திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலின் சிறப்புகள்!!*
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலின் சிறப்புகள்!!*
பஞ்ச கிருஷ்ண தலங்கள் திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
இதில் உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர் தான் முதலாவது தலம்.
தமிழகத்தில் உள்ள முக்கிய வைணவ ஆலயங்கள் பஞ்ச கிருஷ்ண தலங்கள் ஆகும். திருமால் எப்போதும் இத்தலங்களின் பக்தர்களுடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இத்தலங்கள் கிருஷ்ண ஆரண்ய தலங்கள் என்றும் பஞ்ச கிருஷ்ண சேத்திரங்கள் என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்த பஞ்ச கிருஷ்ண தலங்கள் திருக்கண்ணங்குடி, திருக்கண்ணபுரம், திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம், திருக்கோவிலூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. இதில் உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர் தான் முதலாவது தலம்.
இந்த இடம் விழுப்புரம் மாவட்டத்தில் திருகோவிலூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது. இங்கு இறைவன் உலகளந்தப் பெருமாளாக திரிவிக்ரமன் என்ற பெயரில் உள்ளார். இவரின் சன்னதியிலேயே துர்க்கையும் அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் மாபலியின் கர்வத்தை அடங்க வாமனராக வந்து பிறகு திரிவிக்ரமனான காட்சியளித்த திருமால், மிருகண்டு முனிவருக்கு காட்சி அருளினார். 108 திவ்ய தேசங்களில் இந்த இடம் 43வது திவ்ய தேசமாகும். இதன் கோபுரம் 192-அடி உயரம் கொண்டு தமிழகத்திலே மூன்றாவது பெரிய கோபுரம் கொண்ட கோவிலாக திகழ்கிறது. அதனால் இத்தலத்தை நடுநாட்டு திருப்பதி என்றும் அழைப்பார்கள்.
வாமனர் வரலாறு..
முந்தைய காலத்தில் சிவன் கோவில் ஒன்றில் விளக்கு அணையும் நிலையில் இருந்துள்ளது. அப்போது அங்கு வந்த ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்கு திரியானது தூண்டப்பட்டு, விளக்கும் பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த அந்த எலியை, மறு பிறவியில் நாடு போற்றும் சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான். அந்த எலி தான் மகாபலி மன்னன்.
தன் நாட்டு மக்களுக்கு அவன் செய்த நற்காரியங்களால் அவன் புகழ் ஓங்கியது. இந்த நிலையில் மகாபலி சக்கரவர்த்தி நாட்டின் நலன் கருதி வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான். தேவர்கள் இதைக் கேள்விப்பட்டதும் கலங்கிப் போனார்கள். ஏராளமான புண்ணிய காரியங்கள் செய்து, இப்போது, இந்த வேள்வியையும் முடித்து விட்டால், அசுரகுலத்தைச் சேர்ந்த அவன் இந்திரப்பதவியை அடைந்துவிடுவானே என்று அவர்கள் பயந்தனர். அதனைத் தடுக்கும் படி தேவர்கள் மகா விஷ்ணுவிடம் போய் மன்றாடினர்.
தேவர்களை காப்பது தன் கடமை என்பதால் அவர்களுக்கு உதவ முன்வந்த விஷ்ணு அதே நேரத்தில் மகாபலியின் சிறப்பை உலகம் அறியச் செய்யவும் சித்தம் கொண்டார். அதற்காக மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார். மகாபலி நடத்தும் வேள்வி சாலைக்கு 3 அடி உயரமும், ஒரு கையில் தாழம்பூ குடையும், மற்றொரு கையில் கமண்டலம் கொண்டு சென்றார். அவரை வரவேற்ற மகாபலி, தானம் வழங்க முற்பட்டான்.
ஆனால் வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அசுர குல குருவான சுக்ராச்சாரியார் அறிந்து கொண்டு, மகாபலியிடம் தெரிவித்தார். ஆனால் மகாபலிக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. உடனே நீர் வார்த்து தானத்தை கொடுத்து, பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று வாமனரை நோக்கி கூறினான். இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத்திற்கு உயர்ந்தார்.
பின் வாமனர் முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார். மகாபலியிடம், ‘சக்கரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது’ என்று கேட்டார். ‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வைத்து விடுங்கள்’ என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான். மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார். மேலும் இப்போது நீ எனக்கு கொடுத்த தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய் என்றும் அருளினார்.
இங்கு வீற்றிருக்கும் மூலவர் திருவிக்கிரமர் திருமேனிதாருவால் ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்குமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு தோஷத்தில் துர்க்கைக்கு பூஜை செய்தால் தோஷம் விலகும் என்பது ஐதிகம்.
Comments