தி கூறினார்.


ரிஷி சூனக்


அக்ஷதா மூர்த்தி கலிஃபோர்னியாவில் உள்ள தனியார், தாராளவாத க்ளேர்மான்ட் மெக்கென்னா கல்லூரியில் பொருளாதார மற்றும் பிரெஞ்சு படித்தார். பிறகு டெலாய்ட், யூனிலீவரில் பணியாற்றுவதற்கு முன்பு ஃபேஷன் கல்லூரியில் டிப்ளமோ பெற்றார். பிறகு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்துக் கொண்டிருந்தார்.


அப்போது தான், பல்கலைக்கழகத்தில் சூனக்கை சந்தித்தார். அவர்கள் 2009இல் திருமணம் செய்து இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர்.



42 வயதான அவர் கலிஃபோர்னியாவில் தனது சொந்த ஃபேஷன் லேபிலான அக்ஷதா டிசைன்ஸை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக நிதித்துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.


தொலைதூர இந்திய கிராமங்களில்...

அவருடைய அக்ஷதா டிசைன்ஸ், 2011இல் அதன் முதல் தொகுப்பை அறிமுகப்படுத்தியது. வோக் இந்தியாவிடம் அவர் தொலைதூர இந்திய கிராமங்களில் உள்ள கலைஞர்களுடன் இணைந்து தனது வடிவமைப்புகளை உருவாக்கியதாகக் கூறியுள்ளார்.


இருப்பினும் மூன்றே ஆண்டுகளில் வணிகம் சரிந்ததாக தி கார்டியன் தெரிவித்துள்ளது.


2013ஆம் ஆணு அக்ஷதா மூர்த்தி, சூனக் ஆகியோரால் நிறுவப்பட்டு ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்யும் கேடமரன் வென்ச்சர்ஸின் லண்டனை தளமாகக் கொண்ட கிளை அவரது முக்கிய வணிக ஆர்வங்களில் ஒன்று.


கம்பனிஸ் ஹவுஸில் அக்ஷதா மூர்த்தி டிக்மே ஃபிட்னஸின் இயக்குநராகவும் பட்டியலிடப்பட்டுள்ளார். இதுவொரு கட்டணம் செலுத்தப்படும் உடற்பயிற்சிக் கூட சங்கிலி.


கோவிட்-19 பேரிடரின்போது, 'ஃபர்லோ' நிதியைப் பெற்றபோதிலும் வருவாய் குறைந்ததை அடுத்து இந்த ஆண்டு பிப்ரவரியில் நிறுவனம் நீதிமன்றம் நியமிக்கும் நிர்வாகப் பாதுகாப்பின் கீழ் சேர்க்கப்பட்டது.


அக்ஷதா மூர்த்தியின் லிங்க்ட்இன் சுயவிவரத்தில், உயர்தர ஆண்கள் ஆடைகளை விற்கும் நியூ & லிங்வுட்டின் இயக்குநராகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.



இன்ஃபோசிஸில் 0.9% பங்குகளை அவர் வைத்துள்ளார். நிறுவனத்தின் சமீபத்திய ஆண்டு அறிக்கையின்படி, அதன் மதிப்பு சுமார் 700 மில்லியன் யூரோ என மதிப்பிடப்பட்டுள்ளது.


யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து நிறுவனம் மாஸ்கோவில் அதன் செயல்பாடுகளை நிறுத்துவதற்கான அழுத்தத்தில் இருந்தபோது, அந்த நிறுவனத்தில் அவருக்கு இருந்த பங்குகள் சர்ச்சைக்குரிய விஷயமாக மாறியது. ஏப்ரலில், இன்ஃபோசிஸ் ரஷ்யாவில் உள்ள தனது அலுவலகத்தை மூடுவதாக பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது.


எளிய மக்களிடையே சில கேள்விகள்

இன்னும் விரிவாக, சூனக்-மூர்த்தி தம்பதியின் பெரும் செல்வம் எளிய மக்களிடையே சில கேள்விகளை எழுப்பியது. குறிப்பாக அடிப்படை செலவுகள் நெருக்கடியின்போது அவர் சாதாரண மக்களுடன் தொடர்பில் இல்லையா என்ற கேள்வியை சிலர் எழுப்பினர்.


கடந்த காலங்களில், தெரசா மேயின் கணவர் ஃபிலிப் மே உட்பட சில பிரதமர்களின் வாழ்க்கைத் துணைவர்கள் பொது வெளியில் பெரிதாகத் தங்களை வெளிப்படுத்திக்கொண்டனர்.


மனித உரிமை வழக்கறிஞர் செரி ப்ளேர், அவரது கணவர் டோனி ப்ளேர் பிரதமர் இல்லத்திற்குள் நுழைந்த பிறகும் அவரது வேலையைத் தொடர்ந்தார். அது பலரின் கவனத்தை ஈர்த்தது. செரி ப்ளேர், தனது தன்னார்வ பணிகள், புத்தக ஒப்பந்தங்களுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வந்தார்.


இதுவரை அக்ஷதா மூர்த்தி ஊகடங்களின் கவனத்தை நாடியதாகத் தெரியவில்லை. மாறாக சமீபத்திய சர்ச்சைகளால் ஊடகங்களின் பார்வை வளையத்திற்குள் தள்ளப்பட்டுள்ளார்.


இப்போது அவரது கணவர் பிரிட்டிஷ் அரசியலின் உயர் பதவிக்கு வந்துள்ளதால், அக்ஷதா மூர்த்தியின் மீதான ஆர்வம் இன்னும் அதிகமாகும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,