தெரிஞ்சுக்கலாம் வாங்க!*

 


தெரிஞ்சுக்கலாம் வாங்க!*


நன்றி குங்குமம் ஆன்மிகம்


*‘‘தெய்வ நாமத்தை, நம்பிக்கையோடு சொல்! நலம் பெறுவாய்!’’ என்பார்கள். இதன் பொருள் என்ன? நம்பிச் சொன்னாலும் சரி! நம்பாமல் சொன்னாலும் சரி! சொல்லும் தெய்வநாமம், ஒரு போதும் பலனளிக்கத் தவறாது. பிறகு ஏன் அப்படிச் சொன்னார்கள்?


ஒரு எளிமையான உதாரணம்; தங்கம், யார் கையில் இருந்தாலும் தங்கம் தங்கம்தான். விவரம் தெரியாத ஒரு குழந்தை, ஒரு பவுன் தங்க மோதிரத்தை அண்ணாச்சி கடையில் தந்து, ‘‘அண்ணாச்சி, எனக்கு மிட்டாய் கொடு!’’ எனக் கேட்பதாக வைத்துக்கொள்வோம். அந்தக் குழந்தைக்கு தங்கத்தைப்பற்றித் தெரியாது. ஏதோ, அம்மா தன் கையில் போட்டிருந்ததை அண்ணாச்சியிடம் தந்து, மிட்டாய் கேட்டது. விவரம் தெரிந்த பெரியவர்கள், தங்க மோதிரத்தைத் தந்து மிட்டாயா கேட்பார்கள்? தங்கத்தின் உயர்வை அறிந்து, தகுந்தவாறு செயல்பட்டு, உயர்ந்தான பலன்களைப் பெறுகிறார்கள் அல்லவா? அது போல, தெய்வ நாமாவின் உயர்வை அறிந்து தகுந்தவாறு செயல்பட்டால், உயர்ந்ததான பலன்களைப் பெறலாம். இல்லாவிட்டால், மோதிரத்தைக் கொடுத்து மிட்டாய் கேட்ட குழந்தையைப் போலத்தான்.


இதைத்தான், ‘‘நம்பிக்கையோடு சொல்லு’’ என்றார்கள். அதாவது, பொருள் உணர்ந்து சொல்வது - செயல்படுவது. உணரலாம். செயல்படலாம் வாருங்கள்! ஆதி சங்கரர் சிறு வயதில் குருகுல வாசம் செய்த காலத்தில், ஒருநாள்...  சீடர்களுக்கு உண்டான வழக்கப்படி, பிட்சைக்குச் சென்றார்கள். ஒரு வீட்டின்  வாசலில் நின்று, குரல் கொடுத்தனர். அந்த வீட்டில் எந்த வசதியும் இல்லை.


வறுமை மட்டுமே இருந்தது. வீட்டுக் காரப் பெண்மணி பார்த்தார்; வருந்தினார்;  ‘‘இன்று துவாதசி! நேற்று ஏகாதசி! குருகுல வாசம் செய்யும் இந்தச் சிறு  குழந்தை, நேற்று ஏகாதசிக்காக உபவாசம் (சாப்பிடாமல்) இருந்திருக்கும். இன்று  துவாதசி; குறிப்பிட்ட நேரத்திற்குள் இந்தக் குழந்தை உணவு உண்ண வேண்டும்.  இப்படிப்பட்ட நிலையில் இந்தக் குழந்தையின் பசி தீரும்படியாக, கொடுக்க  என்னிடம் ஒன்றும் இல்லையே!’’ என்று வருந்தினார். வருந்தியவர், வீட்டில்  இருந்த நெல்லிக்கனிகள் இரண்டை, ஆதிசங்கரரின் பிட்சைப் பாத்திரத்தில் இட்டார்.


இப்படிப்பட்ட உள்ளம் ஏழ்மையால் வருந்தலாமா? உண்மையை உணர்ந்த ஆதிசங்கரர் லட்சுமி தேவியைத் துதித்து, ‘கனகதாரா’ தோத்திரம் பாடி வேண்டினார். அன்னை  மகாலட்சுமி தங்க நெல்லிக்கனிகளை மழையாகப் பொழிந்து, அந்த ஏழையின் வீட்டில்  இருந்த ஏழ்மையை விரட்டினார். அந்தப் பெண்மணியைப் போல, உணர்ந்து செயல்படுவோம்! அன்போடு செயல் படுவோம்! அல்லல்கள் நீங்கும்!


*கடும்பாடி அம்மன்! சில சமயம் புது வாகனங்கள் வாங்குபவர்கள், வாகனத்துடன் இந்த கோயிலுக்குச் சென்று, புதுவாகனத்திற்குப் பூஜை போடுவார்கள். மற்றபடி, மற்ற கோயில்களுக்குச் செல்வதைப் போல, கடும்பாடி அம்மன் கோயிலுக்குச் செல்வதில்லை; வாகனப் பூஜைக்காக மட்டுமே செல்வார்கள். இதன் உண்மை?


கடம்ப அடவியில் - கடம்ப வனத்தில் எழுந்தருளியிருக்கும் அம்பிகை ‘கடம்பாடவி அம்மன்’ என அழைக்கப்பட்டார். மதுரை மாநகருக்கு ‘கடம்ப வனம்’ என்ற பெயரும்  உண்டு. அங்கே எழுந்தருளியிருக்கும் அம்பிகைக்கு `மீனாட்சி’ என்ற திருநாமம் சொல்லப்படும். கடம்ப வனத்தில் எழுந்தருளியிருக்கும் அந்த அம்பிகையே ‘கடம்பாடவி அம்மன்’. கடம்பாடவி அம்மன் எனும் வார்த்தை மருவி, ‘கடும்பாடி அம்மன்’ என ஆகிவிட்டது.


ஆகையால், கடும்பாடி அம்மன் கோயில் என்று அழைக்கப்படும், கடம்பாடவி அம்மன் கோயிலுக்கு, வாகனப் பூஜைக்கு என்று மட்டுமில்லாமல், வாகனங்கள் இல்லாமலும் சென்று வழிபடலாம். வளம் அருள்வாள் அன்னை. இவ்வாறு உணர்ந்து செயல்பட்டு, திருமகளின் அருளை மழையாகப் பெற்ற வரலாறுதான், ‘கனக தாரா’ தோத்திரம்.


தொகுப்பு: V.R.சுந்தரி...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,