காமராஜர்’ என்ற பெயர் இருந்தால் அது பெரியார் வைத்த பெயராக இருக்கவே வாய்ப்பு அதிக
காமராஜரின் சிந்தையும் செயல்பாடுகளையும் தொடர்ந்து கவனித்த பெரியார், தனது கட்சிக்காரர்கள் வீட்டு குழந்தைகளுக்கு, ‘காமராஜர்’ என்று பெயரிடும் அளவிற்குச் சென்றார். இன்றும் தமிழகம் முழுவதும் 50 மற்றும் 60 வயதை கடந்தவர்களுக்கு, ‘காமராஜர்’ என்ற பெயர் இருந்தால் அது பெரியார் வைத்த பெயராக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
திராவிடர் கழகம் வலுவாக இருக்கும் கடைமடைப் பகுதிகளில்,” காமராஜர்” என்ற பெயர் அதிகமாக இருப்பதை காணமுடியும். தான் மதிக்கும் பெரியவர்களின் பெயரைத் தான் குழந்தைகளுக்கு வைப்பார்கள். ஆனால், பெரியார் தன்னை விட வயதில் குறைந்த காமராஜர் பெயர் வைத்திருக்கிறார் என்றால், காமராஜர் மீது பெரியார் வைத்திருந்த அன்பை அதன் மூலம் நாம் தெரிந்துக் கொள்ளலாம்.
காமராஜர் முதலமைச்சரானபோது, அவரது அமைச்சரவையில், பரமேஸ்வரன் என்ற பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் இந்து அறநிலையத்துறை அமைச்சரானார்.எந்த மக்களை கோவிலுக்குள் நுழைய சம்பிராதாயங்கள் தடைவிதிக்கிறதோ,! அந்த சமூகத்தைச் சேர்ந்தவரை, இந்து அறநிலையத்துறை அமைச்சராக்கி அழகு பார்த்தார் காமராசர். அந்த தருணத்தில்,காமராஜரை ஆதரித்தது வீண் போகவில்லை என்று பெரியார் பெரு உவகை கொண்டார்.
காமராஜரை பெரியார் ஆதரித்தது ஏன்?
காமராஜர் தன்னுடைய முதல் அமைச்சரவையை பிராமணரல்லாதார் அமைச்சரவையாக அமைத்திருந்தார். காங்கிரசு ஆட்சியில் அப்படி ஒரு அமைச்சரவை அமைப்பது அவ்வளவு சுலபமல்ல. காமராஜரின் இந்த துணிச்சல் பெரியாரை காமராஜருக்காக இன்னும் வீரியமாக பேச வைத்தது. “பச்சைத் தமிழன் “ காமராஜர் ஆட்சி தொடர வேண்டும் என தேர்தல் களத்தில் தொடர்ந்து முழங்கினார்.
காமராஜர் மூன்று முறை முதல்வரானபோதும், அவருக்காக பிரச்சாரம் செய்தவர் பெரியார். 63ஆம் ஆண்டு, கே பிளான் திட்டத்தில் காமராஜர் பதவி விலகியபோது, அதனைக் கண்டித்த ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. காமராஜர் தமிழகத்திற்கு தேவை என்று நினைத்த காங்கிரஸ் எதிர்ப்பாளர் பெரியார்.
காமராஜர் தேசிய அரசியலுக்குச் சென்ற பிறகும், பெரியாரின் ஆதரவு தொடர்ந்தது. 67ஆம் ஆண்டு தேர்தலில், காமராஜருக்கு எதிராக, ஏழு கட்சிக் கூட்டணி அமைத்து போட்டியிட்டார் அண்ணா. காமராஜருக்கு ஆதரவாக களத்தில் இருந்த ஒரே கட்சி பெரியாரின் திராவிடர் கழகம் மட்டுமே .
சத்தியமூர்த்தி அய்யர் என்னும் வைதீகப் பற்றாளரால் அரசியல் களத்திற்குள் நுழைந்தாலும், பின்னாளில் பெரியார் என்னும் சமூக நீதி காந்தத்தால் ஈர்க்கப்பட்டு அரசியல் களம் அமைத்தார் என்பதே காமராஜரின் வரலாறு. பெரியாருடன் கொண்ட நட்பு ஒரு போதும் அவரது காங்கிரஸ் கொள்கைகளிலிருந்து பின்வாங்கச் செய்யவில்லை. அதே சமயம் தனிநாடு கேட்ட பெரியாரும் தனது கொள்கைகளை காமராஜருக்காக சமரசம் செய்து கொள்ளவில்லை.
பெரியாரின் நோக்கம் அரசியல் களத்தை ராஜாஜி போன்ற வைதீகர்களிடமிருந்து காமராஜர் போன்ற எளிய மனிதர்களிடம் சேர்க்க வேண்டும் என்பதுதான். அன்று விழ ஆரம்பித்த ராஜாஜிக்களால், இன்று வரை எழ முடியவில்லை என்பதே தமிழக அரசியல் வரலாறு. அந்த வகையில், பெரியார் காமராஜரை ஆதரித்தது பெரியாரின் கொள்கைக்கு கிடைத்த வெற்றிதான்.
Comments