*முப்பிடாதியாகி நின்ற முப்பெரும்தேவியர்*

 


*முப்பிடாதியாகி நின்ற முப்பெரும்தேவியர்*


நன்றி குங்குமம் ஆன்மீகம்


உலகாளும் ஆதி பராசக்தியே மக்களைக் காக்கும் பொருட்டு பல அவதாரங்களை எடுத்துள்ளார். காசியில் விசாலாட்சியாக, காஞ்சியில் காமாட்சியாக, மதுரையில் மீனாட்சியாக, திருச்சியில் சமயபுரத்தாளாக, நெல்லையில் காந்திமதியாக, சங்கரன் கோயிலில் கோமதியாகக் கன்னியாகுமரியில் பகவதியாக என பல நாமங்களில் கோயில் கொண்டுள்ளாள். அந்த வகையில் உக்ர தோற்றத்தில் பெண் தெய்வ வழிபாடுகளில் முதன்மை தெய்வமாக வழிபாட்டில் இருந்தது காளி வழிபாடு. இதனைத் தொடர்ந்து உருவான வழிபாடு தான் அஷ்டகாளி வழிபாடு.


மகிஷாசுரன்


அசுரர் குலத்து பெண் தானாவதி தனக்கொரு ஆண் வாரிசு வேண்டும் என்று பிரம்மனை நோக்கித் தவம் இருந்தாள். தானாவதியின் கடும் தவத்தினை கண்ட பிரம்மதேவன் அவள் முன் தோன்றி, தானாவதி கேட்ட வரத்தைக் கொடுத்தார். வரத்தின் பயனாக தானாவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு தானாசுரன் என்ற பெயரிட்டு வளர்த்து வந்தாள். எருமைத்தலையுடன் இருந்ததால்  மகிஷாசுரன் அழைக்கப்பட்டான். வேதங்களையும், அனைத்து கலைகளையும் கற்றுணர்ந்த மகிஷாசுரன், சிவனை நோக்கி கடும் தவம்புரிந்தான். மகிஷாசுரனின் தவத்தைக் கண்ட சிவபெருமான் அவன் கேட்ட வரங்களையெல்லாம் கொடுத்தார். எல்லா வரங்களையும் பெற்ற மகிஷாசூரன் தனக்கு எந்த நிலையிலும் மரணம் வரக்கூடாது என்று கேட்டான். அது முடியாதது.


பிறப்பு என்று ஒன்றிருந்தால் இறப்பு என்பது உண்டு. இது பொதுவான நியதி. இதை மாற்ற முடியாது என்றார். அப்படியானால் பெண் வயிற்றில் பிறக்காத பெண்ணால் மட்டுமே எனக்கு மரணம் நேர வேண்டும் என்று வரம் கேட்டான். அதனை கேட்ட சிவபெருமான் அப்படியே ஆகட்டும் என்றார்.


வரங்களைப் பெற்ற மகிஷாசுரன் தனக்கு மரணம் நேர வாய்ப்பே இல்லை என்ற ஆணவத்தில் தான் ஆண்டு வந்த மகேந்திர கிரிபர்வதம் (தற்போதைய மைசூர்) (மகிஷன் ஆண்ட ஊர் என்பதால் மகிஷா ஊர் என்ற அழைக்கப்பட்டது. அது மருவி மைசூர் என்றானது) பகுதியில் தான் எண்ணியபடி ஆட்சிபுரிந்தான். தனது சுயநலத்திற்காக கொடுஞ்செயல்கள் புரிந்துவந்தான். தேவர்களை துன்புறுத்தினான். மகிஷாசுரனின் கொடுமைகளை பொறுத்துக் கொள்ள முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.


சிவபெருமானின் கோபமும், அஷ்ட காளியாக உமையாளின் அவதாரமும்


இதனிடையே கயிலாய மலையில் பார்வதிதேவி, விநாயகர், முருகன் சகிதமாக சிவனுடன் இருக்கையில், விநாயகப் பெருமான், அன்னை சக்தியிடம் ‘‘தாயே, தந்தை ஏன் கண்களை திறந்தபடி தியானம் செய்தார், தியானம் என்றாலே கண்களை மூடித்தானே செய்ய வேண்டும் என்று வினா தொடுத்தார்.’’ அதற்கு பார்வதி தேவி ‘‘தந்தையின் கண் ஒளியினால்தான் அண்ட சராசரங்கள் இயங்குகிறது. அவர் கண்களை மூடினால் அகிலமும் இருட்டாகும்’’ என்றார். அப்போது குறுக்கிட்ட முருகன் ‘‘தாயே, அப்படியென்றால் தந்தை ஒரு முறை கண்களை மூடிக் காட்டட்டும் பார்ப்போம்’’ என்றார்.


‘‘இதை எப்படி தந்தையிடம் கூற, என்று முருகர் கேட்க, அவரிடம் சொல்ல வேண்டாம், அதை நானே செய்கிறேன் என்று கூறியபடி, பார்வதி தேவி, சிவபெருமானின் கண்களை, தனது கரங்களால் மூடினார். மறுகணமே அகிலமும் இருளில் மூழ்கியது. உடனே சக்தியின் கரங்களை விலக்கிக்கொண்டு கண்ணைத் திறந்தார் சிவன்.‘‘என்ன விளையாட்டு இது’’ சினம் கொண்டார் சிவன். பணிந்தார் பார்வதிதேவி, ‘‘சுவாமி, பிள்ளைகள் கேட்டதற்காகச் செய்தேன். தாங்கள் பொறுத்தருள வேண்டும்’’ என்றார். இந்த செயலுக்காக நீ வருந்தியே ஆக வேண்டும் என்ற சிவன், நாகக்கன்னியின் வயிற்றில் அஷ்ட காளியாக பிறக்க வேண்டும் என்று சபித்தார்.


இந்தச் சிறிய தவறுக்கு மானிட பிறப்பா, அதுவும் நாகத்தின் வழியாகவா! என்று வருத்தமுற்ற பார்வதிதேவி, அவ்விடத்திலிருந்து எழுந்து நகர முற்பட்டார். அப்போது சிவபெருமான் கடுஞ் சினம்கொண்டு நெற்றிக்கண்ணை திறந்தார். அதிலிருந்து வெளியான தீப்பிழம்புகள் பார்வதிதேவியின் மேனியை எட்டு பிண்டங்களாக்கின. அந்த எட்டு பிண்டங்களையும் கையில் எடுத்துக்கொண்டார் சிவன்.


பாதாள லோகத்தில் நாககன்னி பிள்ளை வரம் வேண்டி சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தாள். அவள் முன் தோன்றிய சிவன், தன்னிடமிருந்த எட்டுப் பிண்டங்களையும் சாப்பிடுமாறு கொடுத்தார். அதை உண்ட நாககன்னியின் வயிற்றில் அது எட்டு முட்டைகளாக உருமாறி வெளி வந்தன. நாககன்னி அந்த எட்டு முட்டைகளையும் அடை காத்து வந்தாள். 41 வது நாள் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தன்று செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எட்டு முட்டையிலிருந்து எட்டு பெண் குழந்தைகள் பிறந்தன.


3. அஷ்டகாளிகள் அவதரித்தல்


முதலாவதாக பிறந்தாள் முத்துமாரி என்ற மாரிமுத்தாரம்மன், இவளை முத்தாரம்மன் என்றும் பக்தர்கள் அழைப்பதுண்டு. இரண்டாவதாக பிறந்தாள் மாகாளி என்ற பத்திரகாளி, மூன்றாவதாக பிறந்தாள் முப்பிடாதி. நான்காவதாக பிறந்தாள் உலகளந்தாள் என்ற உலகமாதா, இவளை உலகநாயகி என்றும் அழைப்பதுண்டு. ஐந்தாவதாக பிறந்தாள் அரியநாச்சி என்ற அங்கயற் கண்ணி, அன்னை இவளே நாகாத்தம்மனாகவும், நாகவல்லியாகவும் அழைக்கப்படுகிறாள். ஆறாவதாக பிறந்தாள் செண்பகவல்லி என்ற வடக்கு வாசல் செல்வி, அன்னை இவள் செல்லியம்மன் என்றும் அழைக்கப்படுகிறாள். ஏழாவது பிறந்தாள் சந்தனமாரி. இவளே சடைமாரி, ஆகாசமாரி என அழைக்கப்படுகிறாள். கடைசியாக பிறந்தாள் காந்தாரி.


பிள்ளைகள் எட்டுபேரையும் நாகக்கன்னி, அன்போடும், அரவணைப்போடும் வளர்த்து வந்தாள். வளர்ந்து வந்த பிள்ளைகள் கன்னியர் ஆகினர். அம்மா, எங்கள் முகமும் உங்கள் முகமும் வேறுபட்டு உள்ளதே என்று கேள்வி எழுப்ப, எல்லாம் அந்த சிவனார் செயல் என்றாள் நாககன்னி. உடனே சிவனிடம் எங்களை ஏன், தாயைப்போல் படைக்காமல் மனிதகுல பெண்களாக படைக்கவேண்டும். இந்த நாகலோகத்தில் மனிதப் பிறப்பு எடுத்து என்ன பயனைப் பெறப் போகிறோம்.


அதை அந்த சிவனிடமே கேட்போம் என்று கூறி, அக்காள் தங்கை எட்டு பேரும் சிவலிங்கத்தை வைத்து பூஜித்து சிவனை நோக்கி தவமிருந்தனர். அவர்களின் தவத்தைக் கண்ட சிவன் அவர்கள் முன் தோன்றினார். அஷ்ட காளிகள் சிவனிடம் தங்களின் பிறப்பு குறித்து கேட்க, சிவனும் பதில் கூறினார். மகேந்திரகிரி பர்வதத்தை ஆண்டு வரும் மகிஷா சுரனை வதம் செய்யவே உங்கள் படைப்பு என்று கூற, மாரி முத்தாரம்மன், தங்களின் வேண்டுகோளை ஏற்று மகிஷா சுரனை நாங்கள் அழித்து வந்த பின் எங்கள் எட்டு பேரையும் நீங்கள் மண முடிக்க வேண்டும் என்றனர். அதற்கு சிவனும் ஒப்புதல் அளித்தார். மேலும் மகிஷாசுரனை அழிக்கும் வகையில் வரங்கள் கேட்க, அவர்களுக்கு அனைத்து வரங்களையும் நல்கினார் சிவபெருமான்.


இது ஒருபுறமிருக்க, தன்னை நாடி வந்த தேவர்களிடம், சிவபெருமான் அகிலத்தையே அடக்கி ஆளும் ஆதிபரமேஸ்வரியிடம் முறையிடுங்கள் என்றார்.ஆதிபரமேஸ்வரியிடம் முறையிட சென்ற தேவர்களை தடுத்து நிறுத்திய நாரதர், முதலில் கயிலாயம் செல்லுங்கள், அடுத்து வைகுண்டம், அதனையடுத்து பிரம்மலோகம் என மூவுலகமும் சென்று தேவியர்களை வணங்கி வேண்டுதல் வையுங்கள். முப்பெரும் தேவியரால் நிச்சயம் இது முடியும் என்றார்.


அதன்படியே தேவர்கள் முதல் மூன்று நாட்கள் மலைமகளை வேண்டியும், அடுத்த மூன்று நாட்கள் அலைமகளையும், கடைசி மூன்று நாட்கள் கலைமகளையும் வேண்டினர். முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து நவராத்திரியின் நிறைவில் மகிஷாசுரனை வதம் செய்தனர்.மகிஷாசுரன் மரணத்தறுவாயில் தனக்கு மறுஜென்மம் கொடுங்க தாயே, அதில் தங்களை சுமக்கும் பாக்யம் வேண்டும் என்று கேட்டதற்காக தாய்மைக் குணம் கொண்ட அகிலாண்டேஸ்வரி அந்த வரத்தை மகிஷாசுரனுக்கு வழங்கினாள்.


சாந்தரூபம் கொண்டிருந்த முப்பெரும்தேவியரிடம் நாரதர் சென்று மூவரில் யார் பெரியவர் என்றும் கல்வி, செல்வம், வீரம் எது பெரிது என்றும் கேள்வி எழுப்பினார். மூவரும் புன்னகைத்தனர். அப்போது பேசிய உமையாள் தேவி, நாரதரே!அரனும், அரியும் ஒன்றாகி சங்கரநாராயணராக காட்சி அளித்தனர்.


இப்போது பாருங்கள் நாங்கள் மூவரும் உடலாலும், உள்ளத்தாலும் ஒன்றிணைந்து நிற்கிறோம் என்று கூறியபடியே மலைமகள், அலைமகள், கலைமகள் மூவரும் ஒன்றாகி நின்று காட்சி கொடுத்தனர். மூன்று தலையோடும், ஆறு கரங்களோடும் ஓருடலாக தேவியர் நின்றனர்.மூன்று தலையோடு நின்றதாலே முத்தலை அம்மன் என்றும், அதுவே மருவி முத்தாலம்மன் என்றும் அழைக்கப்படலானாள்.தலை - என்றால் பிடரி என்றும் பொருள்படும். அந்த வகையில் மூன்று பிடரியோடு இருந்ததாலே முப்பிடரி அம்மன் என்றும் அதுவே மருவி முப்பிடாரி அம்மன் என்றும் முப்பிடாதி என்றும் அழைக்கப்படலானாள்.தென் மாவட்டங்களில் முப்பிடாதி அம்மன் பல ஊர்களில் கோயில் கொண்டுள்ளாள்.கொங்கு மண்டலங்களில் முத்தாலம்மன் என்ற நாமத்தில் கோயில் கொண்டுள்ளாள்.


தொகுப்பு: சு.இளம் கலைமாறன்...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,