*மனம் பக்குவப்பட்டால் ஆன்மா தூய்மையாகும்*


 *மனம் பக்குவப்பட்டால் ஆன்மா தூய்மையாகும்*


வான்மறை திருக்குர்ஆன் இறைத்தூதரின் தலையாய இரண்டு பணிகளை ரத்தினச் சுருக்கமாக எடுத்துரைக்கிறது: ‘‘அவர் (இறைத்தூதர்) எத்தகையவர் எனில், இறைவனுடைய வசனங்களை அவர்களுக்கு ஓதிக்காட்டுகிறார்; அவர்களைத் தூய்மைப் படுத்துகிறார்..’’ (குர்ஆன் 62:2)


அந்த இரண்டு பணிகள் இவைதாம்: 1. இறை வேதத்தைக் கற்றுக் கொடுத்தல். 2. ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துதல். இறைவனிடமிருந்து வரும் திருச்செய்திகளை இறைத்தூதர்தான் மக்களுக்கு எடுத்துரைக்கிறார். அதுதான் அவருடைய முதல் பணி. அடுத்து ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துதல். இதுதான் மாபெரும் பணி. இந்தப் பணிக்காகத்தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் வாழ்நாள் முழுதும் பாடுபட்டார்கள்.


ஆன்மாக்களைத் தூய்மைப்படுத்துதல் என்றால் என்ன? இறைவனின் திருநாமங்களை உச்சரிப்பதில் தொடங்கி, தனிமையில் இருந்து வழிபாடுகளில் மூழ்குவதுவரை இதற்குப் பல்வேறு விளக்கங்களும் வழி முறைகளும் சொல்லப்படுகின்றன. ஆனால் இஸ்லாமியத் திருநெறி, ஓர் எளிமையான வழியைச் சொல்கிறது.


மக்களுடைய சிந்தனையை இறைவனின் விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றுவது, அவர்களுடைய சிந்தனைப் பாங்கைப் பக்குவப்படுத்துவது, இறைவனின் விருப்பத்திற்கேற்ப சிந்திக்கும் மனப்பக்குவத்தைத் தோற்றுவிப்பது இவையே ஆன்மாவைத் தூய்மைப்படுத்தும் பணியாகும்.


இவ்வாறு உள்ளத்தைப் பக்குவப்படுத்தாமல் எந்த ஒரு பணியைச் செய்தாலும் அது பயனற்றதாகவே முடியும். இறைவனின் திருப்தியைப் பெறும் வகையில் தொழுகையை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று இறைத்தூதர் சொல்லித் தந்தாரோ அதற்கேற்பவே நாம் தொழுகையை முறையாக நிறைவேற்றுகிறோம்.


அதே இறைத்தூதர்தான், இறைவனின் கட்டளைக்கேற்ப குடும்பத்தை எப்படி நடத்துவது, மனைவி மக்களிடம் எப்படி நடந்து கொள்வது, வியாபாரம் எப்படிச் செய்வது என்பதையும் கற்றுத் தந்தார்கள். ஆனால் நாம் அதற்கேற்ப நடந்து கொள்கிறோமா? இல்லை.


காரணம் என்ன? இறைவனின் விருப்பத்தை தன்னுடைய விருப்பமாக நமது ஆன்மா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான்.

ஆன்மாவைத் தூய்மைப்படுத்துதல், மனத்தைப் பக்குவப் படுத்துதல் என்பதன் பொருள், இறைவனின் விருப்பம் என்ன என்பதை அறிந்து, அதற்கேற்ப நம் வாழ்வை அமைத்துக்கொள்வதே ஆகும்.


- சிராஜுல் ஹஸன்


இந்த வார பிரார்த்தனை


‘‘இறைவா, என் மனதிற்கு ‘தக்வா’ எனும் இறையச்சத்தை அருள்வாயாக. மேலும் என் மனதைத் தூய்மைப்படுத்துவாயாக. மனதைத் தூய்மைப்படுத்துபவர்களில் நீயே மிகச் சிறந்தவன் ஆவாய்.’’ (முஸ்லிம்)...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,