திருமகளைப் போற்றும் துதி நூல்கள்*
திருமகளைப் போற்றும் துதி நூல்கள்*
நன்றி குங்குமம் ஆன்மிகம்
சிவாலயத்தின் சிறப்புக்களைக் கூறும் தலபுராணங்கள் சிலவற்றில் லட்சுமியாகிய திருமகள், சிவபெருமானை சிவலிங்க வடிவில் வழிபட்டாள் என்றும், சில தலப்புராணங்களில் லட்சுமி துதிகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், சிவாலயங்களில் வாயில் நிலைகளின் மேலே கஜலட்சுமியும், உள் ஆவரணங்களின் வாயுமூலையில் சிலர் ரூபத்தினாலோ அல்லது சுதைச் சிற்பமாகவோ தனிச் சிற்றாலயமாக விளங்குகின்றாள். இவள் சிவனின் கட்டளையை ஏற்று வழிபடும் அன்பர்கள் யாவருக்கும் எல்லா ஐஸ்வர்யம் தருகின்றாள் என்பது கருத்து.
மேலும், சிவாலயங்களின் மண்டபத் தூண்களில் அஷ்ட லட்சுமிகளின் திருமேனிகள் விளங்குகின்றன. சிவாலயங்களில் நித்தம் நிகழ்த்தப் பெறும் கஜபூஜையானது, லட்சுமியை வழிபடுதலாம். குறிப்பாக, நவராத்திரி வைபவத்தில் 4,5,6 ஆம் நாட்களில் லட்சுமி பூஜை சிறப்பாக நடைபெறுவதைக் காணலாம். இப்பிராட்டியான வளின் மேதா விலாசத்தைப் புராணங்கள், மற்றும் தனிநூல்கள் விவரிக்கின்றன.
திருமகள் வழிபாடு, திருமால் வழிபாட்டோடு இணைந்த நிலையிலேயே இருப்பதால், திருமகளைப் போற்றும் துதிநூல்கள், அதிகமாகத் தோன்றவில்லை. நடைமுறையில், வடமொழியிலும் தென்மொழியிலும் சிறப்புப் பெற்றுள்ள லட்சுமி துதிகளைப் பற்றிய செய்திகளை இங்கே காணலாம்.ஆதி நூல்களான வேதங்களில் சில இடங் களில் திருமகள் துதிகள் காணப்படுகின்றன. இவற்றுள் முதன்மை பெற்றது ஸ்ரீசூக்தமாகும். வேள்விகளிலும் குடமுழுக்கு முதலான பெரிய பூஜைகளிலும் இந்த சூக்தம் மற்ற மந்திரங் களுடன் சேர்த்து ஓதப்படுகிறது. வேதங்களுக்கு அடுத்த நிலையில், புராணங்களில் அனேக இடங்களில் திருமகள் துதிக்கப்படுகிறாள். சிவ மகாபுராணத்தின் ஒருபாகமான காசிக் கண்டத்தில் இடம் பெற்றுள்ள `லட்சுமி பஞ்சகம்’ தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மச்சபுராணத்திலுள்ள துதிகளும் ஓரளவு வழக்கில் உள்ளன.
ஆதிசங்கரர் தனக்கு அன்புடன் நெல்லிக் கனியை பிச்சையிட்ட பெண்ணுக்கு அவளுடைய வறுமை தீரும்படித் திருமகளை வேண்டிப் பாடிய நூல், கனகதாரா தோத்திரமாகும். இதை அவர் பாடியதும், திருமகள் அவளுடைய வீட்டில் தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிந்தாள் என்று வரலாறு கூறுகிறது. வைணவ சமய ஆசார்யார்கள் ஆங்காங்கு தனியாகவும், பெரிய அளவில் திருமாலோடு சேர்த்தும், திருமகளைப் போற்றித் துதித்துள்ளனர். உடையவர் என்று போற்றப்படும் ஸ்ரீமத் ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வாரின் புதல்வரான பராசரபட்டர், திரு வரங்க நாயகியான திருமகளைத் துதித்துப் பாடிய நூல், `ஸ்ரீகுணரத்ன கோசம்’ ஆகும். இந்நூல் ஸ்ரீரங்கம் அரங்க நாச்சியாரின் குணநலன்களை விவரித்துக் கூறுகிறது.
வைணவ ஆசார்ய புருஷரான ஸ்ரீநிகமாந்த தேசிகர், காஞ்சிபுரத்திலிருந்த போது, தன்னிடம் திருமணத்திற்குப் பொருள் கேட்ட ஒரு பிரம்மசாரிக்கு அருளும்படி திருமகளைத் துதித்தார். அந்த நூல் `ஸ்ரீஸ்துதி’ என்று கொண்டாடப்படுகிறது. இதைக் கேட்ட அவள், மகிழ்ந்து முற்றத்தில் பொன் மழை பொழிந்தாள் என்று வரலாறு கூறுகிறது. மேலும், ஸ்ரீஸ்தலம், மகாலட்சுமி அஷ்டம், மகாலட்சுமி ஸகஸ்ரநாமம், சௌபாக்ய லட்சுமி தோத்திரம் முதலிய வடமொழி நூல்கள், மகாலட்சுமியைச் சிறப்புடன் போற்றுகின்றன. இவையாவும் சிறப்புடன் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
தமிழில் திருமகளைப் போற்றும் துதிகள் குறைந்த அளவிலேயே உள்ளன.வண்ணச்சரபம் தண்டபாணிசுவாமிகள், திருமகளைப் போற்றி பல துதிகளை இயற்றியுள்ளார். இவற்றில் குறிப்பிட்டத்தக்கது, திருமகள் அந்தாதி ஆகும். இது நூறு பாடல்களைக் கொண்டது. இந்நூல், திருமகளே என்று தொடங்கி திருமகளே என்று முடிகிறது. இதைப் போலவே, சேலம் இந்து சமயக்கல்லூரி முதல்வராக விளங்கிய புலவர் திருக்குறள் இராமசாமி என்பவர், `திருமகள் அந்தாதி’ எனும் நூலை இயற்றியுள்ளார்.
காஞ்சிபுரம் பெருமாள் கோயிலில் எழுந்தருளியுள்ள பெருந்தேவித் தாயார் மீது யதிராஜர் என்பவர் `பெருந்தேவித்தாயார் மாலை’ எனும் நூலைப் பாடியுள்ளார். இதில் தேவி பெரும் துரைப்பெண், கச்சி மகாராணி என்று பலவாறு புகழப்படுகிறாள்.தேசிய மகாகவியான பாரதியார், திருமகளைத் துதித்து பல பாடல்களைப் பாடியுள்ளார். அவர் திருமகளிடம் நித்தம் உன்னை வேண்டினேன் எனும் இசைப்பாட்டில் ஆடு, மாடு, வீடு, நிலம் முதலியவற்றை வேண்டித் துதிப்பதைக் காண்கிறோம்.
திருமகளைச் சரண்புகுதல் எனும் நெடும் இசைப்பாட்டில் திருமாலின் தேவியாக விளங்குவது தொடங்கி, அவளுடைய திருவுருவத்தைச் சொல்லோவியமாகத் தீட்டுகின்றார். அவளுடைய இருப்பிடங்களை கூறிக்கொண்டு வரும் அவர் பாரதி சிரந்தனிலும் என்று சிலேடையாகக் குறித்துள்ளதைக் காண்கிறோம். இது பாரதியாரான தன் திருமுடிமேலும் என்ற பொருளுடன் கலைமகளான பாரதியின் சிரந்தனிலும் இருப்பவள் என்னும் பொருளைத் தருகிறது.இவற்றை தவிர நவராத்திரிப்பாட்டு, லட்சுமி காதல், ஆறுதுணை முதலிய பாடல்களில் பல இடங்களில் அவர் திருமகளைப் போற்றிப் பரவுகிறார்.
தஞ்சாவூர் சதாவதானி சுப்பிரமணி ஐயர், அஷ்ட ஐஸ்வர்யத் தோத்திர மாலை எனும் நூலைப் பாடியுள்ளார். இது விநாயகர், சுப்பிரமணியர், பரமசிவன், மீனாட்சி தீபம், மகாலட்சுமி சிக்லித் வேன் ஆகியோரை வணங்கி தன, தான்ய, சந்தான, சௌபாக்ய, வீர, விஜய, வர, கஜ, ஆகிய எட்டு லட்சுமிகளைத் துதிப்பதுடன், காமதேனுவுக்கு வணக்கம் கூறி பக்தர்களை வாழ்த்துவதுடன் முடிகிறது. திருவாரூர், திருநின்றியூர், முதலிய தலங்களுக்குப் பாடப்பட்டுள்ள தலபுராணங்களிலுள்ள கடவுள் வாழ்த்துப் பகுதியில் திருமகளைப் போற்றும் துதிப்பாடல்கள் இடம் பெற்றுள்ளதைக் காண்கிறோம்.
மச்சபுராணம் கூறும் திருமகள் துதி
தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள மச்ச புராணத்தின் காப்புச் செய்யுளாக திருமகளைத் துதிக்கும் வகையில் அமைந்த பாடலை இங்கு காணலாம். இதில் கந்தருவர், யக்ஷர்கள், சித்துக்களில் வல்ல சித்தர்கள், வானுலகத்தேவர்கள், யாழ் ஏந்திய தும்புருநாரதர், ஆயிரங்கண்களையுடைய இந்திரன், பிரம்ம தேவன். வேதம் ஓதும் வேதியர்கள், முனிவர்கள், பாதாள லோக வாசிகளான நாகர்கள் முதலானோர் வந்து போற்றித் துதிசெய்து கொண்டிருக்க மணம் வீசும் சிவந்தசெந்தாமரை போன்ற மலர்ப்பாதங்களையுடைய மகாலட்சுமி, திருமாலின் மார்பில் நிலையாக வாழ்கின்றாள். அவருடைய அழகிய பொற்பாதங்களை, பணிந்து வணங்கி அருள்பெறுவோம் என்று போற்றப்படுகின்றது.
கந்தருவ ரியக்கர் விஞ்சை வல்லவர் வானகத்
தமரர் கருவி யாழ்ப்பண்
முந்திருவ ராயிரங் கணிந்திர ணான்முகன்
மறையோர் முனிவோர் நாகர்
வந்திரு தாண் மலர்துதிப்ப மாயவன் செம்மணி
மார்பின் மருவி வாழும்
செந்திருவி னறுங்கமலச் புந்தரப் பொற்பா
தமலர் சென்னி சேர்ப்பாம்
பிரித்தெழுதிய வடிவம்
கந்தருவர் இயக்கர் விஞ்சை வல்லார் வானகத் தமரர் கருவி யாழ்ப்பண்
முந்திருவர் ஆயிரங்கண் இந்திரன் நான்முகன் மறையோர் முனிவோர் நாகர்
வந்திரு தாள் மலர்துதிப்ப மாயவன் செம்மணி மார்பின் மருவிவாழும்
செந்திருவின் நறுங்கமலச் சுந்தர பொற்பாத மலர் சென்னி சேர்ப்பாம்.
திருப்பரங்குன்றத் திருமகள்
முருகப் பெருமான், தேவகுஞ்சரியாகிய தெய்வ யானையை திருமணம் செய்துகொண்ட திருத்தலம் திருப்பரங்குன்றமாகும். அந்த திருமணத்தை திருமகள் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தாளாம். அதை விரும்பி அங்கேயே நீங்காது குடிகொண்டிருக்கின்றாளாம். திருப்பரங்கிரிப் புராணத்தில் இடம்பெற்றுள்ள திருமகள் துதியைக் காண்போம்.
திரண்டு முனிவ ரிருபாலுஞ் சிறந்து தினமும் சேவிப்ப
வரந்தந் தருளும் பெண்கொடியை வடிவேற் குமரன் மணக்கோலம்
புரிந்த வழகையிரு விழிக்கு விருந்தா யருந்தும் புத்தமுதைப்
பரங்குன்ற மமர்ந்த செழுந்திருவைப் பணிந்து திருவைப் பொருந்துவாம்
பொருள்
விசாலமான கண்களை உடையவளும், புதிய அமுதம் போன்றவளும், திருப்பரங்குன்றத்தில் வீற்றிருப்பவளும் செல்வச் செழிப்பை உடையவளும், ஆகிய திருமகளைப் பணிந்து செல்வத்தை அடைவோம்.
Comments