யார் இந்த லா.ச.ராமாமிர்தம்? நவீன தமிழ் எழுத்தின் தீவிரமான பகுதி பெரும்பாலும் வெகுமக்களின் ரசனை எல்லைக்கு வெளியில்தான் இருந்துவருகிறது. இதில் பல அம்சங்கள் புரிவதில்லை என்பது பெருவாரியான மக்களின் புகார். அத்தகைய புரியாத எழுத்தின் முதன்மையான உதாரணங்களில் ஒருவராக லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் அடையாளம் காணப்படுகிறார்.
சொற்கள் புரியவில்லை என்றால் அகராதியைப் பார்த்துத் தெரிந்துகொண்டுவிடலாம். வாக்கியங்களே புரியவில்லை என்றால்? ‘கண்ணின் இமையுள், விழிப்பின் முதல் உணர்வாய்க் கவிந்த இருள்
முழுவே உனக்கு அஞ்சலி’ என்று ஒரு கதை (த்வனி) தொடங்கினால் எப்படி இருக்கும்? ‘கண்ணாடியில் பிம்பம் விழும் த்வனிகூட எனக்குக் கேட்கிறது’ என்று சொன்னால் அதை எப்படிப் புரிந்துகொள்வது? ஆனால், இதுபோன்ற வாக்கியங்களில் இருக்கும் வசீகரமே லா.ச.ரா-வைப் புரியாமலும் பலரைப் படிக்க வைக்கக்கூடியதாகவும் இருக்கிறது. அச்சத்தை மீறிப் பாம்பின் அழகு நம்மைக் கவர்வதுபோல.
இரண்டாயிரம் பக்கங்களுக்கு மேல் விரியும் லா.ச.ரா-வின் எழுத்தில் சரி பாதிக்கு மேல் அடிப் படைத் தமிழ் அறிவுகொண்ட எவரும் படித்துப் புரிந்து கொள்ளக்கூடியதுதான். மீதிப் பகுதியில் பெரும் பாலானவை புரியாத நிலையிலும் வசீகரிக்கக் கூடியவை; ரசித்துப் படிக்கக்கூடியவை. ‘இது இருளின் நரம்பு, எண்ணத்தின் மணிக்கயிறு, வானத்தின் நீளத்தினின்று உரித்த பொற்சரடு’ என்பன போன்ற மயக்கும் படிமங்கள் புரியாதவை என்று சொல்வதை விடவும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பொருள் தரக்கூடியவை என்று சொல்வதே பொருத்தம்.
புரியாத நிலையிலும் மந்திரம்போல மனதில் ஒட்டிக் கொள்ளும் மாயமே லா.ச.ரா-வின் சிறப்பு. புரிவதும் புரியாததும் தற்காலிக நிலைகள். ஒரு விஷயத்தை இன்று புரிந்துகொள்ளும் விதம் நாளை மாறலாம். ஆனால், லா.ச.ரா-வின் மந்திரச் சொற்கள் தரும் மயக்கம் நீடித்து நிற்கும்.
- அரவிந்தன்
நன்றி: இந்து தமிழ் திசை
Comments