(கீதை இசைக்கும்)
உணவினால் உற்பத்தியாகிறான் மனிதன்,’ என்பது கிருஷ்ணனின் வாக்கு. உணவு நம்மை வளர்க்கிறது என்பதைத்தான் அவர் தெரிவிக்கிறார். நாம் உட்கொள்ளும் உணவு நமக்குள் ரத்தமாகிறது, நரம்பாகிறது, எலும்பாகிறது, தசையாகிறது, இன்றியமையாத உறுப்புகள்கொண்ட உடலாகிறது. எல்லாவற்றிற்கும் மேல், நம் உயிர் உடலில் நிலைக்கிறது. சிறு குழந்தை கட்டத்திலிருந்து முதிய நிலைக்கு நம்மை வளர்க்கிறது. அதாவது, இதுவரை ஆத்மாவை ரகசியமாகப் பாதுகாக்கிறது! சுயநலமில்லாத நற்செயல்களை மனிதன் செய்யும்போது, அவன் அச்செயல்களின் பலன்களை இறைவனுக்கே அர்ப்பணித்து விடுகிறான் என்றும் கிருஷ்ணன் சொல்கிறார். இப்படித் தன்னலம் நோக்காத பண்பு அவனுக்குள் எப்படி ஏற்படுகிறது? ஏனென்றால் இவனுடைய கவலைகள் எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வதால்தான்!
மனிதனுக்கு எதையெதை, எவ்வப்போது, எப்படியெப்படித் தர வேண்டும் என்று பகவானுக்குதான் தெரியும். அந்தந்த கட்டங்களில் அதது கிடைக்கும்போது, அதையெல்லாம் அப்படியே இறைப் பிரசாதமாக ஏற்றுக்கொள்ள வேண்டியது மனிதனின் பொறுப்பு. ‘சர்வம் இறையர்ப்பணம்’ என்ற மனப்பக்குவம் வந்து விட்டால், அவ்வாறு ஏற்றுக்கொள்வது சுலபமாகி விடும்.
யக்ஞம் என்பதும் இதுதான் - அதாவது இறையர்ப்பணமான கர்மங்கள்.
கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்
தஸ்மாத் ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யக்ஞே ப்ரதிஷ்டிதம் (3:15)
‘‘கர்மம் என்பது வேதத்திலிருந்து உதித்ததாகும். அந்த வேதம் எங்கிருந்து வந்தது? அழிவற்ற பரமாத்மாவிடமிருந்து! ஆகவே, எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மமாகிய வேதம் எப்போதும் யக்ஞத்திலேயே நிலை பெற்றிருக்கிறது என்பதை அறிக.’’
எங்கும் நிறைந்திருக்கும் பிரம்மமாகிய வேதம் என்பதிலிருந்து, அது முழுமையாக இயற்கையைச் சார்ந்திருப்பதைக் குறிப்பிடுவதாகவே கொள்ளலாம். எங்கும் வியாபித்திருப்பது இயற்கைதானே! இப்படி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆற்றல் பரமாத்மாவுக்கும் உண்டல்லவா? இதனால்தான் ‘யக்ஞம் என்பது ஞானத்திலிருந்து பிறந்த கர்மமாகக் கருதப்பட வேண்டியது. அதாவது, இதுவே கர்ம ரூபி. இப்படி கர்மம் ஞானத்திலிருந்து பிறந்தது என்றால், அந்த ஞானம் எங்கிருந்து வந்தது? வேறெங்கு, இறைவனிடத்திலிருந்துதான்!’ என்று வலியுறுத்துகிறார் கிருஷ்ணன்.
கர்மத்தை முறையாகச் செய்தால் அது யக்ஞமாகிறது. அதாவது, வாழ்க்கை என்ற கர்மத்தை ஒழுக்கநெறி தவறாமல் செய்தோமானால் அதுவே யக்ஞம். அதே சமயம், நாம் அகங்காரம்கொண்டு கர்மங்களை நிறைவேற்றுவோமானால், அந்த கர்மங்கள் எல்லாம் அஞ்ஞானத்திலிருந்து புறப்பட்டவையாகவே இருக்கும்.
இவற்றை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? நம்மிடம் அகங்காரம் இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள விரும்பாத எண்ணம் நம்முள் நிலவும்வரை, அகங்காரத்துடன் நாம் வாழும் இந்த வாழ்க்கைதான் சரியானது என்று போலியாக நம்மைச் சுற்றி ஒரு திரை போட்டுக்கொள்ளும்வரை, அத்தகைய கர்மங்களை அடையாளம் தெரிந்து கொள்வது இயலாத செயல்தான்.
ஆனால், அந்த கர்மங்களால் நாம் பந்தத்தில் ஈடுபட வேண்டி வருமானால், துக்கத்தை, வேதனையை, பொருமலுடன் கூடிய ஏக்கத்தை நாம் உணருகிறோமென்றால், அந்த கர்மாக்கள் அஞ்ஞானத்திலிருந்து பிறந்தவை என்பதைப் புரிந்து கொள்ளலாம். துரதிருஷ்டவசமாக தர்மத்துக்குப் பாற்பட்ட, ஒழுக்கத்துக்குப் புறம்பான அந்த வேதனைகளை நாம் சகித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, அடையாளம் கண்டுகொண்டு விட்டு விலக இயலாதவர்களாகவே இருக்கிறோம்.
எந்தக் கர்மங்களை இயற்றும்போது நாம் ஆனந்தம் அடைகிறோமா, அவற்றால் பிறர் மகிழ்வுறுகிறார்களா, பரிபூரண நிம்மதி கிடைக்கிறதா, அந்தக் கர்மங்கள் எல்லாம் ஞானத்திலிருந்து பிறந்தவை என்பதைத் தெரிந்துகொள்ளலாம். ஏனென்றால், இப்படிப் பிறருக்கு ஆனந்தம், மகிழ்ச்சி மற்றும் பூரண நிம்மதி அளிக்கக் கூடிய கர்மங்களை நாம் அனுசரிக்கிறோம் என்றால், நமக்குள் அப்படி அனுசரிக்கும்போது அகங்காரம் என்பது எள்ளளவும் இல்லை என்றுதான் அர்த்தம்!
இன்னும் குறிப்பிட்டுச் சொல்வதானால், அப்படி அகங்காரம் இல்லாத மனிதரோடுதான் இறைவனும் இருக்கிறார்! அதாவது எங்கும் வியாபித்திருக்கக் கூடிய பரம்பொருளுக்கு, நமக்குள் மட்டும் இடம் கொடாதிருப்பது நம்முடைய அகங்காரத்தினால்தான்! ஒரு பணக்காரர் ஒரு மகானிடம் வந்தார். ‘‘நான் நிறைய தருமங்கள் செய்திருக்கிறேன், என்னால் பலரும் பயனடைந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்னிடம் நேரடியாக, வாயார நன்றி சொல்கிறார்கள். அப்படியென்றால் என்னிடம் இறைவன் குடிகொண்டிருக்கிறார் என்றுதானே அர்த்தம்?’’ என்று கேட்டார்.
‘‘அவர் எப்படி உனக்குள் குடியிருப்பார்?’’ என்று மகான் திருப்பிக் கேட்டார். ‘‘உன் மனதுக்குள்தான் ‘நான் ஒரு பெரும் பணக்காரன், நான் தருமம் செய்கிறேன், நான் எல்லோருக்கும் உதவியாக இருக்கிறேன், என்னிடமிருந்து உதவி பெறுபவர்கள் என்னைப் பாராட்டுவதும், எனக்கு நன்றி தெரிவிப்பதும் என்னை மேலும் தர்மம் செய்ய ஊக்குவிக்கிறது’ என்றெல்லாம் எத்தனையோ அகங்கார அழுக்குகளை சுமந்துகொண்டிருக்கிறாய்.
இந்த பல்லி, பூரான், கரப்பான், எலி என்று அந்த மன வீட்டிற்குள் வாழத் தகுதியற்ற எத்தனையோ ஜந்துகளுக்கு வாழ்வளித்தும் கொண்டிருக்கிறாய். அவற்றால் உன்னுடைய மனமென்ற வீடு இருண்டுகிடக்கிறது. உள்ளே புக கடவுளுக்கு எங்கே வாய்ப்பளிக்கிறாய்? அவருக்கு உள்ளே கொஞ்சம்கூட இடமேயில்லையே! பிறகு எப்படி இறைவன் குடிகொள்வார் என்று நீ எதிர்பார்க்கலாம்?’’ பணக்காரர் தலைகுனிந்தார். தன்னிடம் இருக்கும் செல்வமோ, வசதிகளோ எல்லாமும் இறைவன் அளித்தவை. அவற்றைப் பிறருக்குக் கொடுக்கச் சொல்லித்தான் இறைவன் கொடுத்திருக்கிறார். அதாவது, தன் பொறுப்பைச் சிறிதளவு ஏற்றுக்கொள்ளுமாறு மனிதனைப் பணிக்கிறார்.
இதைப் புரிந்து கொள்ளாமல், எல்லாம் தானே சம்பாதித்தது, தனக்கு மட்டுமே உரிமையானது; ஆகவே அதிலிருந்து எடுத்து யாருக்காவது கொடுக்கும்போது அதற்கான பிரதிபலனை எதிர்பார்ப்பதில் எந்தக் குற்றமும் இல்லை என்ற மிதர்ப்புடன் செயலாற்றுவது, கர்மம் இயற்றுவதாக ஆகாது.விருப்பு வெறுப்பற்று கர்மம் இயற்று வதாலேயே உண்மையான ஞானத்தை அடைய முடியும். அதன் மூலமாக இறைவனை நமக்குள் இருத்திக்கொள்ளமுடியும்.
(கீதை இசைக்கும்)
தொகுப்பு: பிரபு சங்கர்...
Comments