எழுத்தாளர் வண்ணநிலவன் படைப்புகள் குறித்த முழுநாள் கருத்தரங்கு
எழுத்தாளர் வண்ணநிலவன் படைப்புகள் குறித்த முழுநாள் கருத்தரங்கை நேற்று 29.10.2022 அன்று டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் 'சிற்றில்' அமைப்பு நடத்தியது. நிகழ்ச்சி எளிமையாக, மிகச் சிறப்பாக நடைபெற்றது.
காலையில் கவிஞர் சுகுமாரன் தலைமை உரை, பின் சிறுகதைகள் குறித்த அமர்வு.
முன்னோடியான ஒரு எழுத்தாளரை முழுமையாக வாசித்து அவை குறித்த தங்கள் பார்வையை முன்வைப்பது வாழும் காலத்தில் அடுத்த தலைமுறை அவருக்கு செய்யும் மகத்தான மரியாதை. பொன்னாடைகளோ பணமுடிப்புகளோ அல்ல. அது நேற்று நிகழ்ந்தது.
மாதம் ஒரு எழுத்தாளருக்கு இப்படியான கருத்தரங்குகளை 'சிற்றில்' நிகழ்த்துவதாகவும் இவை தொகுக்கப்பட்டுப் பின் நூலாகவும் வெளியாகும் எனவும் நிகழ்ச்சியில் அறிந்தேன். 'சிற்றிலு'க்கு என் வாழ்த்துக்கள்.
வண்ணநிலவனின் 'கடல்புரத்தில்....' படித்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதே போல் அவரது ஆரம்ப கால சிறுகதைத் தொகுதியான 'எஸ்தரை'யும். பல ஆண்டுகளுக்குப் பிறகு அவை குறித்த உரைகளைக் கேட்கிறேன்.
எனக்குள் தூர்ந்து போயிருந்த ஒரு கிணறு ஊறத்தொடங்கிவிட்டது.
யதார்த்தம், நவீனம் , காவியத்தன்மை எல்லாம் கலந்த ஓர் எழுத்துவகை வண்ணநிலவனுடையது.
அவரது கதைகள் நவீன தமிழ் இலக்கியத்தின் மதிப்பு மிக்க ஆக்கங்கள். அவருக்கு என் அன்பைத் தெரிவித்தேன். தெரிவிக்கிறேன்.
மதியம் அவரது நாவல்கள் மற்றும் கட்டுரை பிற முதலான அவரது ஆக்கங்கள் குறித்தும் அமர்வுகள் இருந்தன. நான் மதியம் வரை இருந்துவிட்டு புறப்பட்டேன்.
நிகழ்வில்
நிறைய நண்பர்களைச் சந்திக்க முடிந்தது மகிழ்ச்சி 💐
*
(புகைப்படம்: உணவு இடைவேளையின் போது வண்ணநிலவன் அவர்களோடு அவரது ரெயினீஸ் அய்யர் தெருவில்....)
*
பிருந்தா சாரதி
Comments