புதுமை இயக்குநர் இன்றைக்கும் ஸ்ரீதர்



🔥
புதுமை இயக்குநர் ஸ்ரீதர் நினைவு நாளின்று🥲
தமிழ்த் திரையுலகில் அதுவரை வசனமே செங்கோலோச்சி வந்த நிலையை மாற்றி இயக்குனருக்கான ஒரு இடம் பெற்றுத் தந்தவர் ஸ்ரீதர். ஆம்.. ஒரு இயக்குனருக்காக படத்தை பார்க்கும் நிலையை, முதன் முதலாக தமிழ் சினிமாவில் உருவாக்கியவரிவர். கொஞ்சம் விளக்கமாக சொல்வதானால்
அந்தக் காலத்தில், தயாரிப்பு நிறுவனங்கள்தான் சொல்லப்பட்டன. பக்ஷிராஜா படம், ஏவிஎம் படம் என்றெல்லாம் சொன்னார்கள். ஜெமினி கம்பெனி படம், மாடர்ன் தியேட்டர்ஸ் படம் என்று சொன்னார்கள். பிறகு வந்த காலகட்டம், நடிகர்களின் பக்கம் திரும்பியது. ‘எம்.கே.டி. படம்’ என்றார்கள். ‘பி.யு.சின்னப்பா’ படம் என்றார்கள். ‘கிட்டப்பா’ படம் என்றார்கள். ‘சிவாஜி படம்’ என்றார்கள். ‘எம்ஜிஆர் படம்’ என்றார்கள். நாயக பிம்பங்களில் இருந்த சினிமாவை, இயக்குநர் பக்கம் திசை திருப்பியது கலங்கரை விளக்கம் ஒன்று. கேப்டனை விட்டுவிட்டு, கப்பலில் பயணித்தவர்களைச் சிலாகித்ததை விடுத்து, கேப்டனின் லாகவத்தை எல்லோரும் சொல்லத் தொடங்கினார்கள். அப்படிப்பட்ட கேப்டனாகத் திகழ்ந்தவர்தான் இயக்குநர் ஸ்ரீதர்.
அவரது திரைப்படங்களின் காட்சியமைப்புக்களையும், கேமரா கோணங்களையும் அவருக்குப் பின்னர் திரையுலகில் பெரும் மாறுதல்களை உருவாக்கிய தாகக் கூறப்படும் கே.பாலச்சந்தர், பாரதி ராஜா ஆகியோர் பெருமளவில் பாராட்டி இருக்காங்க.
ரத்தப்பாசம் என்ற படத்தின் மூலம் வசன கர்த்தாவாக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர். அதன் பிறகு அமரதீபம், உத்தம புத்திரன், புனர் ஜன்மம், எதிர்பாராதது போன்ற பல படங்களுக்கு வசனகர்த்தா வாகப் பணி புரிந்து வந்தார்
1957ஆம் ஆண்டு வெளி யான கல்யாணப்பரிசு படத்தின் மூலம் ஸ்ரீதர் இயக்குநராக அறிமுகமானார். இந்த படத்தில் ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜய குமாரி ஆகியோர் நடித்திருந்த நிலையில், வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது.. இத்தனைக்கும் அப்போது எம்ஜிஆரும் சிவாஜியும் மிகப்பெரிய ஹீரோக்களாக கொடிகட்டாமலேயேப் பறந்தார்கள். ஆனால் அவர்களிடம் கால்ஷீட் கேட்கவில்லை ஸ்ரீதர். அன்றைய தேதியில், ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் என்று எவரையும் இசையமைக்க அழைக்கவில்லை.
படத்தின் நாயகனாக ஜெமினி கணேசனை வைத்துக் கொண்டார். அதுவரை பாடகர் என்று எல்லோருக்கும் தெரிந்த ஏ.எம்.ராஜாவை இசையமைப்பாளராக்கினார். காதல் காவியம் என்று ‘தேவதாஸ்’ பேசப்பட்டு வந்ததை, அப்படியே தன் படமாக மாற்றினார். காதல் பரிசாக, அதன் உன்னதம் சொன்ன ‘கல்யாண பரிசு’ கொடுத்தார். அது காதல் பரிசு, கல்யாண பரிசு மட்டுமா? தமிழ்த் திரையுலகிற்கு ஸ்ரீதர் தந்த முதல் பரிசு அது.
காதலின் அடையாளமாக ‘தாஜ்மஹால்’ இருப்பது போல், இங்கே, ‘வசந்தி’ கேரக்டரைப் பார்த்தது தமிழ்ச் சமூகம். எந்தப் பெயர் கொண்ட பெண்ணைக் காதலித்தாலோ ஆணைக் காதலித்து தோற்றிருந்து வேறொருவரை கல்யாணம் செய்துகொண்டாலோ... அவர்கள் ‘வசந்தி’ என்று பிறந்த பெண் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டி, காதலைப் போற்றினார்கள். ஐம்பதுகளின் இறுதியில் தொடங்கி அறுபதுகளின் நிறைவிலும் கூட, ஏராளமான ‘வசந்திகள்’ பிறந்தார்கள்.
ஸ்ரீதரின் ஆரம்பப்படங்கள் பலவற்றிலும் அவருடன் பணியாற்றியவர் வின்செண்ட் என்னும் ஒளிப்பதிவாளர். நெஞ்சில் ஓர் ஆலயம் என்னும் திரைப்படத்தில், முத்து ராமன் மற்றும் தேவி காவின் நடிப்பில் “சொன்னது நீதானா” என்னும் பாடல் படமாக்கப் பட்ட கோணங்களும், படத்தொகுப்பும் பெரிதும் பாராட்டப்பட்டன. காரணம் அதுவரை, கேமிரா ஆணி அடித்தது போல்தான் நிற்கும். நகருவதோ ஓடுவதோ படத்துக்கு ஐந்தாறு இருந்தாலே அபூர்வம். அப்படியே படம் முழுக்க நகர்ந்தாலும், கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் பேசுகிற வசனத்துக்கும் கேமிரா நகர்வுக்கு எந்தத் தொடர்பும் இருக்காது. ஆஸ்பத்திரி ரூம். படுக்கையில் இருக்கும் முத்துராமன். அதற்கு அருகில் தேவிகா. நாலரை நிமிஷத்துக்கு, பாட்டு முடியும் வரை இவர்கள் இருவரையும் காட்டவேண்டும். காட்சியின் கனத்தையும் சோகத்தின் கணத்தையும் பாடல் வழியேயும் கேமிரா வழியேயும் ஒளிப்பதிவாளர் வின்செண்டைக் கொண்டு உணர்த்திக் கொண்டே வருவார் ஸ்ரீதர். முத்துராமனிலிருந்து தேவிகா, தேவிகாவில் இருந்து முத்துராமன். ஜன்னலில் இருந்து தேவிகா. ஜன்னலில் இருந்து முத்துராமன். ஜன்னலில் இருந்து இருவரும். கட்டிலில் முத்துராமன். அதன்கீழே கேமிரா பார்வை பார்க்கும். அப்படியே தேவிகாவுக்கு வரும். பின்னர், இருவரையும் மேலிருந்து காட்டும். தேவிகாவையும் அங்கே இருக்கும் கண்ணாடியில் முத்துராமன் முகத்தையும் காட்டும். அந்த ‘சொன்னது நீதானா’ பாடலை இப்போது பார்த்தாலும் மிரண்டு வியப்போம்.
புதுமுகங்களை அறிமுகப் படுத்துவது மட்டும் அன்றி அவர்களைப் பிரபலமான நட்சத்திரங்களாக்குவதிலும் ஸ்ரீதரின் படங்கள் பெரும்பங்கு வகித்தன. சரோஜாதேவி (கல்யாணப் பரிசு), ரவிச்சந்திரன், காஞ்சனா (காதலிக்க நேரமில்லை), நிர்மலா, மூர்த்தி (வெண்ணிற ஆடை – இப்படமே இவர்களுக்கு இன்றளவும் அடைமொழியாகவும் இருந்து வருகிறது) ஆகியோர் ஸ்ரீதரால் அறிமுகமான நட்சத்திரங்கள்.
பாலிவுட்டிலும் ஸ்ரீதர் வெற்றிகரமான இயக்குனராக விளங்கினார். அவரது படங்களான கல்யாணப் பரிசு நஜ்ரானா என்னும் பெயரில் ராஜ்கபூர் , வைஜயந்தி மாலா நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நெஞ்சில் ஓர் ஆலயம் (ராஜேந்திர கபூர், ராஜ்குமார், மீனாகுமாரி நடித்த தில் ஏக் மந்திர்), காதலிக்க நேரமில்லை (சஷிகபூர், கிஷோர் குமார் நடித்த பியார் கியா ஜாயே) ஆகியவையும் ஹிந்தியில் மறுவாக்கம் செய்யப்பட்டு வெற்றிக் கொடி நாட்டின.
1960ஆம் ஆண்டுகளில் இறுதி வரை ஸ்ரீதர் குறிப்பிடத்தக்க பங்கினையளித்தார். நாடகபாணிக் கதைகளான கல்யாணப் பரிசு, விடி வெள்ளி போன்றவை தவிர, காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு, கலாட்டா கல்யாணம் போன்ற நகைச்சுவைப் படங்களையும் இயக்கிப் பெரும் புகழ் பெற்றார்.
ஸ்ரீதரின் திரைப்படங்களில் தனிச்சிறப்பாக அமைந்தவை அவற்றின் பாடல்கள். அவரது முதல் படமான கல்யாணப்பரிசு தொடங்கி இளையராஜா வுடன் அவர் இணைந்த இளமை ஊஞ்சலாடுகிறது, நினைவெல்லாம் நித்யா வரையிலான திரைப்படங்களில் பல பாடல்களுக்காகவே புகழ் பெற்றன.
ஸ்ரீதரின் படம் இப்படித்தான் இருக்கும் என்று கோடுகிழித்து, சட்டத்துக்குள்ளேயோ வட்டத்துக்குள்ளேயோ அடைத்துச் சொல்லிவிடமுடியாது. அந்தக் கோடுகளையும் சட்டத்தையும் வட்டத்தையும் தாண்டிச் சென்றார் ஸ்ரீதர். அதனால்தான் அவர் புதுமை இயக்குநர் என்று இன்றைக்கும் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கிறோம்.
அந்த கலங்கரை விளக்கத்துக்கு ஆந்தை சினிமா அப்டேட்ஸ் நினைவஞ்சலி செலுத்துகிறது.
by
The Desk of கட்டிங் கண்ணையா!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,