#பொன்னியின்_செல்வன்_

 #பொன்னியின்_செல்வன்_

by

Venkatasubramanian Ramamurthy






ஐம்பது வயதை நெருங்கும் ஐஸ்வர்யா ராயும் நாற்பதை நெருங்கும் த்ரிஷாவும் பேரிளம் பெண்களாக மிக அழகாக திரையில் ஜொலிக்கிறார்கள். பொளந்த வாயை மூடுவது கஷ்டமாக இருக்கிறது. இந்த வரிகளைப் படித்தவுடன் புரிந்துகொண்டிருப்பீர்கள். ஆமாம். இன்று பொ.செ. 1ம் பாகம் பார்த்தேன். இல்லை. பார்த்தோம். ஒரு பெரும் படையாக கல்கி குழுமத்திலிருந்து சென்று பார்த்தோம். நான் வீகேயெஸ்ஸையும் வல்லபாவின் தந்தையையும் என்னோடு சேர்த்துக்கொண்டேன். கல்கி அவர்களின் பெயர்த்தியும் எங்கள் CEOவுமான ஸ்ரீமதி. லக்ஷ்மி நடராஜன் அவர்களும், காலச்சக்கரம் நரசிம்மா சாரும், திருப்பூர் கிருஷ்ணன் சாரும் எங்களுடன் இந்த வைபவத்தில் கலந்துகொண்டார்கள்.

இது அமரர் கல்கி எழுதினபடியே இருந்ததா? என்று நீங்கள் நெத்தியடியாகக் கேள்வி கேட்பதற்கு முன்னர்.... வெள்ளைத் திரையில் ப்ரொஜெக்டரிலிருந்து முதல் ஒளி சிந்தும் நொடியிலேயே ”அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி....” என்று பொடி எழுத்துகளில் கண்களைக் கசக்கிக் கொண்டு பார்த்தால் தெரியும்படி போட்டுவிடுகிறார்கள். திரைப்படம் முடிந்தவுடன் திரையில் தோன்றும் வார்த்தைகளில் “மூலக் கதை - அமரர் கல்கி” என்றுதான் வருகிறது. ஆகையால் தழுவி எடுக்கப்பட்டதில் உங்கள் எதிர்பார்ப்புகளைத் தள்ளி வைத்துவிட வேண்டும். நிற்க.
ஆடிப்பெருக்கில் மங்களகரமாக துவங்கியதை மணி ரத்னம் ஆதித்த கரிகாலன் போரிடும் ரத்தகளரிக் காட்சிகளோடு துவங்குகிறார். இங்கேயே நீங்கள் நிமிர்ந்து உட்கார்ந்து கல்கியின் பொன்னியின் செல்வன் என்ற எதிர்பார்ப்புகளை தூர வைத்துவிட்டு மணியின் பொன்னியின் செல்வன் என்ற தீர்மானத்திற்கு வந்துவிட வேண்டும். வந்துவிட்டீர்களா? இனிமேல் பாருங்கள். ஒரு புதிய வரலாற்றுத் திரைப்படம் உங்கள் கண்களுக்கு விருந்தாகும்.
வரலாற்று பாத்திரங்கள் என்பதால் தூய தமிழில் பேசுகிறார்கள். ஆகையால் இக்கால தமிழ் யுவன்கள் மற்றும் யுவதிகளுக்காக திரையின் காலடியில் உப தலைப்புகளாக ஆங்கிலத்தில் வசனங்கள் வருகிறது. ஏ. ஆர். ரஹ்மான் காலவர்த்ததேசமானத்திற்கெல்லாம் அடக்கிவிடக்கூடியவர் அல்லாதலால் இசையின் பரிமாணம் வேறு தளத்தில் இயங்குகிறது. 2k கிட்ஸைக் கவரும்படியாக தாளமும் வாத்யங்களும் உபயோகிக்கப்பட்டிருக்கின்றன. திரையில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. காட்சியோடு பொருந்திப் போகிறதா என்று கேட்கக்கூடாது. உஷ்ஷ்ஷ்... கேட்டால் நீங்கள் வயதானவர். ரஹ்மான் துள்ளல் இசை.
நந்தினி திரையில் தோன்றும் போதெல்லாம் அவள் சதிகாரி என்று உணர்த்துவதற்காக “ஓ.....ஓ......ஓ......” என்று தியேட்டரின் மூலைமுடுக்கிலிருக்கும் ஒலிப்பெருக்கிகலெல்லாம் அலறுகின்றன. ஆனால் திரையில் ஐஸ்வர்யா ராயுடன் அதைக் கேட்கும் போது உன்மத்தம் வந்தது போல நம்மை மெய்மறக்கச் செய்கிறது. அரைக்கண்களோடு அவர் பேசும் வசனங்கள் போதையேற்றுகிறது.
பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார் மிடுக்காகச் செய்திருக்கிறார். அவர் பெயரை அவரைச் சொல்லச் சொன்னால் நான் பளுவேட்டரையர் என்பார் போலிருக்கிறது. சரி.. இந்த தமில் சேஷ்டையெல்லாம் வேண்டாம்..) வருகிறார் என்றதும் ஒரு சுரங்கப் பாதை வழியாக வந்தியத்தேவனை ஐஸ். ஐஸ். ஐஸ்வர்யா ராய் அனுப்புகிறார்.
“போகும் வழியில் பொன்னும் மணியும் நிறைய தென்படும். மயங்கிவிடாதீர்கள்” என்ற நந்தினியின் கேலியான பேச்சுக்கு
“இங்கே எதிரில் வைரச் சுரங்கமே நிற்கிறதே... ” என்று வந்தியத்தேவனாக வரும் கார்த்திக்கின் வழிசல்... ஆஹா... வழிபவர்களின் ராஜாவாக வந்தியத்தேவன்! 🙂
ஆதித்த கரிகாலனாக வரும் விக்ரம் எப்போதும் போர் வெறியில் வருகிறார். பற்களைக் கடித்துப் பேசுகிறார். எல்லாவற்றிற்கும் மேலாக சிப்பாய்களுடன் சேர்ந்து மதுக் குப்பியோடு குத்தாட்டம் வேறு போடுகிறார். 🙂 🙂 🙂
சின்ன பழுவேட்டரையராக வரும் பார்த்திபன் ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடிக்கமுடியவில்லை என்று சொன்ன ஏக்கத்தைத் திரையில் காண முடிந்தது. அவர் தன்னுடைய விஸ்வரூப மேனியை மேலும் சில கோட்டுகள் போட்டு இன்னும் பிரம்மாண்டமாகத் தெரிகிறார்.
த்ரிஷாவுக்கு இளவரசி என்ற கம்பீரமும் மிடுக்கும் வரவில்லை. அழகு பொம்மையாகவே திரையில் வந்து போனதும் காரணமாக இருக்கலாம். இப்படத்தில் மென்மையோடு அழகில் பார்ப்பவரைக் கவர்ந்துகொள்கிறார். தமிழ் பேசியிருக்கிறார். கொஞ்சு தமிழ். திரிஷா பொன்னி நதி ஓரத்தில் இருப்பதாக வரும் காட்சி எங்கோ வாரணாசி பக்கம் படமாக்கியிருப்பார்கள் போலிருக்கிறது. எங்கள் காவிரி பக்கத்தில் அப்படிப்பட்ட படித்துறைகள் எல்லாம் இருந்திருக்குமா என்பது சந்தேகமே! டேய்! திரிஷா திரையில் தெரிவதுதான் முக்கியம். அது எந்த படித்துறையாக இருந்தால் என்னடா? என்று நீங்கள் அதட்டுவது கேட்கிறது. கைக்கட்டி வாய்பொத்தி விடுகிறேன்.
நடிகர் பட்டாளம் நிறைய இருக்கிறது. நாசர், நிழல்கள் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம் என்று பலர். கடல் காட்சிகள் நன்றாக இருக்கிறது. பாகுபலியோடு ஒப்பிட்டால்... என்று ஒப்புநோக்கிக் கேட்காதீர்கள். ஆழ்வார்க்கடியானாக வரும் ஜெயராமை அநியாயத்திற்கு வீணடித்திருக்கிறார்கள். அவரை வைத்துச் செய்த காமெடிகள் எல்லாம் கொஞ்சம் கூட சிரிப்பை வரவழைக்கவில்லை. கிச்சுகிச்சு செய்வதற்கு மாறாக நீளமான நகங்களால் பிராண்டுவது போல இருக்கிறது!
ஜெயம் ரவி சிறப்பாகச் செய்திருக்கிறார். அவரது வழக்கமான கீச்சுக் குரல் வசனங்கள் இல்லை. கொஞ்சம் சிரமப்பட்டு ஆண்மைத்தனமான குரல் கொடுத்திருக்கிறார். அரசனுக்குரிய தோரணைகளை வரவழைத்துக்கொண்டு நடித்திருக்கிறார். இலங்கையில் அவரோடு கூட வருபவரை எங்கேயோ பார்த்தது போல இருக்கிறதே என்று யோசிக்கும் போது.. ஓ.. கல்யாண் ஜ்வல்லர்ஸ் விளம்பரத்தில் வருவாரே... ஆ.. ஆமாமா.. நம்ம பிரபு! 🙂
படத்திற்கு சரியான பக்கபலம் கேமிரா. ஒளிப்பதிவு கண்ணுக்கு இனிமையான கவிதையாக காட்சிகளை படமாக்கியிருக்கிறது.
வாளேந்தி என்பதை வாலேந்தி என்று அரச வேஷம் போட்டிருப்பவர்கள் பேசுவதைப் பார்க்க நன்றாக இல்லை! 🙂
விபூதிப் பட்டை போடுவதற்கு ஒரு தகுதியான ஆளை யூனிட்டில் சேர்த்துக்கொண்டு மணி ரத்னம் இப்படத்தை எடுத்திருக்க வேண்டும். ஒரு ஈர்க்குச்சியை ஈரமாக்கிக்கொண்டு பவுடரில் நனைத்து நெற்றியில் பட்டைப் போட்டிருக்கிறார்கள். ஈர்க்குச்சி ஒடிந்து போன இடங்களில் சில சிற்றரசர்கள் ராஜாக்கள் நெற்றியில் விரல்களால் போட்டிருக்கிறார்கள். ஆழ்வார்க்கடியானுக்கு நன்றாகத் தெரியும்படி நாமம் போட்டிருக்கலாம். அநிருத்த பிரம்மராயர் வைஷ்ணவர். ராவ்ஜி அல்லது என்னைப் போன்ற வடமாள் ஐயரைப் போல கோபிச் சந்தனம் போட்டுவிட்டார்கள். முதன்மை மந்திரி ஒரே காட்சியில் வந்து போகிறார். அநிருத்தர் மோகன்ராம்தானே என்று நீங்கள் பக்கத்து இருக்கையில் இருக்கும் நண்பரைப் பார்த்துக் கேட்கும் முன்னரே அவர் திரையிலிருந்து மாயமாகிவிடும்படியான ஒரு பிட் காட்சி!
முக்கியமான இன்னொரு விஷயம்... வந்தியத்தேவன் செல்லும் இடங்களெல்லாம் மருதநிலம் ஆட்சி செய்யும் சோழ தேசம் போலவே இல்லை. மருந்துக்குக்கூட ஒரு வயல்வெளி தென்பட்டதா என்பது நினைவில்லை. நீர்வீழ்ச்சிகளும் மலைகளும் குறிஞ்சி நிலமாகக் காட்டப்படுகிறது. வடதேசத்து அல்லது அயல்தேச ராஜ்ஜியங்கள் நடக்கும் மலைமீதுள்ள கோட்டைப் போல சில இடங்களில் காட்டப்படுகிறது. சோழப்பேரரசு எந்த மலையில்?
சுந்தரசோழர் படுத்த படுக்கையாக இருப்பாரே.. இங்கே எழுந்து நடக்கிறாரே... குந்தவை எப்போது ஆதித்த கரிகாலனை நேரில் பார்க்கச் சென்றாள்?... குடந்தை ஜோதிடர் எங்கே?... போன்ற பல கேள்விகளும் எதிர்பார்ப்பும் இல்லாமல் சென்றால் குறைந்தபட்ச அடியோடு வீடு திரும்பலாம். நீங்கள் ஒரு ஆசாரமான கல்கி ரசிகர் என்றால் சில பல காட்சிகளில் மனம் வெம்பும் வாய்ப்புகள் உண்டு.
வெளியே வந்து சேப்பாயியைத் திருப்புவதற்காக நின்றபோது ”ஒரு தபா பார்க்கலாம்ப்பா.. ” என்று சென்னைவாசி ஆட்டோகாரர் ஒருவர் தியேட்டர் வாசலில் யாரையோ சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார்.
நானும் பொன்னியின் செல்வன் பார்த்துட்டேன்.... என்னைத் தீண்டத்தகாதவான விலக்கிவிடாதீர்கள்... இந்த ஃபேஸ்புக் சமூகம் இனிமேலாவது என்னையும் அரவணைத்துக் கொள்ளட்டும்!
https://www.facebook.com/mannairvs/நன்றி சார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,