பூவாசம் புறப்படும் பெண்ணே


 தலைப்பிரசவத்துக்காக மனைவியை மருத்துவமனையில் அனுமதித்துவிட்டு, விடுமுறை விண்ணப்பம் எழுதிக் கொடுக்க அலுவலகம் சென்ற அந்தக் கவிஞருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. தொலைபேசியில் பேசிய இயக்குநர் “யோவ்… அட்லான்ட்டிக் ஹோட்டல் ரூம் நம்பர் 410-க்கு உடனே கிளம்பி வா” என்று அணைகிறது அந்தக் குரல். அம்மாவிடம் மனைவியைப் பார்த்துக்கொள்ளும்படி சொல்லிவிட்டு விரைகிறார் அந்தக் கவிஞர்.

“இவர்தான் நான் சொன்ன கவிஞர்” என இசையமைப்பாளரிடம் அறிமுகம் செய்துவைக்கிறார் இயக்குநர். `மாலை நேரத்தில் ஒரு லட்சியவாதி பாடும் பாட்டு’ எனக் காட்சியைச் சொல்லி, “மெட்டுக்கு எழுதுவீங்களா?” என்று நம்பிக்கையின்றி கவிஞரிடம் கேட்கிறார் இசையமைப்பாளர். கவிச்செருக்குடன்கூடிய தமிழ்த் திமிரில் “மெட்டைச் சொல்லுங்க, முயற்சி செய்வோம்” என்று பதிலளிக்கிறார் கவிஞர். மெட்டு வாசிக்கப்படுகிறது. கவிஞர் யோசிக்கிறார். அவர் யோசிப்பதைப் பார்த்த இசையமைப்பாளர் “நாளை சந்திக்கலாம். போயிட்டு வாங்க” என்று சொல்கிறார். சிறிதும் நேரம் கொடுக்காமல் “கொஞ்சம் பொறுங்கள். பல்லவி வந்துவிட்டது, சொல்லட்டுமா… பாடட்டுமா” என்று கேட்கிறார் கவிஞர். ஆச்சர்யத்துடன் பாடச் சொல்ல, மனதில் உதித்த வரிகள் ஒலியில் பதிவுசெய்யும் முன் கவிஞரின் குரலிலேயே பாடலாக ஒலிக்கிறது. முழு பாடலையும் எழுதிக் கொடுத்ததும் அந்த இளம் கவிஞனை அணைத்துக்கொள்கிறார் இசையமைப்பாளர்.
அந்த அறையில் ஒலித்த பாடல் `பொன்மாலைப் பொழுது… இது ஒரு பொன்மாலைப் பொழுது’. மேலே சொன்ன இயக்குநர், இசையமைப்பாளர், கவிஞர் யாரெனச் சொல்லித் தெரிய தேவையில்லை. ஒரு வரலாற்றின் முதல் அத்தியாயத்தின் கதை மாந்தர்கள் இவர்கள். பாரதிராஜாவின் இயலுக்கும் இளையராஜாவின் இசைக்கும் வைரமுத்துவின் பேனா எழுதத் தொடங்கிய நாள் அது.
“நான் விதைத்தேன். அது உயர்ந்த விருட்சமானது” என்று அறிமுகம் செய்துவைத்த இயக்குநர் பாரதிராஜா சொல்வார். அந்த விதையின் வீரியம்தான் தமிழ் சினிமாவின் பாடல்களில் கவிதைத் தரத்தை உயர்த்தியது எனச் சொன்னால் அது மிகையல்ல. வைரமுத்து மிகச்சிறந்த கவிஞர், நாவலாசிரியர், பாடலாசிரியர் என்பதையெல்லாம் தாண்டி, அவர் ஓர் ஆகச்சிறந்த ரசிகர். மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு ரசிக்கிறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவன் இளமையாகிறான். கபிலனும் கார்க்கியும் எழுதிக்கொண்டிருக்கும் இந்நாளில் `கள்ளக் காமுகனே…’ என்று அவரால் எழுத முடிகிறதென்றால், அதுதான் அவருடைய ரசனையின் உச்சம்.
வைரமுத்துவின் கல்லூரிக் காலத்தில் ஒரு மாணவி, தான் வரைந்த ஓவியத்தை வைரமுத்துவிடம் காண்பித்து கருத்துக் கேட்டிருக்கிறார். அந்த ஓவியத்தின் கீழே ஒரு கவிதை எழுத்தி, கையெழுத்திட்டிருக்கிறார் வைரமுத்து.
`நீ
இனிமேல் நெருப்பை ஓவியமாய் வரையாதே.
தூரிகை தீப்பிடித்துவிடப்போகிறது.’
இந்தக் கவிதைதான் ‘அன்பே சிவம்’ படத்தின் `பூவாசம் புறப்படும் பெண்ணே…’ பாடலில் பல்லவியாக மாறியது.
`பூவாசம் புறப்படும் பெண்ணே நான் பூ வரைந்தால்
தீ வந்து விரல் சுடும் கண்ணே நான் தீ வரைந்தால்…’
அந்த ஓவியம் வரைந்த பொன்மணி என்கிற மாணவிதான் கவிஞருக்கு மனைவியானார்.
நன்றி: விகடன்

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி